தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பு பெற்ற கூட்டணி தனுஷ் - வெற்றிமாறன். தற்போது இந்தக் கூட்டணி புதிய படத்துக்காக இணைவது நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை மற்றும் அசுரன் படங்களில் இணைந்து பணியாற்றியவர்கள் அடுத்ததாக `வட சென்னை 2' படம் செய்வார்கள் என பேச்சு எழுந்தது. ஆனால் இப்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
'தமிழ்முருகன்' என்ற படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறன் மீண்டும் இணையப் போவதாக தனுஷ் அறிவித்துள்ளார். அறிவுமதி எழுத்தில் உருவாகும் இப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் புரொடக்ஷன் மைல்ஸ் டு கோ ஆகிய நிறுவனங்கள் இப்படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கான மோஷன் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது படக்குழு. அதில் தனுஷ் முருகர் வேடத்தில் வருவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியானது. அப்படம் முருகர் பற்றிய படம் எனக் கூறப்பட்டதால், அப்பட அறிவிப்பு பதிவில் வடக்கில் பிறந்தவர் என குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையானது. இந்நிலையில் வெற்றிமாறனின் `தமிழ் முருகன்' பட அறிவிப்பு வெளியாகி இருப்பது, அதற்கு பதிலடி கொடுக்கும் ஒன்று என இணையத்தில் பேசப்படுகிறது.
வெற்றிமாறன் தற்போது சிலம்பரசன் நடிக்கும் `அரசன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். 'அரசன்' திரைப்படம் , 2018-ல் வெளியான 'வட சென்னை ' படத்தின் உலகில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. தமிழ்முருகன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் கதைக்களம், நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் படப்பிடிப்பு தொடக்கம் குறித்த மேலதிக விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தனுஷ் அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமியின் ஓம் படத்தில் நடித்து வருகிறார். இது அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் நடிகர்கள் மம்முட்டி, நசிருதீன் ஷா, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோரும் உள்ளனர்.