மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | சௌகார் ஜானகி புதிய தலைமுறை
கோலிவுட் செய்திகள்

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | தில்லு முல்லு ‘டூயல் ரோல்’... பிரகாசமாக மின்னிய சௌகார் ஜானகி

இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘தில்லுமுல்லு’ திரைப்படத்தில் சௌகார் ஜானகி ஏற்று நடித்திருந்த ‘மீனாக்ஷி துரைசாமி’ கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.

சுரேஷ் கண்ணன்

(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

ஒரு நடிகரின் மீதுள்ள பிம்பத்தை அழுத்தமாக துடைத்து விட்டு முற்றிலும் மாற்றி எழுதுவதுதான் எந்தவொரு இயக்குநருக்கும் முன்னால்  உள்ள சவால். அது நடிகருக்குமான சவாலும் கூட. அந்த வகையில் ரஜினிகாந்திற்குள் இருந்த ‘காமெடி நடிகரை’ மிகச் சிறப்பாக கொண்டு வந்த திரைப்படம் ‘தில்லுமுல்லு’. 

இதைப் போல, இதே திரைப்படத்தில் இன்னொரு நடிகரின் நகைச்சுவை நடிப்பும் மிகச் சிறப்பாக பதிவாகியிருந்தது. அது ‘சௌகார்’ ஜானகி. அழுது வடியும் குடும்பத்தலைவியின் பாத்திரம் என்றால் கேள்வியே கேட்காமல் காஸ்ட் செய்து விடும் நடிகைகளுள் ஒருவராக ‘சௌகார்’ ஜானகி இருந்தார். இவருக்குள் உள்ள வித்தியாசமான பரிமாணங்களை வெளிக்கொணர்ந்த இயக்குநர்கள் மிகச் சிலர்தான். அந்த வரிசையில் பாலசந்தர் முக்கியமானவர்.

‘சௌகார்’ ஜானகி

சோகமான பாத்திரங்களில் மட்டுமே அதிகமாக நடித்த சௌகார் ஜானகியை ரகளையான நகைச்சுவை கேரக்டர்களில் நடிக்க வைத்த சிறப்பு பாலசந்தருக்குண்டு. இந்த வரிசையில் ‘மீனாக்ஷி துரைசாமி’ என்ற கேரக்டரில் தில்லுமுல்லு திரைப்படத்தில் அதகளம் செய்திருப்பார் சௌகார் ஜானகி

ரஜினி மாதிரியே டூயல் ரோலில் ஏமாற்றும் சௌகார் ஜானகி

தன்னை ஒழுக்கசீலனாக காட்டிக் கொண்டு ஸ்ரீராமசந்திரமூர்த்தி என்பவரை ஏமாற்றி அவருடைய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறான் சந்திரன்.

‘அம்மா கீழே விழுந்து மண்டையில் அடி’ என்கிற பொய்யைச் சொல்லி ஃபுட்பால் மேட்ச் பார்க்கச் செல்கிறான். அந்தப் பொய் அம்பலமாகவே, கால்பந்து மைதானத்தில் முதலாளி பார்த்தது தனது தம்பியான சந்திரனை என்று இன்னொரு பெரிய பொய்யைச் சொல்கிறான். அந்தப் பொய்யைக் காப்பாற்றுவதற்காக  மீசையைத் துறந்து விட்டு ‘இந்திரன்’ என்கிற புனைப்பெயருடன் இன்னொரு வேடத்தில் முதலாளியைச் சந்தித்து மனதில் இருந்த கோபத்தையெல்லாம் கொட்டி பழிவாங்குகிறான்.

தில்லு முல்லு

ஒழுக்கசீலனாக சந்திரனும், அடங்காத அராத்தாக சந்திரனும் இருப்பதைப் பார்க்கும் ஸ்ரீராமசந்திரமூர்த்தி, “நான் உங்க அம்மாவை பார்க்க வீட்டுக்கு வரேன். இந்திரன் பத்தி அவங்ககிட்ட பேசணும்” என்று சந்திரனிடம் சொல்கிறார். இல்லாத அம்மாவிற்கு சந்திரன் எங்கே போவான்? 

