சூர்யா நடிப்பில் வெளியான `விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய சூர்யா "வெங்கி அட்லூரி, தயாரிப்பாளர் வம்சி என இருவரும் தெலுங்கு மாநிலங்களில் இருந்து வந்திருக்கிறார்கள்; நான் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறேன். மமிதா கேரளாவில் இருந்து, ரவீனா மேடம் மகாராஷ்டிராவில் இருந்து வந்திருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் வெவ்வேறு மொழிகளைப் பேசுபவர்கள்தான். ஆனால் நீங்கள் அந்த எல்லைகள் அனைத்தையும் அழித்துவிட்டீர்கள். `இது ஒரு நல்ல திரைப்படம், இது மனதிற்கு நெருக்கமான ஒரு உணர்வு' என்று கூறி இந்த குடும்பக் கதையை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். குடும்ப கதைகளுக்கு நீங்கள் உயிர் கொடுத்திருக்கிறீர்கள். என் முந்தைய படம் வேறு ஜானராக இருந்தாலும், இந்தப் படத்துக்கும் நீங்கள் வந்து ஆதரவு தந்திருக்கிறீர்கள்.
வெங்கி நீங்கள் இந்தப் படம் ஏற்கப்படும் என மற்றும் இது முக்கியமான படம் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள். ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது, விற்பனையாகும் டிக்கெட் எண்ணிக்கையிலோ அல்லது வசூல் கணக்கிலோ இல்லை. திரைப்படம் முடிந்து வெளியே வரும்போது மக்கள் பேசும் உரையாடல்கள், அவர்களின் மனங்களில் தங்கும் உணர்வுகள், அவர்களின் கண்ணீர் மற்றும் சிரிப்பில்தான் உண்மையான வெற்றி இருக்கிறது. அவற்றை வரவு செலவு கணக்கில் சேர்க்க முடியாது. நிச்சயமாகப் பணம் முக்கியம்தான், ஆனால் இரண்டு வருடங்கள் கழித்தும் இந்தப் படத்தைப் பற்றிப் பேசுவார்கள். அந்த உணர்வுதான் மிகவும் முக்கியமானது.
இந்தக் கதையில் ரவீனா மேடம், ராதிகா மேடம், மமிதா எனப் பெண்களுக்கான கதாபாத்திரங்களை அவ்வளவு அழகாக வடிவமைத்திருக்கிறார்கள். அதற்காகவும், இந்தக் கதாபாத்திரங்களைக் கொண்டாடுவதற்காகவும் திரையரங்கிற்கு வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி. ஆக்ஷன் திரைப்படங்கள் ட்ரெண்டில் இருக்கும் இந்தக் காலத்தில், குடும்ப படம், உறவுகளை பற்றி பேசும் படத்துக்கு ஆதரவு தந்ததற்கு நன்றி. உலகம் முழுக்க இருக்கும் ரசிகர்களுக்கும் பெண் ரசிகர்களுக்கும் நன்றி" என்றார்.