VTV Ganesh Jana Nayagan
கோலிவுட் செய்திகள்

ஜனநாயகனை தியேட்டரில் தான் பார்ப்போம் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்! - விடிவி கணேஷ்

`கான் சிட்டி' திரைப்படம் நல்ல வசூலைப் பெற்று வெற்றி பெற்றிருப்பது மிகப்பெரிய சாதனை. அந்த வெற்றி, நல்ல உள்ளடக்கம் கொண்ட படங்களுக்கு ரசிகர்கள் இன்னும் திரையரங்கிற்கு வரத் தயாராக இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கிறது.

Johnson

‘கான் சிட்டி’ வெற்றி விழாவில் விடிவி கணேஷ், ஹரீஸ் துரைராஜின் பல்துறை திறமையும் திட்டமிடலுமே வெற்றிக்குக் காரணம் என பாராட்டினார். ஓடிடி, விநியோகம் உள்ளிட்ட அனைத்தையும் புரிந்த இயக்குநரின் நேர்மைக்கு ஐஃபோன் பரிசு சம்பவத்தை எடுத்துக்காட்டினார். லீக் ஆன ‘ஜனநாயகன்’ படத்தையும் தீவிர ரசிகர்கள் தியேட்டரில் பார்க்க காத்திருக்கிறார்கள் என கூறினார்.

ஹரீஸ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகிபாபு, வடிவுக்கரசி நடிப்பில் உருவான படம் `கான் சிட்டி'. இப்படம் வெளியாகி 25 நாட்கள் நிறைவடைந்த நிலையில் படத்தின் நன்றி அறிவிப்பு விழா  நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் விடிவி கணேஷ் "முதலில் `கான் சிட்டி' திரைப்படத்தின் வெற்றிக்காக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் மற்றும் முழு படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் வெற்றி பெற்ற பிறகு இயக்குநர் என்னை அழைத்து சந்தித்தார். படம் வெற்றி பெற்றால் ஒரு சிறப்பு பரிசு தருவதாக முன்பே சொல்லியிருந்தார். அந்த வாக்குறுதியை மறக்காமல், ஒரு ஐஃபோனை பரிசாக வழங்கினார். அந்த நேர்மைக்கும், நன்றியுணர்வுக்கும் அவருக்கு என் பாராட்டுகள். இந்தப் படம் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்திருப்பதே எனக்கு தெரியவில்லை.

Jana Nayagan

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், ஆரம்பத்தில் இந்தப் படத்தை ஒரு சிறிய படம் என்று நினைத்தேன். ஆனால் படத்தின் பின்னணியில் நடந்த திட்டமிடல், தயாரிப்பு, விநியோகம், ஓடிடி ஒப்பந்தம் என அனைத்தையும் பார்த்தபிறகுதான் ஹரிஷின் சிந்தனையும் திறமையும் எவ்வளவு பெரியது என்பதை புரிந்துகொண்டேன். அதற்காக அவரிடம் நான் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். ஹரிஷ் ஒரு இயக்குநர் மட்டுமல்ல; தயாரிப்பு, திரைக்கதை, திட்டமிடல் என திரைப்படத்தின் ஒவ்வொரு துறையையும் நன்றாகப் புரிந்துகொண்ட திறமையான படைப்பாளர். அந்தப் பல்துறை திறமையே இந்த வெற்றிக்குக் காரணம். இன்றைய சூழலில் மக்கள் திரையரங்குகளுக்கு வருவது குறைந்துவிட்டது என்ற பேச்சு பரவலாக இருக்கிறது. அதுபோன்ற காலகட்டத்திலும் `கான் சிட்டி' திரைப்படம் நல்ல வசூலைப் பெற்று வெற்றி பெற்றிருப்பது மிகப்பெரிய சாதனை. அந்த வெற்றி, நல்ல உள்ளடக்கம் கொண்ட படங்களுக்கு ரசிகர்கள் இன்னும் திரையரங்கிற்கு வரத் தயாராக இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கிறது. ஒரு படம் நல்ல வசூல் பெறும்போது, அது அந்தப் படக்குழுவுக்கு மட்டுமல்ல, மற்ற தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கும் புதிய உற்சாகத்தை அளிக்கிறது. இன்னும் நல்ல படங்களை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

ஜூலை 23 ஜனநாயகன் படம் வெளியாகிறது. அந்தப் படம் ஏற்கெனவே லீக் ஆகிவிட்டது. ஆனாலும் அவரது தீவிர ரசிகர்கள் என்னிடம் நேரடியாகவே நாங்கள் இன்னும் பார்க்கவில்லை, தியேட்டரில் தான் பார்ப்போம் என சொல்கிறார்கள். அப்படி எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு திரைப்படத்தை உருவாக்கினாலும், அது ரசிகர்களிடம் சென்று சேர்ந்து வெற்றி பெறும் தருணத்தை விட பெரிய மகிழ்ச்சி வேறு இல்லை. “கான் சிட்டி” படத்தின் வெற்றியும் அப்படிப்பட்ட மகிழ்ச்சியை அனைவருக்கும் கொடுத்திருக்கிறது. ஹரிஷின் அடுத்த திரைப்படம் எப்போது தொடங்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே உருவாகிவிட்டது. இந்த வெற்றியைத் தொடர்ந்து அவர் இன்னும் பல சிறந்த படைப்புகளை வழங்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்." என்றார்.