இது குறித்து ஆலோசனை கேட்பதற்காக, தன் நண்பனான நடிகர் நாகேஷை சந்திக்க ஒரு படப்பிடிப்புத் தளத்திற்கு செல்கிறான் சந்திரன். அங்கு ‘சௌகார்’ ஜானகியைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட ஒரு பெண்மணியைப் பார்க்கிறான். ‘அய்யோ.. சௌகார் ஜானகி’ என்று சந்திரன் கத்த, நடிகர் நாகேஷ் டக்கென்று ஒளிந்து கொண்டு அந்த கேரக்டரைப் பத்தி விவரிக்கிறார். 

சௌகார் ஜானகி

“இவங்க சௌகார் ஜானகி இல்ல. அசப்புல பார்த்தா அவங்க மாதிரியே இருப்பாங்க. ஆனா இவங்க வேற. இது ஒரு அலாதியான காரெக்டர். கூடவே ஒரு போட்டோ கிராஃபரும் வருவானே...” என்று சொல்ல அதே போல்  போட்டோகிராஃபர் பின்தொடர நடிகர், நடிகைகளைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் விளம்பர விரும்பியாக அந்தப் பெண்மணி இருக்கிறார்.

விளம்பர விரும்பி - மீனாக்ஷி துரைசாமி

அவருடைய பெயர் மீனாக்ஷி துரைசாமி. எக்கச்சக்கமான சொத்து இருக்கிறது. சில பெண்மணிகளை சேர்த்து வைத்துக் கொண்டு நாடகக்குழு நடத்தி வருகிறார். அவருடைய நடிப்பை யாராவது புகழ்ந்து விட்டால் போதும், அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்.

சௌகார் ஜானகி

இதை அறிந்து கொள்ளும் சந்திரன், மறுநாள் நண்பர்களுடன் மாலை, மரியாதைகளுடன் மீனாக்ஷி துரைசாமியின் வீட்டிற்குச் சென்று அவரை மிகையாகப் புகழ்கிறான். பட்டுப்புடவை, கோல்பிரேம் கண்ணாடி, நுனிநாக்கு ஆங்கிலம் என்று மேட்டுக்குடி பெண்மணியின் தோற்றத்தில் இருக்கிற மீனாக்ஷி இவர்களின் புகழ்ச்சி காரணமாக குளிர்ந்து விடுகிறார். 

“நேத்து நைட்டு உங்க டிராமாவைப் பார்த்தோம். என்னவொரு நடிப்பு?”.. என்று சந்திரன் ஐஸ் வைக்க

“இன்னிக்கு காலைல ராமசாமி கூட போன் பண்ணி இதைத்தான் சொன்னாரு.. ராமசாமி தெரியுமில்ல.. சோ..” என்று பெரிய மனிதர்களின் பெயர்களையெல்லாம் வரிசையாக சொல்லி பந்தா செய்கிறார் மீனாகஷி.

“ஓவரா போகாதடா” என்று நண்பன் ஒருவன் எச்சரிக்க

“இரு. அடுத்து ஒரு ஸ்பெஷல் அயிட்டமா கடைசியா எறக்கறேன்” என்னும் சந்திரன்,

“ஏங்க.. உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா.. என்ன. ஒரு இருபது, இருபத்தைந்து வயசு இருக்குமா?” என்று வாய் கூசாமல் கேட்க, அதைக் கேட்டு வாய் விட்டுச் சிரிக்கும் மீனாக்ஷி,

“நாற்பத்தைந்து வயசு ஆகுது” என்று சொல்ல அதை நம்ப முடியாதது போல் சந்திரனும் அவனது நண்பர்களும் நடிக்கிறார்கள்.

சௌகார் ஜானகி

“என்னது அம்மா வேஷமா..?” - ஜெர்க் ஆகும் நடிகை

“நீங்க எனக்காக ஒரு வேஷம் போடணும்” என்று சந்திரன் தயங்கிக் கொண்டே கேட்க “இதுக்காப்பா தயங்கினீங்க.. என்ன வேஷம்?” என்று மீனாக்ஷி கேட்க “அம்மா வேஷம்” என்றதும் திடுக்கென்று எழுந்து கொள்ளும் மீனாக்ஷி,

“இதுவரைக்கும் நான் போட்டதே இல்லையே.. ஜனங்க ஒத்துக்குவாங்களா?” என்று அதிர்ச்சியுடன் கேட்கிறார். இது நாடகத்தில் நடிக்கிற வேஷமில்லை, ஸ்ரீராமசந்திரமூர்த்தி என்கிற ஒரேயொரு மனிதரை நிஜத்தில் ஏமாற்றுவதற்காக போடும் வேஷம் என்பதை விளக்கிச் சொல்கிறான் சந்திரன். 

