விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கர’ படம் ஏப்ரல் 30 வெளியீட்டை முன்னிட்டு நடந்த ப்ரீ ரிலீஸ் விழாவில், ‘போயஸ் கார்டன்ல வீடு வாங்க கூடாதா’ என்ற தனது வைரல் மீம் குறித்து தனுஷ் பதிலளித்தார்.
தனுஷ் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள படம் `கர'. மமிதா பைஜூ, ஜெயராம், கருணாஸ், கே எஸ் ரவிக்குமார், ப்ரித்வி பாண்டியராஜன் எனப் பலரும் நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 30ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு மற்றும் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் தனுஷிடம் `நாங்க எல்லாம் போயஸ் கார்டன்ல வீடு வாங்க கூடாதா' என நீங்கள் பேசியது ட்ரென்டிங் மீம் ஆகிவிட்டதே அதை எப்படி பார்க்கிறீர்கள் எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன தனுஷ் "அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது நம்மிடம் தான் இருக்கிறது. அதற்கு ஒரு சின்ன கதை சொல்கிறேன். ஏர்போர்ட்டில் விமானத்துக்கு அருகே அழைத்து செல்லும் பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் டிரைவர் அண்ணா `செல்ஃபி எடுத்துக் கொள்ளலாமா?' என கேட்டார். போட்டோ எடுத்துக் கொண்ட பின் ஒன்று சொன்னார்.
`நீங்க போயஸ் கார்டன்ல வீடு வாங்கினத சொன்னது என் பையனுக்கு பெரிய இன்ஸ்பிரேஷனா இருந்துச்சு சார்' என சொன்னார். எனவே இதனை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டால் இன்ஸ்பிரேஷன். மீமாக பார்த்தால் மீம். அதுவும் ஒரு எண்டர்டெய்ன்மெண்ட் தானே. எண்டர்டெய்ன்மெண்ட் செய்வதுதான் நம் வேலை" என்றார்.