மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ், அனுபமா, ரெஜிஷா, பசுபதி, அமீர், லால், அழகம் பெருமாள் எனப் பலரும் நடித்துள்ள படம் `பைசன்'. இப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17ம் தேதி வெளியாகவுள்ளது. நிவாஸ் கே பிரசன்னா இசையில் `தீ கொளுத்தி', `றெக்கை றெக்கை', `சீனிக்கல்லு' போன்ற பாடல்கள் வெளியானது. சத்யன் பாடிய `தென்னாடு' பாடல் கடந்த சனிக்கிழமை வெளியானது.
இப்பாடல் வெளியீட்டு நிகழ்வில் நடிகர் துருவ் மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய துருவ் "இதுவரை நான் இரண்டு படங்களில் நடித்திருக்கிறேன். அந்த இரண்டு படங்களை நீங்கள் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் இந்தப் படத்தை (பைசன்) நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இதுதான் என் முதல் படம். இப்படத்தை நான் அப்படித்தான் பார்க்கிறேன். எல்லோரும் அப்படிதான் பார்ப்பீர்கள் என நம்புகிறேன். இப்படத்திற்காக அனைவரும் கடினமாக உழைத்திருக்கிறோம்.
இதை எல்லாம் தாண்டி என்னுடைய 100 சதவீத உழைப்பை இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறேன். படத்தை பார்க்கும் போது அந்த உழைப்பு தெரிகிறதா என பார்த்து சொல்லுங்கள். என்னையும் தாண்டி, எங்க எல்லோரையும் தாண்டி இயக்குநர் மாரி செல்வராஜ், மிக கடினமாக உழைத்து, இறங்கி ஒரு சம்பவம் செய்திருக்கிறார். அந்த சம்பவம் உங்கள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும். அது உங்களை சிந்திக்க வைக்கும், தன்னம்பிக்கை கொடுக்கும்" எனப் பேசியுள்ளார்.