நடிகர் ஜெய், ‘சட்டென்று மாறுது வானிலை’ பேட்டியில், ‘சுப்ரமணியபுரம்’ வெற்றிக்குப் பிறகு கௌதம் மேனன் முதலில் அழைத்து ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததாக கூறுகிறார். ஆனால் அதற்கு முன்பே மூன்று படங்களில் ஒப்பந்தமாகி, ஒரு வருடம் காத்திருந்த இயக்குநர்களை விட்டு செல்ல சுயநலமாக இருக்கும் என நினைத்து, அந்த வாய்ப்பை மரியாதைக்காக துறந்ததாக விளக்குகிறார்.
நடிகர் ஜெய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் `சட்டென்று மாறுது வானிலை'. இப்படம் தொடர்பான பேட்டி ஒன்றில் `விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் நடிக்க கௌதம் மேனன் தன்னை அணுகியது பற்றியும், ஏன் அதில் நடிக்கவில்லை என்பது பற்றியும் பேசியுள்ளார். அது குறித்து கூறுகையில் "சுப்ரமணியபுரம் படத்துக்கு பின் நானும் அவரும் சந்தித்தோம். படம் வெளியான பின்னர் என்னை அழைத்து பேசிய முதல் இயக்குநர் அவர் தான்.
த்ரிஷா ஹீரோயின், ஒரு காதல் கதை, இசையமைப்பாளர் இன்னும் முடிவு செய்யவில்லை, இன்னும் மூன்று மாதங்களில் முடிவு செய்துவிடுவோம். இத்தனை நாள் படப்பிடிப்பு இருக்கும், உங்களுக்கு சம்மதம் என்றால் சொல்லுங்கள் என்று சொன்னார். ஆனால் அவரை நான் சந்திக்கும் முன்பு இன்னும் சொல்லப்போனால் சுப்ரமணியபுரம் ரிலீசுக்கு முன்பே ஒரு மூன்று படத்தை நான் கமிட் செய்து வைத்திருந்தேன். அவர்கள் எல்லோரும் ஒருவருடம் காத்திருந்தார்கள். இவ்வளவு நாள் காத்திருந்த இயக்குநர்களை விட்டுவிட்டு, எனக்கு பிடித்த இயக்குநர் என்பதால் அவருடன் சென்றால் சரியாக இருக்காது என தோன்றியது.
அதனால் தான் அந்தப் படத்தை என்னால் நடிக்க முடியவில்லை. அதே சமயம் VTV படத்தை ஒருவர் மிஸ் செய்ததால் யாருக்கு தான் வருத்தம் இருக்காது. ஆனால் எனக்கு என்ன திருப்தி என்ன என்றால், நான் சுயநலமாக முடிவெடுக்கவில்லை என்பது. அப்படி சொல்லி என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன். ஆனால் `விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் நான் நடிப்பதை விடவும் அந்த ஜோடி தான் அழகாக இருந்ததாக எனக்கு தோன்றியது." என்றார் ஜெய்.