இயக்குநர் ஏஆர் முருகதாஸ் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ’மதராஸி. இத்திரைப்படத்தில், சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், 'டான்சிங் ரோஸ்' சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில், அனிருத் இசையமைத்துள்ளார்.
இயக்குநர் ஏஆர் முருகதாஸுக்கு இது ஒரு கம்பேக் திரைப்படம் என்பதால், படத்தின் மீது அதிகப்படியான எதிர்ப்பார்ப்பு இருந்துவருகிறது.
மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பேட்டிகளை கொடுத்து வருகிறார் ஏ ஆர் முருகதாஸ்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தமிழ்சினிமாவின் ஜாம்பவான் இயக்குநர்களான மணிரத்னம் மற்றும் ஷங்கரின் படங்கள் சறுக்கலை சந்திப்பது சக இயக்குநராக உங்களுக்கு பயத்தையும், நடுக்கத்தையும் தருகிறதா என ஏஆர் முருகதாஸ் இடம் கேட்கப்பட்டது.
நேர்காணலில் பேசிய ஏ. ஆர். முருகதாஸிடம், "ஷங்கரின் இந்தியன் - 2, கேம் சேஞ்சர் மற்றும் மணிரத்னத்தின் தக் லைஃப் உள்ளிட்ட திரைப்படங்கள் தோல்வியடைந்துள்ளன. இப்படியான, லெஜண்ட் இயக்குநர்களின் சறுக்கல் உங்களிடம் பதற்றத்தையும் பயத்தையும் ஏற்படுத்துகிறதா?" எனக் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த முருகதாஸ், "இயக்குநர்கள் மணிரத்னமும் ஷங்கரும் மிகச்சிறந்தவர்கள். இருவரின் திரைப்படங்களும் வெறும் கமர்சியலைத் தாண்டி சமூக ரீதியான சிந்தனையையும் விதைக்கும். இவர்கள் இறக்கத்தைச் சந்திப்பதற்குக் காரணம், அவர்கள் வேறு யாரோ போட்டுச்சென்று சாலையில் செல்பவர்கள் அல்ல, அவர்கள்தான் சாலையை போடக்கூடிய ஆள்கள். அதனால், அதில் ஏற்றமும் இறக்கத்தையும் சந்திக்கின்றனர்.
ஒருவர் சரியாக சென்றுகொண்டிருந்தால் யாரோ போட்ட சாலையில் சென்றுகொண்டிருக்கிறார்கள் என்றுதான் பொருள். ஆனால், மணிரத்னமும் ஷங்கரும் புதிதாக முயற்சி செய்கிறவர்கள். அதில் முள் குத்தும், கற்கள், பள்ளங்கள் இருக்கும். அதனால் எவ்வளவு எளிதாக அவர்களைப் புறக்கணிக்க முடியாது. இருவரிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.