சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் மே 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படம் தொடர்பான பல பேட்டிகளை அளித்து வருகிறார் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி. அப்படி ஒரு பேட்டியில் எந்த இயக்குநருடைய பயணம் மிகவும் பிடித்திருக்கிறது எனக் கேட்கப்பட்டது.
அதற்குப் பதில் ஆர்.ஜே.பாலாஜி, "நிறைய பேர் இருக்கிறார்கள். நான் ஆர் ஜேவாக இருக்கையில், செய்த சினிமா விமர்சனத்தில் `ராஜா ராணி' படத்தைக் கலாய்த்திருக்கிறேன். நான் அப்போது பார்த்த அட்லீக்கும் இப்போது அவரைப் பார்ப்பதற்கும் மிக உத்வேகமாக இருக்கிறது. விஜய் சாருடன் ’தெறி’ படம் எடுக்கும்போது, ஒரு புதுமுக கேமராமேனை வைத்து படத்தை எடுக்கும் நம்பிக்கையே ஆச்சர்யமானது. ஷாருக்கான் படத்தை அவர் எடுத்த விதம். 1,000 கோடி கலெக்ஷனைக்கூட விடுங்கள், அது உருவாக்கிய அதிர்வுகளைப் பாருங்கள். இப்போது அவர் அல்லு அர்ஜுனின் படம் செய்கிறார்.
அவர் மீது நிறைய கிண்டல்கள் வரும். அவர் அந்தப் படத்திலிந்து எடுக்கிறார் என்றெல்லாம் சொன்னாலும், கடைசியாக அந்தப் படத்தின் ரிசல்ட்டைப் பாருங்கள். அப்படியான ஒன்றைக் கொடுக்க எவ்வளவு மன வலிமை தேவை. அவரைத் தூற்றியவர்களை அவர் கண்டுகொள்ளவே இல்லை, வேலையை மட்டுமே பதிலாக கொடுக்கிறார். அட்லீ எனக்கு பெரிய உத்வேகத்தைக் கொடுக்கிறார்.
அவர் கற்பனை செய்யும் கதையை, மற்றவர்களையும் நம்பவைக்கிறார். அது வெளியே இருந்து பார்க்கையில் சுலபமாக இருக்கலாம். உள்ளே இருப்பவருக்குத்தான் கஷ்டம் தெரியும்" என்றார்.