Pa Ranjith PK Rosy Film Festival 2026
கோலிவுட் செய்திகள்

”ட்ரெண்டுக்கு ஏற்ற படம் எடுக்காதீர்கள்!” - பா.இரஞ்சித் | Pa Ranjith | PK Rosy Film Festival 2026

ரேயான் கூக்லர் இயக்கிய Fruitvale Station படத்தில் உண்மையான சம்பவத்தை உயிர் சேர்த்து எடுத்திருப்பார். அவர்தான் இப்போது Sinners எடுத்திருக்கிறார். எவ்வளவு தூரம் வந்திருக்கிறார் பாருங்கள். அவருடைய பேச்சுமொழியக்கூட அவர் மாற்றிக்கொள்ளவில்லை.

Johnson

இயக்குநர் பா.இரஞ்சித்தின் வானம் அமைப்பு வருடா வருடம் நடத்தும்  PK ரோஸி திரைப்பட விழாவின் ஐந்தாம் ஆண்டு துவக்கவிழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய இரஞ்சித், "திரைப்படங்களைவிட ஆவணப்படங்கள்தான் உண்மையை எனக்கு நெருக்கமாகச் சொன்னது. அப்படியான ஆவணப்படங்கள் பார்க்கையிலதான் எனக்கு சினிமா செய்ய வேண்டும் என்ற ஆசையே வந்தது. காத்திரமான அரசியல் பேசும் சினிமாக்களை மக்கள் முன் கொண்டுசேர்க்க முடியும் என்ற நம்பிக்கையை பல மாஸ்டர்கள் கொடுத்தார்கள். அது எனக்கு ஒரு பார்வையைக் கொடுத்தது. படமாக மட்டுமல்லாமல், மக்களின் நம்பிக்கையை கொடுத்தது.

Sinners

நான் உதவி இயக்குநராக இருந்தபோது எனக்குச் சில கேள்விகள் இருந்தது. இந்த இடம் சம்பந்தமாக, எல்லோரும் ஒன்றுகூடும் நிகழ்வு சம்பந்தமாக. ஏன் பட்டியலின பிரச்னைகளை அகண்ட வெளிகளில் உரையாடுவதில். ஒரு சிறிய கூட்டத்தில் மட்டுமே அதுபற்றி தொடர்ந்து விவாதிப்பது ஏன்? மைய நீரோட்டத்தை அது ஏன் அடையவில்லை. ஏன் பட்டியலின பிரச்னை வெறும் பட்டியலின உடையதாக மட்டும் பார்க்கப்படுகிறது, பட்டியலின அல்லாதோருடைய பிரச்னை என அது ஏன் கருதப்படுவதில்லை? அப்போது இதுகுறித்து என் நண்பர்களிடம் பேச ஆரம்பித்தேன்.

அப்போது என்னிடம் அதற்குத் தகுந்த ஒரு மொழி இல்லை என்பதால், என்னால் அதனைச் சரியாக் கடத்த முடியாது. தொடர் வாசிப்புதான் எனக்கு அந்தப் பயிற்சியைக் கொடுத்தது. முதலில் நான் ஒரு கலைப்பட இயக்குநராகத்தான் விரும்பினேன். ஆனால் ஜனரஞ்சக படைப்புகள் மக்கள் மத்தியில் நெருக்கமாக இருப்பதாய் உணர்ந்தேன். அவர்கள் என்னுடைய படங்களை பார்க்க உரையாட வேண்டும் என யோசித்தேன். எனவே என்னுடைய மொழியில் சமரசம் செய்தேன். ஆனால் ஒருபோதும் என் கொள்கையில் சமரசம் செய்யவில்லை. அப்படித்தான் ’அட்டக்கத்தி’ செய்தேன், அது வெற்றி பெற்றது. அடுத்து ’மெட்ராஸ்’ எனக்கு பல வாய்ப்புகளை பெற்று தந்தது. அம்பேத்கர் சொன்னதுதான். நீ பெற்ற கல்வியின் பயனை சமூகத்துக்குத் திருப்பி செய்ய வேண்டும். எனக்குக் கிடைத்த விசயங்களை பகிர்ந்துகொள்ளும் முயற்சியே இந்த நீலம் பண்பாட்டு மையம்.

Pa Ranjith

கலைக்கும் மக்களுக்குமான இடைவெளியை குறைக்கதான் பல கலை வடிவங்களுக்குமான நிகழ்வுகளைச் செய்கிறோம். இப்போது இந்த திரைப்பட விழாவும் அதன் பாகம்தான். யார் என்ன சினிமா எடுக்கிறார்கள் என்ற இடத்தில் ட்ரெண்ட் என்ற ஒரு விஷயம் இருக்கிறது. ஆனால் நாம் வியக்கும் இயக்குநர்கள் யாரும் ட்ரெண்டை பின்பற்றியவர்கள் கிடையாது.

ரேயான் கூக்லர் இயக்கிய Fruitvale Station படத்தில் உண்மையான சம்பவத்தை உயிர் சேர்த்து எடுத்திருப்பார். அவர்தான் இப்போது Sinners எடுத்திருக்கிறார். எவ்வளவு தூரம் வந்திருக்கிறார் பாருங்கள். அவருடைய பேச்சமொழியைக்கூட அவர் மாற்றிக்கொள்ளவில்லை. அவர் பேச்சை இழிவாகப் பார்க்கும் கூட்டம் உண்டு, ஆனால், அவர் ஆஸ்கரிலும் அதே பேச்சுதான் பேசுகிறார். ’சின்னர்ஸ்’ என்பது எங்களுடைய சொத்து என அதனைக்கூட வாங்கிக் கொள்கிறார். மேலும் அது ட்ரெண்டுக்கு எடுத்த சினிமா கிடையாது.

பா இரஞ்சித்

இந்த சினிமா சந்தைக்கு இசைந்து கொடுக்காமல் நம்மால் இயங்க முடியும். மக்கள் மிக திறந்த மனதுடன் இருக்கிறார்கள். நான் மேடைக்கு மேடை பட்டியலினம் எனச் சொன்னாலும், என்னுடைய படங்கள் எதையும் அவர்கள் ஒதுக்கவில்லை. உண்மையைச் சொல்பவர்களுக்கு எப்போதும் பயம் தேவையில்லை. தமிழ் சினிமா ரசிகர்கள் எல்லாக் காலத்திலும் சீரியஸான படங்களைக் கொண்டாடி இருக்கிறார்கள். எனவே ஆரோக்கியமான விவாதங்களை உருவாக்கக்கூடிய திரைவிழாவாக இந்த PK ரோஸி திரைப்பட விழா மாற வேண்டும் என விரும்புகிறேன" என்றார்