SIFEA  Jana Nayagan Leak
கோலிவுட் செய்திகள்

"ஜனநாயகனில் உள்ள FOR EDIT REFF-க்கு இதுவே அர்த்தம்.." பிரச்னையை விளக்கிய SIFEA கோபி | Vijay

இதனை படத்தொகுப்பாளர் கசிய விட்டிருந்தால் எந்த வாட்டர்மார்க்கும் இல்லாமலே 2K தரத்தில் வெளியிட்டிருக்க முடியும். அவர் எதற்கு எடிட் ரெஃபரன்ஸ் என்று வாட்டர்மார்க் போட்டு வெளியிட்டும், அவரே சிக்கலில் மாட்ட வேண்டும்.

Johnson

விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள படம், ‘ஜனநாயகன்’. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பிரகாஷ்ராஜ் எனப் பலரும் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தாண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டது. இப்படத்துக்கு CBFC சான்றிதழ் வழங்குவதில் சிக்கல்கள் காரணமாக இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில் ஏப்ரல் 9ஆம் தேதி இப்படத்தின் சில காட்சிகள் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது. மேலும், சில மணிநேரத்தில் முழுப்படமும் வெளியானது. இப்படத்தை வெளியிட்டது யார் என்ற விசாரணைகள், கைதுகள் நடந்து வந்தாலும், படக்குழுவில்தான் யாரோ இதனை கசியவிட்டிருப்பார்கள் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த விஷயம் குறித்து விளக்கம் அளிக்க தென்னிந்திய திரைப்பட படத்தொகுப்பாளர் சங்கத் தலைவர் கோபி மற்றும் சங்க உறுப்பினர்கள், FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி உடன் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இதில் பேசிய தென்னிந்திய திரைப்பட படத்தொகுப்பாளர் சங்க (SOUTHERN INDIA FILM EDITOR'S ASSOCIATION) தலைவர் கோபி, " ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிந்ததில் எங்களுக்கு மிகப்பெரிய வருத்தம். எங்களின் முதல் முதலீடே எங்கள் மேல் வைக்கப்படும் நம்பிக்கைதான். அதை வைத்துதான் எங்களுக்கான தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். ’ஜனநாயகன்’ படத்தின் படத்தொகுப்பாளர் பிரதீப் E ராகவ். அவர் 25க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். ஆனால் இந்தப் படத்தில் மட்டும் ஏன் இந்தச் சிக்கல் நடந்தது என்பது அதிர்ச்சியாகவும், யூகிக்க முடியாததாகவும் இருக்கிறது. 

இப்படத்தின் சென்சார் சார்ந்த வேலைகள் தாமதமானபோது, இயக்குநர் இப்படத்தின் காட்சிகளை மெருகேற்றும் முயற்சிகளை மேற்கொண்டார். அதற்கான வேலைகளை இங்குள்ள Knacks ஸ்டூடியோவில் முடித்து தயாரிப்பாளர், இயக்குநர் அனுமதியோடு ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவுக்கு அனுப்பியுள்ளார் படத்தொகுப்பாளர். அங்குதான் இந்தப் படத்தின் ஐந்து மொழி பாதிப்புகளுக்கான ஒலிக்கலவை நடந்து வந்தது. 9ஆம் தேதி வெளியாகும் எனச் சொல்லப்பட்ட படத்தில் 14.1.2026 என்ற வாட்டர்மார்க் இருப்பதற்குகூட அதுவே காரணம். சான்றிதழ் வேலைகள் தாமதமானதால், படத்தின் பிற வேலைகள் மற்றும் மாற்றங்கள் செய்து வந்தனர். அந்த வீடியோதான் இப்போது இணையத்தில் கசியவிடப்பட்டுள்ளது. இதனை படத்தொகுப்பாளர்தான் கசியவிட்டார் என சில தகவல்கள் இணையத்தில் உலவுகிறது. அப்படி அவர் செய்ய வேண்டும் என நினைத்திருந்தால், எந்தவாட்டர் மார்க்கும் இல்லாமலேயே 2K தரத்தில் வெளியிட்டிருக்க முடியும். அவர் எதற்கு எடிட் ரெஃபரன்ஸ் என்று வாட்டர்மார்க் போட்டு வெளியிட்டும், அவரே சிக்கலில் மாட்ட வேண்டும்.

