அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடித்து வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற படம் `டூரிஸ்ட் ஃபேமிலி'. இப்படம் சமீபத்தில் நடந்த சென்னை சர்வதேசத் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது. அதில் சிறந்த நடிகருக்கான விருது சசிகுமாருக்கு வழங்கப்பட்டது. இதனை பாராட்டி இயக்குநர் பாலா, சசிகுமாருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "பேரன்பு சசி, சென்னை சர்வதேசத் திரைப்படவிழாவில் `டூரிஸ்ட் பேமிலி' திரைப்படத்திற்கு நீ சிறந்த நடிகனாக விருது வாங்கியிருப்பதை அறிந்தவுடன் ஏற்பட்ட என் மன வெளிப்பாடு தான் இக்கடிதம்.
கடந்த இருபத்தைந்து வருடங்களாக உன்னனப் பற்றி நான் கணித்தது நீ போராடி வெல்பவன் பேராற்றல் கொண்டவன். கொந்தளிக்கிற கடலையும் அமிழ்த்தி சாந்தமாக்கி விடுகிற உன் பண்பட்ட வித்தையை அதைச் சகலருக்கும் கடத்தும் உன் உள்ளன்பை நேரில் மட்டுமல்ல திரையிலும் பார்த்து பூரித்துப் போகிறேன்.
உன் இயல்பான எளிமைக்கிருக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். மேலும் நடிகனாக உன் ஒவ்வொரு வெற்றியும் எனக்குள் ஏற்படுத்தும் மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை. இறுதியாக, உனக்குள் உறுமிக் கொண்டிருக்கிற அந்தச் `சம்பவக்காரன்' சசியை, என் இனிய இயக்குநனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். என்னுடைய இந்த ஆசையை நீ விரைவில் நிவர்த்தி செய்வாய் என்றும் வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார் சசிகுமார். இயக்குநர் பாலாவிடம் சசிகுமார் உதவி இயக்குநராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.