அபின் ஹரிஹரன் இயக்கத்தில் ஆதித்யா மாதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன் நடிப்பில் உருவாகியுள்ள படம் `அதர்ஸ்'. இப்படம் நாளை திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு அக்டோபர் 30ம் தேதி நடைபெற்றது. அப்போது ஒரு யூட்யூபர் கேட்ட கேள்வி இப்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.
அந்த செய்தியாளர் சந்திப்பின் பொது ஒரு யூட்யூபர் "இந்தப் படத்தின் பாடலில் ஹீரோயினை தூக்கினீர்களே, எவ்வளவு வெயிட் இருந்தார்?" எனக் கதாநாயகன் ஆதித்யா மாதவனிடம் முன்வைத்தார். அப்போது அந்தக் கேள்வியை ஆதித்யா மாதவன் "நான் நிறைய உடற்பயிற்சி செய்வதால், எனக்கு அவர் வெயிட்டாக தெரியவில்லை" என சொல்லிக் கடந்தார். இதன் பிறகு படம் சார்ந்த ஒரு பேட்டியின் போது இந்த சம்பவம் ஒரு கேள்வியாக முன்வைக்கப்பட்ட போது அதற்கு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் கௌரி கிஷன்.
இதில் "அங்கு அந்தக் கேள்வி கேட்கப்பட்ட போது, இன்னுமும் இப்படி கேள்வி கேட்கிறார்களா என உறைந்து போனேன். ஆனால் அதற்கு நான் பதில் கூறி இருக்க வேண்டும். அவர் என்னை மரியாதை குறைவாக நடத்தினார். ஆனாலும் நான் மரியாதையாகவே பதில் சொல்ல நினைத்தேன். அப்படியான கேள்வி ஏன் கேட்கிறார்கள் என தெரியவில்லை. இந்தப் படத்தில் நான் என்ன செய்திருக்கிறேன் என்பது பற்றி எந்த கேள்வியும் கேட்கவில்லை. ஒரு ஆணாக இருப்பதால் அப்படி கேட்க முடிகிறதா? பத்திரிகையாளர் என்றால் அந்த சக்தி இருக்கிறது என நினைக்கிறார்களா?
நானும் ஒரு ஜனர்னலிசம் மாணவிதான். எனக்கு அது மிகவும் அருவருப்பாக இருந்தது. அப்போது நான் என் மனதில் `வெயிட்டு சொல்லனுமா? நான் பதிலுக்கு அவரின் வெயிட்டை கேட்டிருந்தால் அவர் சொல்வாரா. அது முக்கியவும் முட்டாள்தனமாக இருந்தது. அதற்கு நான் எதிர்வினையாற்றி இருந்தால், அது என்னுடைய தரத்தை குறைக்கும். சில பேரிடம் பேசுவது, சுவற்றை பார்த்து பேசுவது போல தான். எனக்கு ஒரே வருத்தம் தான், அந்தக் கேள்வியை அவரை இன்னொரு முறை கேட்க சொல்லி இருந்தால், அவரே கேட்டிருக்க மாட்டார். ஆனால் இப்போது நாளை அவர் இந்தக் கேள்வியை இன்னொரு நடிகையிடம் கேட்பார். இந்த நிலையை இன்னொருவர் சந்திக்கக் கூடாது. அது sexualized, body shaming. நான் கதாபாத்திரத்திற்கு என்ன செய்தேன் என்பதை மதிக்காமல், நீ ஒரு பெண் கலராக ஆடை அணிந்து வந்திருக்கிறாய். எனக்கு தகுதி இவ்வளவு தான் என நினைத்ததாக தோன்றியது. அதை நேரடியாக சொல்லவில்லை என்றாலும், இந்த சமூகத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. இந்த வீடியோவை அவர் பார்க்கிறார் என்றால், அவரிடம் இதை சொல்ல நினைக்கிறேன். நீங்கள் செய்தது மிகவும் தவறு. இதை வேறு யாருக்கும் செய்யாதீர்கள். மூளையே இல்லாதவர் பேசியதை போல பேசி இருந்தார்." எனக் கூறி இருந்தார் கௌரி கிஷன்.
இந்த நிலையில் இன்று `அதர்ஸ்' படத்தின் பத்திரிகையாளர் காட்சி நடைபெற்றது. படம் முடிந்த பின்னர் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் உடல் எடை தொடர்பான கேள்வியை கேட்ட அந்த பத்திரிகையாளர், "நான் என்ன தப்பாக கேட்டேன்" என கேட்க "அன்று ஹீரோவிடம் அவர்களை தூக்கினீர்களே எவ்வளவு வெயிட் என கேட்டீர்கள். அது body shaming. என்னை நடிக்க வைப்பது இயக்குநரின் தேர்வு. அதைக் கேட்க நீங்கள் யார்? நான் உங்களிடமே சொல்கிறேன், அது ஒரு முட்டாள்தனமான கேள்விதான்" எனக் கூறி இந்த வாக்குவாதம் முற்றும் போது, அனைவரையும் நோக்கி "இந்தக் கேள்வியை ஒரு ஹீரோவிடம் இவர் கேட்பாரா? நான் இங்கு இருக்கும் ஒரே பெண். சுற்றி இத்தனை பேர் இருக்கிறீர்கள், ஒரு பெண் கூட இல்லை, இப்படி கத்துகிறார். ஒரு பெண் என்பதால் என்னை டார்கெட் செய்து கேள்வி கேட்கிறார். யாரும் அதற்கு கேள்வி எழுப்பமாட்டீர்களா" எனக் கேட்டார். தொடர்ந்து தன் தரப்பில் உள்ள நியாயத்தை பேசிய கௌரி கிஷன் செய்தியாளர் சந்திப்பு முடிந்து மௌனமாக புறப்பட்டு சென்றார்.