“எனக்குப் பயமா இருக்கே” என்று தயங்கும் மீனாக்ஷிக்கு சந்திரனும் அவனது தங்கையும் தைரியம் சொல்கிறார்கள். “இப்ப.. உங்க நாடகத்துல நடிக்கற ஒருத்தர் வரலைன்னா.. அவருக்குப் பதிலா நீங்க நடிக்கறதில்ல?! அந்த மாதிரிதான்” என்று அவரை விதவை வேடத்திற்கு மாற்றுகிறார்கள். 

சொன்னபடி ஸ்ரீராமசந்திரமூர்த்தி சந்திரனின் வீட்டிற்கு வருகிறார். உடம்பை பவ்யமாக மாற்றிக் கொள்ளும் மீனாக்ஷி, “வாங்க.. நீங்க எங்க வீட்டுக்கு வந்தது, நாங்க செஞ்ச பாக்கியம்” என்று வரவேற்கிறார். “அது நான் செஞ்ச பாக்கியம்” என்று முதலாளி பதிலுக்கு பணிவு காட்டுகிறார்.

“இப்படியொரு லட்சிய மகனை பெத்தெடுத்ததுக்கு நீங்க ரொம்ப பெருமைப்படணும்மா” என்று முதலாளி புகழ “ரொம்ப நன்றி மிஸ்டர் அறிவுடைநம்பி கலியபெருமாள்” என்று பெயரை மாற்றிச் சொல்லி சொதப்புகிறார் மீனாக்ஷி. அது சந்திரனின் தந்தையுடைய பெயர்.

இதைக் கேட்டு முதலாளி அதிர்ச்சியடைய அந்தச் சொதப்பலை சந்திரன் ரிப்போ் செய்கிறான். “அதாவது.. இறந்து போன அப்பா ஸ்நானத்துல நீங்க இருந்து என்னைப் பார்த்துக்கறீங்கன்னு அம்மா கிட்ட அடிக்கடி சொல்வேன். அதைத்தான் இப்படி சொல்றாங்க” என்று சமாளிக்கிறான். அதற்கேற்ப மீனாக்ஷியும் தனது பொய்களை மாற்றிக் கொள்கிறார். 

தடுமாறும் அம்மா - சமாளிக்கும் மகன்

“அவன் எங்கே இந்திரன்?” என்று முதலாளி கேட்க “யார் அது இந்திரன்?” என்று மீனாக்ஷி வெள்ளந்தியாகக் கேட்க சந்திரனுக்கு தூக்கி வாரிப் போடுகிறது.

“ஈன்ற பொழுதுதின் பெரிதுவக்கும் தன் மகனை…. சான்றோன் எனக் கேட்டாதானே சார் அவ தாய். அப்படியொரு பிள்ளையைப் பெத்ததையே எங்க அம்மா மறந்துட்டாங்க” என்று சந்திரன் சமாளிக்க ‘அச்சச்சோ..’ என்று வருந்துகிறார் முதலாளி. 

சௌகார் ஜானகி

“சின்னக் குழந்தையா இருக்கறப்ப.. எப்படி ரெண்டு குழந்தைக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பீங்க?” என்று முதலாளி கேட்க “மீசைதான்” என்று சமகால அடையாளத்தை சட்டென்று சொல்லி நாக்கைக் கடித்துக் கொள்கிறார் மீனாக்ஷி. “என்னது பிறந்த குழந்தைக்கு மீசையா?” என்று முதலாளி ஜெர்க் ஆக இங்கேயும் சந்திரன்தான் சமாளிக்க வேண்டியிருக்கிறது.

“அதை ஏன் சார் கேக்கறீங்க.. சின்ன வயசுல எனக்கு சுரம் வந்தா அவனுக்கு மருந்து கொடுத்துடுவாங்க. அவன் இருமினா எனக்கு தண்ணி கொடுப்பாங்க.. எங்க அப்பா பார்த்தாரு.. வித்தியாசம் தெரியறதுக்காக எனக்கு பென்சில்ல மீசை வரைஞ்சுட்டாரு” என்று இஷ்டத்திற்கு அடித்து விட

“உங்க அப்பா ஒரு மகானுபாவர்ப்பா” என்று சிலிர்த்துப் போகிறார் முதலாளி. 

