Dhruv Vikram Bala, Karthik Subbaraj, Gireesaaya
கோலிவுட் செய்திகள்

முந்தைய பட இயக்குநர்களை அவமானப்படுத்தினாரா துருவ்? | Dhruv Vikram | Bison | Bala

பைசனைதான் நீங்கள் முதல் படமாக நினைக்கிறீர்கள் என்றால், இதற்கு முன் உங்களை வைத்து படம் இயக்கிய பாலா, கார்த்திக் சுப்புராஜ், கிரிசாய்யா போன்றோரை நீங்கள் அவமதிக்கிறீர்களா?

Johnson

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ், அனுபமா, ரெஜிஷா, பசுபதி, அமீர், லால், அழகம் பெருமாள் எனப் பலரும் நடித்துள்ள படம் `பைசன்'. இப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17ம் தேதி வெளியாகவுள்ளது. நிவாஸ் கே பிரசன்னா இசையில் `தீ கொளுத்தி', `றெக்கை றெக்கை', `சீனிக்கல்லு' போன்ற பாடல்கள் வெளியானது. சத்யன் பாடிய `தென்னாடு' பாடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது.

இப்பாடல் வெளியீட்டு நிகழ்வில் நடிகர் துருவ் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய துருவ் "இதுவரை நான் இரண்டு படங்களில் நடித்திருக்கிறேன். அந்த இரண்டு படங்களை நீங்கள் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் இந்தப் படத்தை (பைசன்) நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இதுதான் என் முதல் படம். இப்படத்தை நான் அப்படித்தான் பார்க்கிறேன். எல்லோரும் அப்படிதான் பார்ப்பீர்கள் என நம்புகிறேன். இப்படத்திற்காக அனைவரும் கடினமாக உழைத்திருக்கிறோம். இதை எல்லாம் தாண்டி என்னுடைய 100 சதவீத உழைப்பை இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறேன்." எனப் பேசியிருந்தார்.

துருவின் இந்த பேச்சு கடந்த சில தினங்களாக வேறு விதமாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. பைசனைதான் நீங்கள் முதல் படமாக நினைக்கிறீர்கள் என்றால், இதற்கு முன் உங்களை வைத்து படம் இயக்கிய பாலா, கார்த்திக் சுப்புராஜ், கிரிசாய்யா போன்றோரை நீங்கள் அவமதிக்கிறீர்களா? என்பது போன்ற கேள்விகள் எழுந்தது.

இது சார்பாக மஹான் சமயத்தில் துருவ் விக்ரம் அளித்த பேட்டியில் "என்னுடைய முதல் படத்தை எனது அறிமுகப்படமாக நினைக்கவில்லை, ஏனெனில் அது ஒரு ரீமேக். அதே போல இந்தப் படத்தையும் (மஹான்) என்னுடைய இரண்டாவது படம் என நினைக்கவில்லை இது என்னுடைய அப்பாவின் படம், அதில் ஒரு சிறிய பாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். இதற்குப் பிறகு நான் என்ன நடிக்கிறேனோ அதுவே எனது முதல் படமாக இருக்கும்" எனப் பேசி இருந்தார். இந்த வீடியோ கிளிப் இப்போது வைரலாகி வருகிறது. எனவே இதன் மூலம் அவர் தன் முந்தைய படங்களில் இயக்குநர்களை அவமானப்படுத்தும் நோக்கில் பேசவில்லை எனப் புரிந்து கொள்ளலாம்.

கூடவே விக்ரம் சேது மூலம் கவனம் பெரும் முன் பல படங்களில் நடித்தார். ஆனால் `சேது' தான் அவரை கவனம் பெற வைத்தது. அதைப் போல பைசன் தனக்கு ஒரு படமாக இருக்கும் என்றுதான் துருவ் பேசி இருக்கிறார் என சிலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.