தமிழ்த் திரையுலகின் இளம் மற்றும் திறமையான நடிகர்களான ஆனந்த் ராம் மற்றும் பிரிகிடா (Brigida) ஜோடி, தங்கள் வாழ்வின் மிக மகிழ்ச்சியான புதிய அத்தியாயத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நடிகர் ஆனந்த் ராமின் பிறந்தநாளான இன்று, தங்களது காதலை நெகிழ்ச்சியான சமூக ஊடகப் பதிவின் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
திரையுலகில், ‘மீசைய முறுக்கு தம்பி’ என்றும், ’பவி டீச்சர்’ (Pavi Teacher) என்றும் ரசிகர்களால் அழைக்கப்படும் இந்த ஜோடி, தற்போது நிஜ வாழ்க்கை தம்பதிகளின் (Real-life couples) பட்டியலில் இணைந்து ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். ஆனந்த் ராம் மற்றும் பிரிகிடா. திரையில் தனித்தனியாகப் பயணித்த இவர்களின் இருவேறு கனவுகள், கலை மீதான பொதுவான ஈர்ப்பால் ஒன்றிணைந்து, தற்போது நிஜ வாழ்க்கையிலும் ஓர் அழகான இணையாக உருவெடுத்துள்ளது.
தங்கள் வாழ்வின் இந்த அடுத்தகட்டத்தை நோக்கி நகரும் ஆனந்த் ராம் - பிரிகிடா ஜோடியின் திருமணம் இந்த ஆண்டே நடைபெறவுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் திருமண தேதி ஆகியவை வரும் வாரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இத்தனை ஆண்டுகாலமாக எங்கள் மீது அளவற்ற அன்பையும் ஆதரவையும் பொழிந்துவரும் எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், சக திரையுலகினர், பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர் மற்றும் அன்பு ரசிகர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களின் ஒவ்வொரு காலகட்டத்திலும் தூணாக நின்ற நீங்கள், எங்களது இந்தப் புதிய தொடக்கத்திற்கும் உங்கள் ஆசிகளையும் வாழ்த்துகளையும் வழங்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.