ஹெச் வினோத், 'மை லார்ட்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில், அரசியல் மற்றும் சமூக சிக்கல்களை பேசினால் யாரும் காப்பாற்ற வரமாட்டார்கள் என கூறினார். அவர் பணம் பற்றிய பார்வையை தனது வாழ்க்கை அனுபவங்களின் மூலம் விளக்கினார். நல்லவர்கள் அரிதாகிவிட்டார்கள் என்பதையும், மனிதநேயத்தை பற்றி தொடர்ந்து பேச வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
சசிக்குமார், சைத்ரா நடிப்பில் ராஜூமுருகன் இயக்கி பிப்ரவரி 13ம் தேதி வெளியான படம் `மை லார்ட்'. இப்படத்தின் புரமோஷன் நிகழ்வாக சமுத்திரக்கனி, பாண்டிராஜ், ராஜூமுருகன், ஹெச் வினோத் ஆகியோர் உரையாடல் ஒன்றை நிகழ்த்தினர். அதில் ஹெச் வினோத் பேசிய போது " `மை லார்ட்' படத்தில் பல ஆயிரம் வருடங்களாக இருக்கும் அரசியல் இருக்கிறது. அவற்றை எல்லாம் நான் பேசுவதில்லை. இந்தப் படத்தில் முத்துசிற்பி கதாபாத்திரம் பாதிக்கப்படும் போது தமிழ்க்குத்து பத்திரிகையாளர் வந்து காப்பாற்றுவார். அதுவே நான் பேசினால் காப்பாற்ற யாரும் வர மாட்டீர்கள்." எனக் கூறினார்.
மேலும் "சதுரங்கவேட்டை படத்தில் பணத்தை மறுப்பதாக முடித்திருப்பீர்கள். பணம் பற்றிய இந்த பார்வை எப்படி வந்தது?" எனக் கேட்கப்பட "வாழ்க்கை அனுபவங்களில் இருந்துதான். நான் உதவி இயக்குநராக இருந்த போது, எப்போதும் பசி இருந்தது, ஆனால் சாப்பாடு இல்லை. இப்போது சாப்பாடு இருக்கிறது பசி இல்லை. இது இருந்தால் எல்லா பிரச்சனையையும் சமாளிக்கலாம் என நாம் நினைப்பது பணத்தை தான். பணம் என்பது ஒரு விஷயம் இல்லை என சொல்லி புரியவைக்க முடியாது. அதை வாழ்ந்து மட்டும்தான் புரிய வைக்க முடியும்.
பிறரின் அனுபவம் கேட்டு புரிந்து கொள்வார்கள் சிலர், நாங்கள் வாழ்ந்து பார்த்து தெரிந்து கொள்கிறோம் என சொல்பவர்களும் இருப்பார்கள். அந்தப் பாதைகளை நாம் மாற்ற முடியாது. போலவே சொல்வதையும் நிறுத்த முடியாது. வாழ்க்கையில் பெரிய சொத்து ஆரோக்யமும், உன்னை சுற்றியுள்ள மனிதர்களும் தான் என தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அவன் தேடி வருவான். சொல்பவர் சோர்வடைந்து படுத்துவிட்டால், அவன் யாரிடம் கேட்பான்? எனவே அன்பை, மனிதநேயத்தை, சட்டத்தை பற்றி தொடர்ந்து சொல்ல வேண்டி இருக்கிறது.
நல்லவர்கள் எல்லோரும் இப்போது அரிதானவர்கள் ஆகிவிட்டார்கள். தூய்மைப்பணியாளர் ஒருவர் நகையை திருப்பி கொடுத்ததற்கு ரஜினி உட்பட பலரும் அழைத்து பாராட்டுகிறார்கள். ஒருவர் நல்லவராக, கருணையானவராக, பேராசைப்படாதவனாக, கீழ்மையான குணங்கள் இல்லாமல் இருப்பது அது இன்று அபூர்வமான குணமாகிவிட்டது. அதனை இந்தப் படம் பேசி இருக்கிறது." என்றார் ஹெச் வினோத்.