இளையராஜா
இளையராஜா புதிய தலைமுறை
கோலிவுட் செய்திகள்

“இளையராஜாவாக நடிப்பது எனக்கு சவாலாக தெரியவில்லை” - பயோபிக் அறிமுக விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி #Video

Johnson

நடிகர் தனுஷ் தற்போது அவரின் ஐம்பதாவது திரைப்படமான ராயன், தொடர்ந்து குபேரா போன்றவற்றில் பிஸியாக இருக்கிறார். அதேநேரம், தனுஷ் இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாகவே கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், இதனை உறுதி செய்யும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறானது தனுஷ் நடிப்பில், அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் உருவாக உள்ளது என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

இளையராஜா படம்

இதற்கான ‘இளையராஜாவின் பயோபிக் - அறிமுக விழா’ சென்னையில் உள்ள லீலா பேலஸ்ஸில் இன்று நடைபெற்றது. இதில் ‘இளையராஜா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை கமல்ஹாசன் மற்றும் இளையராஜா வெளியிட்டனர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன், பாரதிராஜா, கங்கை அமரன் உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அவர்கள் படம் குறித்தும் இளையராஜா குறித்தும் பேசியவை...

தனுஷ்

“நான் இருவரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தான் நடிக்க விரும்பினேன். ஒன்று இளையராஜா இன்னொன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஒன்று நடக்கிறது.

இளையராஜாவின் இசை எனக்கு நடிக்கவும் உதவி இருக்கிறது. விடுதலை படத்தில் நான் பாடும் போது ‘நீங்கள் கூடவே இருப்பீங்களா?’ என அவரிடம் (இளையராஜாவிடம்) கேட்டேன்.

அதற்கு அவர், ‘நான் என்னைக்கு உன் கூட இல்ல?’ எனக் கேட்டார். ஆமாம், நான் என் அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதுகூட அவர் (இளையராஜா) என்னுடனேதான் இருந்திருக்கிறார்” என்றார் நெகிழ்ச்சியுடன்.

கமல்ஹாசன்

“எங்கள் கதையை எங்கிருந்து ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை. நான் அமர்தான் (கங்கை அமரன்) ராஜா (இளையராஜா) என நினைத்தேன். பின்பு ராஜாவிடம் சார் என, ஐயா என தொடங்கி இப்போது புனிதமான ஒரு உறவாக தொடர்கிறது.

என்னைப் பாடகனாக பயன்படுத்தியது ராஜா. ராஜாவை குறை சொல்பவர்கள் கூட அவரிடம் உள்ள நன்மைகளை மறுக்க முடியாது.

எல்லோரும் இவர் வாழ்ந்த காலத்தில் என்பார்கள். ஆனால், நான் இன்னும் நூறு வருடங்கள் கழித்து பிறந்தாலும் கூட, ராஜா வாழும் காலத்தில்தான் வாழ்ந்திருப்பேன். இப்படம் இசைஞானி இளையராஜா பற்றிய படம் மட்டுமல்ல, பாரத ரத்னா இளையராஜா பற்றிய படம். இயக்குநர் எந்த அழுத்தமும் எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் பார்வையை எடுங்கள்” என்றார்.

பாரதிராஜா

“குழந்தைப் பருவத்தில் இருந்து நான் இளையராஜாவுடன் இருக்கிறேன். அவனிடம் என்ன சக்தி இருக்கிறது எனப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவனை அதிசயப்படுவதை தவிர்க்க முடியவில்லை. அவன் மூச்சு கூட இசையாகவே வருகிறது. அவன் நினைத்தாலும், அவனை ஹார்மோனியம் விடுவதாய் இல்லை.

‘என்னை வாசி’ என அழைத்து கொண்டே இருக்கிறது. அவன் உண்மையில் ஒரு அதிசயப்பிறவி. இந்தியாவின் மிகப்பெரிய பொக்கிஷம் இளையராஜா.

தனுஷ் இப்படத்தில் இணைந்தது இன்னுமொரு அதிசயம். தனுஷுடன் பணியாற்றிய போது அவனைப் பார்த்து மிரண்டுபோனேன். இந்தப் படத்தில் இளையராஜாவும், தனுஷும் இணைந்தது கடவுளின் கணக்கு” என்றார்.

தியாகராஜன் குமாரராஜா

“இன்றைய இயக்குநர்கள் அனைவரும் இளையராஜாவுடன் பணியாற்ற வேண்டும். எதைக் கேட்டாலும் கொடுக்கும் வனதேவதை அவர். அருண் இப்படத்தை சிறப்பாக இயக்குவார், என்ன கொடுத்தாலும் அசத்தும் தனுஷ் நடிக்கிறார் எனும் போது படம் நிச்சயம் சிறப்பாக வரும்” என்றார்.

இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் இப்படத்தின் First look poster-ஐ தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. இப்படத்திற்கு யார் இசையமைக்கிறார் என்பது பற்றி இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. இளையராஜாவே இசையமைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இளையராஜா பயோபிக் அறிமுக விழா நிகழ்வின் முழு காணொளியை, இங்கே காணலாம்: