Raju Murugan Habeebi
கோலிவுட் செய்திகள்

இலக்கியம், அரசியலில் உள்ள இஸ்லாமியர்களின் பங்கு சினிமாவில் ஏன் இல்லை? - ராஜூ முருகன் | Raju Murugam

தொடர்ந்து நல்ல சினிமாவுக்கும் வியாபாரத்துக்கு இடையே அவர் போராடுவதை நானும் யுகபாரதி அண்ணனும் பார்த்துக் கொண்டே இருப்போம்.

Johnson

மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரிராஜா நடித்து வெளியான படம் `ஹபீபி'. இப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் ராஜூ முருகன், "காலையில் இருந்து சட்டசபை லைவ் பார்த்து நான்கைந்து பாலகிருஷ்ணா படம் பார்த்ததுபோல இருந்த மனநிலையை, ஓர் அமைதியான ’ஹபீபி’ நிகழ்வுக்கு அழைத்ததற்கு நன்றி. மீரா எனக்கு பல வருடங்களுக்கு முன்பு பழக்கம். அடூர், அரவிந்தன், பத்மராஜனை பேசிக் கொண்டிருந்த ஒரு நண்பனாகதான் அவரைத் தெரியும். அப்படிப் பேசும் பல தோழர்கள், அவர்கள் பேச்சுக்கும் வேலைக்குமான இடைவெளியை பிற்காலத்தில் நான் உணர்ந்தேன். ஆனால், அவர் பேச்சில் இருந்த விஷயங்களை இன்றுவரை செய்யும் மீராவை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அவர் படங்கள் பெரிதாகப் போகவில்லை என்றாலும், ’அவள் பெயர் தமிழரசி’ மிக முக்கியமான படம், ஆனால் முழுமையடையாமல் போய்விட்டது. அதேபோல்தான் இரண்டாவது படமும். தொடர்ந்து நல்ல சினிமாவுக்கும் வியாபாரத்துக்கு இடையே அவர் போராடுவதை நானும் யுகபாரதி அண்ணனும் பார்த்துக்கொண்டே இருப்போம். அந்த அவஸ்தையை நாங்களும் அனுபவித்திருக்கிறோம். ஒருநாள் அவர் வெற்றி அடைவார் என நாங்கள் நம்பினோம். அதை ’ஹபீபி’ பூர்த்தி செய்திருக்கிறது.

’ஹபீபி’ பார்த்துவிட்டு யுகபாரதி அண்ணனுக்கு போன் செய்து பேசினேன். ’ரொம்ப நல்ல படைப்பு’ என்று சொன்னேன். இதற்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்பதுதான் என்னுடைய ஆவலாக இருந்தது. படம் வந்து நல்ல விமர்சனங்கள் வந்த பின்னர்தான் எனக்கு மகிழ்வாக இருந்தது.

Raju Murugan

நான் ’ஹபீபி’யை எப்படிப் பார்க்கிறேன் என்றால், தமிழ் இலக்கியத்தில் இஸ்லாமியர்களுக்கு பெரிய பங்கு இருக்கிறது. அரசியலிலும் பங்கு இருக்கிறது. ஆனால் சினிமாவில் மட்டும் நடக்காமல் போய்விட்டதே என நினைத்தேன். அது இப்போது அவர்களை மனிதர்களாக காட்டிய ’ஹபீபி’ மூலம் நடந்திருக்கிறது" என்றார்.