விஷால் - மதகஜராஜா நிகழ்ச்சி புதிய தலைமுறை
கோலிவுட் செய்திகள்

கைநடுக்கத்துடன் பேசிய விஷால்... நேர்த்தியாக சூழலை சமாளித்த தொகுப்பாளினி DD!

பலரும் ‘விஷாலுக்கு என்ன ஆச்சு’ என கேள்வி எழுப்பி வந்த நிலையில், அவரை எவ்வித நெருடலுக்கும் உள்ளாக்காமல் தொகுப்பாளினி டிடி நிகழ்ச்சியை கொண்டு சென்ற விதம் பலரின் மனங்களையும் வென்றுள்ளது.

ஜெ.நிவேதா

10 வருடங்களுக்கு மேலாக கிடப்பில் இருந்த `மத கஜ ராஜா'வும் "நாங்களும் போட்டிக்கு வரலாமா?" என, ஜனவரி 12 ரிலீஸ் ஆக களம் இறங்கி உள்ளது. இந்நிலையில் இன்று இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவெண்ட் நடந்தது. இதில் நடிகர் விஷால், இயக்குநர் சுந்தர்.சி, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி என பலரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை, பிரபல தொகுப்பாளினி டிடி, தொகுத்து வழங்கினார்.

நிகழ்வின் மேடையில் பேசிய நடிகர் விஷால், “அனைவருக்கும் மாலை வணக்கம்... ஜெமினி தயாரிப்பு நிறுவனம், மீண்டும் முழுமையாக தயாரிப்பு பணிக்கு வர வேண்டும் என்பதை இங்கே வலியுறுத்த விரும்புகிறேன். சமீபகாலமாக தயாரிப்பு நிறுவனங்கள் எண்ணிக்கையளவில் குறைந்து வருகின்றன. அப்படி உள்ள தயாரிப்பு நிறுவனங்களும், இயக்குநருக்கும் அவரது படைப்பு திறனுக்கும் வாய்ப்புக் கொடுப்பது குறைவுதான். அதை ஜெமினி தயாரிப்பு நிறுவனம் கொடுக்கும்.

இந்த வருடத்தில், சிறந்த நடிகருக்கான விருது எனக்கு கிடைக்காமல் கூட போகலாம்... ஆனால் சிறந்த பாடகருக்கான விருது கிடைக்கும். நான் ஒரு நிகழ்வை இங்கே நினைவுகூற விரும்புகிறேன். அதற்கு இப்போதே விஜய் ஆண்டனிக்கு நன்றி சொல்கிறேன். இந்த நேரத்தில், படப்பிடிப்பு சமயத்தில் நடந்த ஒரு நிகழ்வை நான் நினைவுகூற விரும்புகிறேன்.

அது என்னவெனில், விஜய் ஆண்டனி என்னிடம் கூறுகையில், ‘எனக்கு ஒரு பாடகர் தேவைப்படுகிறார். அவர் இனிமேல் பாடவேக்கூடாது. அப்படி ஒரு பாடகர், நீங்கள்தான்’ என்றார்” எனக்கூறினார். இதைக்கூறுவதற்குள், விஷாலுக்கு கடுமையாக கைநடுக்கம் ஏற்பட்டது. மட்டுமன்றி குரலும் நடுக்கத்துடனே இருந்தது. இதை அறிந்த நிகழ்ச்சி குழுவினர், சோஃபோ ஒன்றை அவர் அருகே போட்டனர்.

தொடர்ந்து தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, “விஷால் சார், நீங்கள் இந்தக் கதையில் குறிப்பிட்ட விஜய் ஆண்டனி அவர்களையும், சுந்தர் சி அவர்களையும் மேடைக்கு அழைக்கலாமா? மூவரும் அமர்ந்து இதை பேசினால் சிறப்பாக இருக்கும்.

ஏனென்றால் இது அவ்வளவு முக்கியமான கதை... ஒரு பாடல் வைரலாவதெல்லாம் இப்போதுதான் ட்ரெண்டாகி உள்ளது. ஆனால் இதற்கெல்லாம் அடித்தளம் போட்டதே நீங்கள்தான். இப்போதுகூட வைரல் ஃபீவருடன்தான் வந்துள்ளீர்கள்” எனக்கூறி, விஷாலை அமர வைத்தார். தொடர்ந்து மேடை ஏறிய சுந்தர்.சி மற்றும் விஜய் ஆண்டனி, படம் பற்றிய சுவாரஸ்யமான பல விஷயங்களை பகிர்ந்துகொண்டனர். அதை, கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...

பலரும் ‘விஷாலுக்கு என்ன ஆச்சு’ என கேள்வி எழுப்பி வந்த நிலையில், அவரை எவ்வித நெருடலுக்கும் உள்ளாக்காமல் தொகுப்பாளினி டிடி நிகழ்ச்சியை கொண்டு சென்ற விதம் பலரின் மனங்களையும் வென்றுள்ளது.