இதன் பின்னால் யார் இருக்கிறார், அரசியல் இருக்கிறதா இதெல்லாம் நமக்கு தெரியாத விஷயம். ஒரு தொழில்நுட்ப கலைஞராக வருகிறோம், வேலை செய்கிறோம். FOR EDIT REFF என்று அதிலிருக்கும் வாட்டர்மார்க் என்பது DIயிலிருந்து கிரேட் செய்யப்பட்டு வரக்கூடிய பிரிண்ட். அதைச் சரிபார்ப்பதற்காகா எடிட்டருக்கு அனுப்புவார்கள். மேலும் இது ஒட்டுமொத்தமாக படக்குழுவுக்குள் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு அனுப்பப்படும் வாட்டர்மார்க். இதையே ஒரு QR Code மாதிரி இருந்திருந்தால் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் குழுவுக்கு அனுப்பும்போது அப்படிச் செய்வதில்லை. இது எல்லாமே நம்பிக்கையின் அடிப்படையில் நடக்கும் விஷயம்தான். மேலும் இங்கிருக்கும் எல்லா எடிட்டருக்கும் பெரிய நடிகர் படத்தில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் ஆசையாக இருக்கும். அப்படி ஒரு நட்பை இழக்க யாராவது நினைப்பார்களா? எனவே இந்தப் பழியை எடிட்டர் மேல் போடுவது தவறான விஷயம். இந்த விசாரணை சரியாக போய்க் கொண்டிருக்கிறது. எனவே குற்றம் செய்தவர் யார் என தெரியும் வரையில் நம்முடைய அனுமானங்களை திணிக்க வேண்டாம்" என்றார்.

தொடர்ந்து பேசிய FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி, " ‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரம் எங்களுக்கு ஓர் எச்சரிக்கை. சினிமா டிஜிட்டலாக மாறிய பிறகு படத்தின் காப்பி ஒருவரிடம் மட்டுமே இருப்பதில்லை. பாதுகாப்பு குறித்து ஆலோசித்து வருகிறோம். இயக்குநர் அமீர் இதுகுறித்து ஒரு கருத்தைச் சொல்ல, அதை என்ன விதத்தில் சொன்னார் என தெரியவில்லை. ஆனால், அது இந்த கசிவுக்கு எடிட்டர்தான் காரணம் என்ற தொனியில் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அவரின் கர்ப்பிணி மனைவி மிக கவலையாக அழுதுகொண்டிருக்கிறார். அவரின் குடும்பமே கடுமையான மன உளைச்சலில் இருக்கிறது. எனவே அமீர் தயவுசெய்து உங்கள் கருத்தைப் பின்வாங்கிக் கொள்ள வேண்டும். இதற்கு எந்த வகையிலும் எடிட்டர் காரணமில்லை. எங்களுடைய முதல்கட்ட விசாரணையில் யார் யாருக்கு படத்தை அனுப்பினோம். அதில் சம்பந்தப்பட்டிருப்பது யார் என எல்லா விஷயங்களையும் காவல்துறையிடம் சொல்லிவிட்டோம். சரியான குற்றவாளி கைது செய்யப்படுவார். தவறான கருத்துகளை பரப்பாதீர்கள். தவறு செய்தவர் எங்கள் சங்கத்தை சேர்ந்தவர் எனில், அவர் இனி சினிமாவிலேயே இருக்க மாட்டார்" என்றார். 

’’இதனை படக்குழுவினர் வெளியிட்டார்கள் என பேசப்படுகிறதே’’ என்ற கேள்விக்கு, "அந்தப் படக்குழுவில் இருப்பவர்களே, இப்படத்தை கசியவிட்டார்கள் எனச் சொல்வது எரியும் வீட்டில் பெட்ரோல் ஊற்றுவதுபோல. 500 கோடி ரூபாய் பணம் இருந்தால், அதைத் தேர்தலுக்கு செலவு செய்திருப்பார்களே" என்றார். இதற்கடுத்து மீண்டும் விஜய் ஒரு படம் நடிப்பார் என சொல்லப்படுகிறதே என்றதும் "அவை அனைத்தும் உருவாக்கப்படும் செய்திகள்தான். அப்படி எந்த விஷயமும் இல்லை" என்றார் ஆர் கே செல்வமணி.