‘காந்தி வீட்டுக்கு வந்திருக்கிறார். மவுண்ட்பேட்டன் பிரபுவிடமிருந்து அம்மா சில ஆங்கில வார்த்தைகள் கற்றுக் கொண்டார்’ என்றெல்லாம் சந்திரன் அடித்து விட, தேசபக்தி அதிகமுள்ள முதலாளி, ‘என்னவொரு குடும்பம்’ என்று புல்லரித்துப் போகிறார். 

சௌகார் ஜானகி

அக்கா - தங்கையாக பிராடு செய்யும் சௌகார் ஜானகி

ஸ்ரீராமசந்திரமூர்த்தி ஒரு பார்ட்டிக்கு செல்கிறார். அங்கு சந்திரனின் அம்மாவை பட்டுப்புடவை, கோல்டுபிரேம் கண்ணாடி என்கிற கெட்டப்பில் பார்த்து அதிர்ச்சியடைகிறார். அவரிடமிருந்து தப்பித்து தப்பித்து ஒளிந்து கொள்ளும் மீனாக்ஷி, ஒரு கட்டத்தில் நேருக்கு நேராக முதலாளியைச் சந்திக்க நேர்கிறது. அப்போதுதான் தான் ஒரு சிறந்த நடிகை என்பதை மெய்ப்பிக்கிறார்.

“நீங்க சந்திரனோட அம்மாதானே.. உங்க வேஷத்தை பொதுவில் அம்பலப்படுத்தட்டுமா?” என்று முதலாளி ஆத்திரத்துடன் கேட்க “நீங்க யாரைச் சொல்றீங்க.. ஓ.. என்னோட அக்காவைப் பார்த்திருப்பீங்க. அவங்கதான் மிஸஸ். அறிவுடைநம்பி கலியபெருமாள். அவங்களுக்கு ரெண்டு பசங்க இந்திரன், சந்திரன்.. ஒரு பொண்ணு உமா” என்று அடித்து விட

“என்னது.. இங்கயும் இரட்டையா.. இது என்ன உங்க பரம்பரை வியாதியா?” என்று ஜொ்க் ஆகிறார் முதலாளி. 

சௌகார் ஜானகி

“நீ காரை நேரா சந்திரன் வீட்டுக்கு விடு. எனக்கு ஒரு டவுட்டை கிளியர் பண்ணணும்” என்று டிரைவரிடம் சொல்கிறார் ஸ்ரீராமசந்திரமூர்த்தி. இந்திரனின் கெட்டப்பில் மீசையில்லாமல் நண்பர்களுடன் சீட்டாடிக் கொண்டிருப்பவன், முதலாளியைப் பார்த்து ஜொ்க் ஆனாலும் சமாளித்துக் கொண்டு “என்ன மிஸ்டர் ஸ்ரீராம்.. இவ்வளவு தூரம்?” என்று அமர்த்தலாக கேட்கிறான். “உங்க அம்மாவை நான் பார்க்கணும்” என்று முதலாளி கறாராகச் சொல்ல “கோவிலுக்குப் போயிருக்காங்க” என்று தங்கையும் “ஊருக்குப் போயிருக்காங்க” என்று இந்திரனும் ஒரே நேரத்தில் சொல்ல முதலாளி சந்தேகமாகப் பார்க்கிறார். 

சுவர் ஏறி குதித்து சாகசம் செய்யும் சௌகார்

“சார்.. அவங்க கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போயிருக்காங்க.. அது மைலாப்பூர்ல இருக்கு. அதான்” என்று இந்திரன் சமாளிக்கிறான். அடுத்த கேள்விக்கு இருவருமே ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு ‘நீ சொல்லு’ எனகிற மாதிரி காத்திருப்பது நல்ல நகைச்சுவை. “அம்மாவைப் பார்க்காம இங்கிருந்து நகர மாட்டேன்” என்று பிடிவாதம் பிடிக்கும் முதலாளியை ஒருவழியாக சமாளித்துக் கொண்டிருக்கிறான் இந்திரன். 

