Deva Sabesan
கோலிவுட் செய்திகள்

"எல்லாவற்றையும் முதல் ஆளாக செய்தான், இறப்பிலும்..." - தம்பியை நினைத்து உருகிய தேவா | Deva | Sabesh

அவன் 68வது வயதில் இறந்துவிட்டான், இந்த 68 வயது வரை அவனிடம் நான் பேசியது 1 மணிநேரம் தான் இருக்கும். அவன் இசையமைக்க வரும் போது கூட பெரிதாக பேசியது இல்லை.

Johnson

இசையமைப்பாளர் சபேஷ் என்ற சபேசன் (68) உடல்நலக்குறைவால் அக்டோபர் 23ம் தேதி காலமானார். இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த சபேசனுக்கு மரியாதை செய்யும் படி திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை சபேசனின் உருவ படத்திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கங்கை அமரன், தேவா, சேரன், எஸ் ஏ ராஜ்குமார் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்வில் இசையமைப்பாளரும், சபேசனின் அண்ணனுமான தேவா பேசிய போது "நிறைய பேர் சொன்னார்கள், சபேசன் அவ்வளவு பேசியதில்லை என. சிறுவயதில் இருந்தே அமைதியாகத்தான் இருப்பான். அம்மா ஐந்து பேருக்கு தட்டில் சாப்பாடு வைப்பார், அதில் உப்பு இல்லை என்றால் நாங்கள் அனைவரும் சொல்வோமே தவிர, சபேசன் சொல்லமாட்டான். எந்த கஷ்டத்தையும் வெளியில் சொல்லமாட்டான். வெளிப்படையாக ஒரு விஷயம் சொல்கிறேன். அவன் 68வது வயதில் இறந்துவிட்டான், இந்த 68 வயது வரை அவனிடம் நான் பேசியது 1 மணிநேரம் தான் இருக்கும். அவன் இசையமைக்க வரும் போது கூட பெரிதாக பேசியது இல்லை. கடைசி நேரத்தில் கூட, இங்கு வலிக்கிறது, அங்கு வலிக்கிறது என்று கூட சொல்லவில்லை. சொல்லாமலே சென்றுவிட்டான்.

விமானம் ஒரு இடத்திற்கு போய் சேர வேண்டும் என்றால் இரு புறமும் இறக்கை வேண்டும். எனக்கு அப்படியான இறக்கைகள் தான் சபேசானும் முரளியும். இப்போது விமானத்தில் ஒரு இறக்கை கீழே விழுந்துவிட்டது. என்னைப் பொறுத்தவரை நான் இப்போதும் நான் நினைத்துக் கொள்வது என்னவென்றால், சபேசன் வளசரவாக்கத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறான் என தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அப்படியான ஞாபகம் தான் வருகிறது. 

கடைசி நேரத்தில் கூட, இங்கு வலிக்கிறது, அங்கு வலிக்கிறது என்று கூட சொல்லவில்லை. சொல்லாமலே சென்றுவிட்டான்.
Sabesan

எங்கள் குடும்பத்தை பொறுத்தவரை, நாங்கள் ஒற்றுமையாக இருப்போம். எங்கள் வீட்டில் இருந்து முதல்முதலில் கச்சேரிக்கு சென்று கீபோர்டு வாசித்தது அவன்தான். அதன் பிறகு தான் நாங்கள் சென்றோம், சினிமா போனோம். அதேபோல் எங்கள் குடும்பத்தில் முதல்முதலில் வெளிநாடு சென்றதும் சபேசன்தான். ஒரு இசை நிகழ்ச்சிக்காக கடல்கடந்து முதன்முதலில் சிலோனுக்கு போனான், அப்போது நான் சினிமாவுக்கே வரவில்லை. சினிமாவுக்கு வந்த பிறகு முதன்முதலில் ஸ்கூட்டர் வாங்கியதும் சபேசன்தான். அதன்பிறகு முதல் கார் வாங்கியதும் அவன்தான். எங்கள் வீட்டில் இருந்து நல்ல ஒரு ஏரியாவிற்கு வாடகைக்கு சென்றதும் சபேசன்தான். அதன் பிறகு வளசரவாக்கத்தில் சொந்த வீடு கட்டினான். முதலில் சொந்த வீடு காட்டியதும் அவன்தான். எனக்கு வீடு கட்டிக்க கொடுத்ததும் அவன்தான். எங்கள் குடும்பத்தில் முதன்முதலில் டிவி வாங்கியதும் அவன் தான். இப்படி எல்லாத்தையும் முதன்முதலில் வாங்கியது அவன் தான். போகும் போதும் முதல் ஆளாக போய்விட்டான்.

இறப்பதற்கு ஒருவாரம் முன்னால் கூட பல இடங்களில் கச்சேரி பற்றி பேசிக் கொண்டிருந்தான். ஒரு அண்ணன் என்ற முறையில் நான் சொல்கிறேன் சபேசா, இது வேண்டாம் உன் உடம்பு தாங்காது, ஓய்வெடு, மனஅழுத்தம் ஆகாதே, என் வார்த்தையை கேள் என்றேன். ஏன் என்றால் ஒவ்வொருவரும் எங்கெங்கோ வேலை செய்கிறோம் என்றால் ஒன்றும் தெரியாது. ஆனால் 15 வருடங்களாக காலை 7 மணிக்கு ஒரே ஸ்டுடியோவில் சந்தித்து இரவு வரை பணியாற்றியது மறக்க முடியவில்லை. அவன் இல்லை என்றால் நான் இல்லை. இசையமைப்பாளர் என்ற தகுதியே வந்திருக்காது. நான் அரசுப்பணியில் வேலை செய்து கொண்டிருந்தேன். பின்னணி இசை, காட்சிகள் என எதுவுமே தெரியாது. திருவிழாவுக்கு செல்லும் போது ஒரு அப்பா தன் மகனை தொழில் தூக்கி வைத்து காட்டுவது போல், எனக்கு சினிமா உலகத்தை காட்டியது சபேசனும் முரளியும் தான்.  அப்படி ஒவ்வொரு நாளும் நினைக்க வைத்துவிட்டான். ஒரு பெரிய அண்ணன் என்ற முறையில் என்னால் தாங்க முடியவில்லை. அவன் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்" என்றார்.

15 வருடங்களாக காலை 7 மணிக்கு ஒரே ஸ்டுடியோவில் சந்தித்து இரவு வரை பணியாற்றியது மறக்க முடியவில்லை. அவன் இல்லை என்றால் நான் இல்லை