Ram Charan Peddi
கோலிவுட் செய்திகள்

சென்னை என் தாய் வீடு! - ராம் சரண் நெகிழ்ச்சி | Ram Charan | Peddi

இந்தப் படம் முடிக்க இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் புஜ்ஜி இந்தப் படத்துக்காக 5 ஆண்டுகள் உழைத்திருக்கிறார்.

Johnson

ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ்குமார் நடிப்பில் புஜ்ஜி பாபு சனா நடித்துள்ள படம் `பெத்தி'. இப்படம் ஜூன் 4ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இன்று சென்னையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய ராம் சரண் "சில நேரங்களில் என்ன பேசுவது என்றே தெரியாது. அப்படியான தருணத்தில் இப்போது இருக்கிறேன். சென்னை வந்தாலே எனக்கு இப்படியான தருணம் இருக்கும். நான் பிறந்து வளர்ந்தது சென்னை தான். இங்கு வந்து என்னுடைய படங்களை விளம்பரப்படுத்தும் போது என்னுடைய சொந்த ஊருக்கு வந்த உணர்வு வரும். என் அம்மா இங்கு தான் பிறந்தார் எனவே இது என் தாய் வீடு.

இந்தப் படம் முடிக்க இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் புஜ்ஜி இந்தப் படத்துக்காக 5 ஆண்டுகள் உழைத்திருக்கிறார். எல்லோரும் நான் கஷ்டப்பட்டதாக சொல்கிறார்கள். நான் எந்த கஷ்டமும் படவில்லை. புஜ்ஜியின் எழுத்து, ரஹ்மான் சாரின் இசை என பல தூண்கள் இந்தப் படத்தில் இருக்கிறது. சிவா அண்ணா ஸ்க்ரீனில் வந்தாலே ஒரு நெருப்பை போல வருவார்கள். அவருடைய பாத்திரத்தை பார்ப்பதற்காக ஜெயிலர் எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன்.

இந்தப் படத்தை கஷ்டப்பட்டு செய்யவில்லை, இஷ்ட்டப்பட்டு செய்திருக்கிறேன். வீட்டில் இந்தப் படம் பற்றி பேசி பேசி குடும்பத்தினர் அனைவரும் என் பேச்சை நிறுத்த சொல்லும் அளவுக்கு போய்விட்டது. அவ்வளவு இந்தப் படத்தின் தாக்கம் எனக்கு இருந்தது. நான் எப்போதெல்லாம் ஒரு படத்தை பற்றி வீட்டில் பேசுகிறேனோ, அது பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. மகதீரா, ரங்கஸ்தலம், RRR படங்களுக்கு பிறகு இந்தப் படம் பற்றி தான் அப்படி பேசி இருக்கிறேன். இது எனக்கு பெருமை சேர்க்கும் படமாக இருக்கும்." என்றார்.