மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து ' பைசன் காலமாடன்' படம் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார் நடிகர் துருவ். அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மனத்தி கணேசனை அடிப்படையாகக் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவருக்கு நிறைய பாராட்டுகள் குவிந்தன. இப்படத்திற்குப் பிறகு துருவ் எந்தப் படத்தில் நடிக்கப் போகிறார் என பல யூகங்கள் நிலவி வருகின்றன.
இடையே அடுத்த படத்திற்காக தயாராகி வரும் வீடியோவையும் சில மாதங்கள் இன்ஸ்ட்டாவில் பதிவிட்டார் துருவ். இப்படம் நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் சசி- 'ஹாய் நானா' சௌர்யுவ்- ஆதிக் ரவிச்சந்திரன்- ஆண்டனி பாக்யராஜ் - ராஜா - ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இப்படத்தின் பாரம்பரியமான முகூர்த்த தருண படப்பிடிப்பை இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.
அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் உருவாகும் #DV 4 படத்தில் துருவ் விக்ரம் உடன் பிருத்வி பாண்டியராஜன், சாய் தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தில் துருவ் முற்றிலும் மாஸ் ( Mass) பாணியிலான தோற்றத்தில் நடிக்கவுள்ளாராம். அஜித் குமார் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி ', பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான 'டியூட் 'ஆகிய படங்களின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், நான்காவது தமிழ்ப் படமாக அமைய உள்ளது DV 4.