செய்தியாளர்: டி.சாம்ராஜ்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்பட நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதையடுத்து தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து பேசிய அவர்...
“படித்த பள்ளிக்கும் படிப்பு சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுக்கும் பெயர் வாங்கிக் கொடுப்பது என்பது ரொம்பவும் முக்கியம். என்னுடைய ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில் என் பெயர் சண்முகமணி என வைத்திருப்பேன். சாதாரணமாக நான் அந்த பெயரை வைக்கவில்லை. எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரின் பெயர் சண்முகமணி. அவரின் ஞாபகமாக படத்தில் அவரது பெயரை நான் வைத்துக் கொண்டேன்.
நான் எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களை ஆசிரியர் சண்முகமணி கற்றுக் கொடுத்தார். இன்றும் நான் அவருடன் தொடர்பில் உள்ளேன். அவரது பிள்ளைகள் எனக்கு போன் செய்து ஆசிரியருக்கு திருமண நாள் கொண்டாடுகிறோம் என கூறினார்கள். நான் உடனே எனது ஆசிரியருக்கு திருமண நாள் வாழ்த்துகளை செல்போனில் வீடியோவாக பேசி அனுப்பி வைத்தேன். அவர்களை வாழ்த்தும்போது அவர்களின் குடும்பத்தாருக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
நமக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் நமது வாழ்வில் சம்பந்தப்பட்டுள்ளார்கள். அதனால் கடைசி வரைக்கும் நாம் அந்த ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுப்பது என்பது ரொம்பவும் முக்கியம்” என்று பேசினார்.