ஜி மாரிமுத்து
ஜி மாரிமுத்து  PT
கோலிவுட் செய்திகள்

RIP MARIMUTHU | நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து காலமானார்..!

karthi Kg

'இந்தாம்மா ஏய்' என்கிற ஒற்றை வசனத்தின் சொந்தக்காரர் மாரிமுத்து. ஆனால், அவரின் பேட்டிகளில் பல விஷயங்களை நம்மால் அறிய முடியும். வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்தவர். கவிப்பேரரசு வைரமுத்துவின் அனைத்து புத்தகங்களையும் தன் வீட்டில் வைத்திருப்பவர். பின்னர் ராஜ்கிரண், வசந்த் உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவியாளராகவும் இருந்திருக்கிறார். இயக்குநர், நடிகர் எஸ்.ஜே சூர்யாவின் பல ஆண்டு நண்பர். வாலி படத்தின் போது நடந்த பல நெகிழ்ச்சியான சம்பவங்களை பல பேட்டிகளில் சொல்லியிருப்பார்.

பல்வேறு படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், அவருக்கான முதல் வாய்ப்பு ' கண்ணும் கண்ணும்' படத்தின் மூலம் அமைந்தது. நம் எல்லோருக்கும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், ' கிணத்தக் காணோம்' காமெடி வரும் படத்தை இயக்கியவர் மாரிமுத்து தான். அதற்குப் பின்னர் விமல் நடித்த புலிவால் என்னும் படத்தை இயக்கினார். சினிமாவில் இயக்குநர் பணி பெரிதாக அவருக்குக் கைகொடுக்கவில்லை. அதே சமயம், தொடர்ந்து நடித்துவந்தார். ' பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில் ஆனந்தியின் தந்தையாக இவர் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம் பலரின் பாராட்டைப் பெற்றது.

மெகா சீரியல் எல்லாம் வெறும் க்ளீஷே அறுவை என்னும் மோடுக்கு பலர் வந்த நிலையில் தான் அவர் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் ஏற்று நடித்த எதிர்நீச்சல் தொடர் வெளியானது. திருச்செல்வம் இயக்கிய இந்தத் தொடரின் டிரெண்டிங் ஸ்டார் மாரிமுத்து தான். ' இந்தாம்மா ஏய்' என்னும் ஒற்றை வசனம் மூலம் 2கே கிட்ஸ் வரை ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார். கல்யாணத்தில் டான்ஸ் ஆடுவது முதல் பல்வேறு விஷயங்களை நக்கல் அடிக்கும் அந்த கதாபாத்திரத்துக்கென தனி பால்ய கால லவ் டிரேக்கையும் எழுதி எக்ஸ்டிரா லைக்ஸ் அள்ளியது 'எதிர்நீச்சல்' டீம்.

சமீப காலங்களில் தமிழில் ஒரு தொலைக்காட்சி தொடரின் எதிர்மறை கதாபாத்திரம் இவ்வளவு வைரல் ஆனது என்றால் அது ' அதி குணசேகரன்' கதாபாத்திரம் தான். இந்தக் கதாபாத்திரம் அவருக்கு ஜெயிலர் பட வாய்ப்பு வரை பெற்றுக்கொடுத்திருக்கிறது. தொடருக்கான டப்பிங்கை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்லும் போது மாரடைப்பால் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின்றன. பேட்டிகளில் முற்போக்காளராக, நல்லதொரு குணச்சித்திர நடிகராக , மனதில் பட்டதை தைரியமாகப் பேசும் மனிதராக வலம் வந்து கொண்டிருந்த மாரிமுத்துவின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.