சந்தீப் கிஷன், தனுஷ், அருண் மாதேஸ்வரன்
சந்தீப் கிஷன், தனுஷ், அருண் மாதேஸ்வரன் ட்விட்டர்
கோலிவுட் செய்திகள்

விதிமீறலால் நிறுத்தப்பட்ட தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு எப்போது துவங்கும்? - வெளியான தகவல்

சங்கீதா

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே மத்தளம் பாறையில், கடந்த 3 மாதங்களாக, சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் படமாக்கப்பட்டு வந்தது. இந்த படப்பிடிப்பிற்காக மத்தளம் பாறையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிக்கு அருகே தனியார் பட்டா இடத்தில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், பல விதிமீறல்கள் உள்ளதாகவும், வயல் வெளிகளுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்கள் அடைக்கப்பட்டதாகவும், அதன்மேல் பாலம் கட்டப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.

மேலும், அதிகளவிலான மின் விளக்கு மற்றும் அதிக வெடிகள் பயன்படுத்தப்படுவதால், கே.எம்.டி.ஆர். புலிகள் காப்பகத்தில் உள்ள விலங்குகள் பாதிப்படையும் வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர். இதனையடுத்து விசாணை நடத்திய தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன், படக்குழு எந்த துறையிலும் அனுமதி பெறவில்லை எனக் கூறி நேற்று முன்தினம் (ஏப். 25) ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்புக்கு தடை விதித்தார்.

இன்று (ஏப். 27) பல துறைகளிலும் தடை இல்லா சான்றுபெற்று, மாவட்ட ஆட்சியரின் அனுமதிக்காக படக்குழுவினர், செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் மனு அளித்த நிலையில், தற்போது அதிக வெடி சப்தங்கள் மற்றும் தீ பிழம்புகள் எழும் வண்ணம் இல்லாமல் படப்பிடிப்பு நடத்தலாம் எனவும், அதேபோல் கால்வாய் மறித்து கட்டப்பட்டதாக கூறப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, படப்பிடிப்பை நாளை 28.04.23 முதல் தொடரலாம் எனவும் தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் அனுமதி அளித்தார்.

கேப்டன் மில்லர் தென்காசி படப்பிடிப்பு

வனத்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளிடம் தற்போது அனுமதி பெற்றுள்ளதால், நாளை முதல் படப்பிடிப்பு துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.