தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஏ ஜி எஸ். இந்நிறுவனத்தைச் சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் அளித்த பேட்டியில் ஏ ஜி எஸ் தயாரித்த ’பிகில்’ படம் பற்றியும், அட்லீ பற்றியும் பல விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். அப்பேட்டியில், " ‘பிகில்’ படத்தில் வேலை செய்யச் சொல்லி என்னை, என் அப்பாவிடம் விஜய் சார்தான் அனுப்பினார். அட்லீ படங்கள் பெரிய ஸ்கேலில் எடுக்க வேண்டியவை. எனவே அதனைப் பொறுப்பாக கவனிக்க ஆட்கள் வேண்டும். தயாரிப்பாளர் படப்பிடிப்பில் இருக்க வேண்டும். எனவே அட்லீயிடம் ’அர்ச்சனாவை அறிமுகம் செய்துவையுங்கள், அவர் இதில் பணியாற்றட்டும்’ என விஜய் சார் சொன்னார்.
அதுவரை என்னுடைய பெயரே படத்தில் வராது. ஆனால் அட்லீதான் இந்தப் படத்தில் அவர் பணியாற்றி இருக்கிறார். அவர் பெயர் போட வேண்டும் என அப்பாவிடம் சொல்லிச் சேர்த்தார். ’பிகில்’ படத்தைப் பொறுத்தவரை நாங்கள் மிகவும் செலவு செய்து எடுத்த படம். அது லாபகரமாகவும் எங்களுக்கு அமைந்தது. ஆனால், என்னைச் சந்திக்கும் பலரும் ‘ ’பிகில்’ படம் நஷ்டம்தானே‘ எனக் கேட்பார்கள். ஏஜிஎஸ் பயணத்தில் மிகப்பெரிய லாபகரமான படம் ’பிகில்’. ஆனால் அது எங்கும் பதிவாகவே இல்லை. படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால், வட்டி அதிகரித்திருக்கும் எனப் பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால் அது வங்கி வட்டிதான். பிற இடத்தில் இருந்து பணம் பெறவில்லை.
அட்லீ எப்போதும் பெரிய விஷன் கொண்டவர். அவருக்கு சந்தைக்கு தகுந்ததுபோல படம் செய்ய விருப்பம் இல்லை. அவர் செய்யும் படத்துக்கு ஏற்ப சந்தையை உருவாக்குவோம் என்றுதான் நினைப்பார். ’பிகில்’ படத்துக்கு அப்போதைய சந்தை நிலவரத்தைவிட அதிக பட்ஜெட் என எங்களுக்கு தெரியும்.
ஆனால், அட்லீ மீதிருந்த நம்பிக்கையில் நாங்கள் செலவு செய்தோம். அவர் செலவு செய்யும் அனைத்தும் திரையில் தெரியும். அந்த மேஜிக்கை அட்லீ செய்வார்" என்று பேசி இருந்தார் அர்ச்சனா கல்பாத்தி.