தனுஷ் இயக்கி நடித்துள்ள `இட்லி கடை' படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலும், ட்ரெய்லர் வெளியீட்டு விழா கோவையில், ப்ரீ ரிலீஸ் நிகழ்வை மதுரையில் நடத்திய படக்குழு, திருச்சியிலும் ஒரு ப்ரீ ரிலீஸ் நிகழ்வை நேற்று மாலை நடத்தினர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய தனுஷ் "திருச்சி என்றாலே எனக்கு திருடா திருடிதான் நினைவுக்கு வரும். நான் முதன் முதலாக `திருடா திருடி' படப்பிடிப்புக்காகதான் இங்கு வந்தேன். 45 நாட்கள் இருந்தேன். அப்போது `காதல் கொண்டேன்' படப்பிடிப்பு முடியாமல் 5 நாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருந்தது. அதே சமயம் திருடா திருடியும் துவங்கிவிட்டது. அப்போதெல்லாம் ஒரு படம் பூஜை போட்டு ஷூட் நடக்கவில்லை என்றால் அபசகுனமாக நினைப்பார்கள். `காதல் கொண்டேன்' 5 நாட்கள் ஷூட் செய்தால்தான் ரிலீஸ் ஆகும் என்ற நிலை. அதே நேரம் `திருடா திருடி' ஷூட்டையும் நிறுத்த முடியவில்லை.
`காதல் கொண்டேன்' ஷூட் மாலையில் நடக்கும், காலை 4 மணிக்கு முடியும். அங்கிருந்து காரில் `திருடா திருடி' ஷூட் வருவேன். இங்கு 10 மணியில் இருந்து மாலை 4 மணிவரை ஷூட். மறுபடி இங்கிருந்து சென்னைக்கு சென்று `காதல் கொண்டேன்' ஷூட். இப்படியாக காதல் கொண்டேனும், திருடா திருடியும் மாறி மாறி ஷூட் ஒரு 4 நாட்கள் நடந்தது. அப்படி அலைந்து ஷூட் சென்றதால் தான் என்னால் இங்கு நிற்க முடிகிறது. என்னை பார்க்க நீங்கள் எல்லாம் இங்கு நிற்கிறீர்கள்.
`இட்லி கடை' ஒரு சாதாரண எளிமையான படம். ஊரில் இருந்து கிளம்பி வேலை தேடி வெளியூர் சென்றவர்கள், வெளிநாடு சென்றவர்கள் அவர்களுக்கு இந்தப் படம் மனதிற்கு நெருக்கமான படமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். தொடர்ந்து நீங்கள் கொடுக்கும் ஆதரவுக்கு மிகவும் நன்றி." என தெரிவித்தார்.