கேப்டன் மில்லர் படப்பிடிப்பு
கேப்டன் மில்லர் படப்பிடிப்பு  PT
கோலிவுட் செய்திகள்

“'கேப்டன் மில்லர்' படப்பிடிப்புக்கு அனுமதியளித்தோருக்கு எதிராக வழக்கு தொடர்வேன்”- மதிமுக கவுன்சிலர்

Justindurai S

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சந்தீப் கிஷன், தனுஷ், அருண் மாதேஸ்வரன்

இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டத்தில் உள்ள களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்தது. அதில் நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் குண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது குண்டு சத்தம் கேட்டதால் சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சமடைந்தனர். பின்னர் அங்கு சென்ற தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிசந்திரன், இதுகுறித்து படக்குழுவினரிடம் விசாரணை நடத்தினார். அவர்கள் உரிய அனுமதி பெற்றார்களா என்றும் கேட்டறிந்தார்.

இதில் படக்குழு வனத்துறையிடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிசந்திரன் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிட்டார். அதன்படி 'கேப்டன் மில்லர்' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் 'கேப்டன் மில்லர்' படக்குழுவினர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வன அலுவலகம் (திருநெல்வேலி), பொதுப்பணித் துறை மற்றும் தீயணைப்புத் துறையிடம் முறையான அனுமதி வாங்கி மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழை சமர்ப்பித்துள்ளனர். இதைத்தொடர்ந்து தற்போது மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் படப்பிடிப்பு நடத்துவதற்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளார்.

கேப்டன் மில்லர்

அதன்படி வெடிச் சத்தம், தீப்பிழம்புகள் எழாமல் படப்பிடிப்பு நடத்த மாவட்ட ஆட்சியர் நிபந்தனை விதித்துள்ளார். மேலும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கால்வாயை மறித்து கட்டப்பட்டதாக கூறப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்றி படப்பிடிப்பை தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து 'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பு இன்று அதே இடத்தில் நடைபெறும் என்று படக்குழு அறிவித்தது.

இதற்கிடையே நான்கு ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்புக்கு வேண்டுமென முன்னதாகவே படக்குழுவினர் கோரிக்கை வைத்திருந்தனர். அதை ஏற்று தற்போது போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பு தொடங்கியது.

முன்னதாக, படக்குழு மத்தளம்பாறை கிராமத்திற்கு அருகில் உள்ள செங்குளம் கால்வாயின் குறுக்கே மரப்பாலம் அமைத்து, அதன் கரைகளை சேதப்படுத்தியதாக மதிமுக கவுன்சிலர் உதயசூரியன் புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது படப்பிடிப்புக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டதை கண்டித்து கவுன்சிலர் உதயசூரியன் பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர், “வனவிலங்குகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் குண்டுவெடிப்பு மற்றும் சண்டைக் காட்சிகளை கேப்டன் மில்லர் குழுவினர் படமாக்கியுள்ளனர். இதனால் மத்தளம்பாறைக்கு சாம்பார் மான்கள் வருவதை நிறுத்திவிட்டன. படப்பிடிப்புக்கு மீண்டும் அனுமதியளித்த அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போகிறேன்” என்று கூறியுள்ளார்.