சௌகார் ஜானகி

ஸ்ரீராமசந்திரமூர்த்திக்கு சந்தேகம் வந்து விட்டதை உணரும் மீனாக்ஷி, பட்டுப் புடவையின் பார்ட்டி கோலத்தில் சந்திரனின் வீட்டிற்கு பின்புறமாக செல்கிறார். இதுவரைக்கும் எந்தவொரு நடுத்தர வயது நடிகையாவது இப்படியெல்லாம் சாகசம் செய்திருப்பாரா என்னும் படி சுவற்றில் ஏறி, ஜன்னலின் வழியாக உள்ளே குதித்து, உடையை மாற்றிக் கொண்டு அப்போதுதான் குளித்துவிட்டு வருவது போல வீட்டிற்குள் இருந்து வருவதைக் கண்டு இந்திரன் மகிழ்ச்சியடைந்து “இவ்வளவு நேரம் உள்ளயா குளிச்சிட்டிருந்தீங்க.. இருந்தாலும் நீங்க ரொம்ப குளிக்கறீங்கம்மா?” என்று கிண்டல் செய்கிறான். 

“அம்மா.. நீங்க இவரோட பேசிட்டிருங்க. அவர் இங்கயே இருந்து சந்திரனைப் பார்த்துட்டுதான் போவாராம்” என்று வெளியே கிளம்புகிறான் இந்திரன். “இந்த நேரத்துல எங்கப்பா போற?” என்று முதலாளி கேட்க “கல்யாணராமன். படத்துக்கு. கமல்ஹாசன்..  டபுள் ரோல்” என்று ஸ்டைலாக சொல்லி விட்டு புறப்படுகிறான். 

சௌகார் ஜானகி

“ஏமாத்தறவனை விட ஏமார்றவனுக்குத்தான் அதிக தண்டனை”

“ஒரு பார்ட்டிக்கு போயிருந்தேன். அவங்களைப் பார்த்தேன்” என்று முதலாளி பேச்சை ஆரம்பிக்க “யாரு.. எனக்கு பார்ட்டில்லாம் ஒண்ணும் தெரியாது. என் தங்கச்சியைப் பார்த்திருப்பீங்க. மீனாக்ஷி துரைசாமி. பார்ட்டின்னா அலைவா.. நான் அவளைப் பார்த்தே ரொம்ப நாளாச்சு” என்று மிஸஸ்.அறிவுடைநம்பி கலியபெருமாள் பவ்யமாக நடிக்க

“அவங்க உங்களுக்கு நேர்மாறு.. நீங்க வெளுப்புன்னா அவங்க மாநிறம்.. உங்களை விட கொஞ்சம் ஹைட்டு.. கரெக்டா?” என்று முதலாளி வெள்ளந்தியாக கேட்க “அடடா.. என்னமா நோட் பண்ணியிருக்கீங்க சார்” என்று அம்மா புகழ்வதெல்லாம் அல்டிமேட் காமெடி. “என்னம்மா. பண்றது.. அப்படியல்லாம் இல்லாட்டி இந்த உலகத்துல ஏமாத்திடுவாங்கம்மா” என்று முதலாளி சொல்வது கூடுதல் நகைச்சுவை. 

சுவாமி சின்மயானந்தாவின் உபதேசத்திற்குச் சென்று விட்டு திரும்புவது போன்ற பாவனையுடன் வீட்டிற்குள் நுழைகிறான் ‘சந்திரன்’.  முதலாளியின் காலைத் தொட்டு வணங்குகிறான். “அடடா.. என்னவொரு பணிவு” என்று மகிழும் முதலாளி,

“சின்மயானந்தா.. என்னப்பா சொல்றாரு?” என்று கேட்க “உடல் அழுக்கா இருந்தாலும் பரவாயில்ல. உள்ளம் அழுக்கா இருக்கக்கூடாதுன்னு சொல்றாரு. அவர் சொல்றாரு சார்.. உலகத்துல ஏமாத்தறவனுக்கு கொடுக்க வேண்டிய தண்டனையை விட ஏமார்றானே.. அவனுக்குத்தான் அதிக தண்டனை கொடுக்கணும்ன்னு சொல்றார் சார்” என்று சொல்ல சிரிப்பை அடக்க முடியாமல் வாயைப் பொத்திக் கொள்கிறாள் தங்கை. 

சௌகார் ஜானகி

“என்ன தத்துவம் பார்த்தியா.. அவர் சொன்னது நூத்துக்கு நூறு உண்மை. அயோக்கியனைக் கூட விட்டுடலாம். முட்டாளை நிக்க வெச்சு சுடணும். You can be a cheat. Not a fool” என்று முதலாளி சொல்வதெல்லாம் சொந்த செலவு சூன்யம் போலவே இருக்கிறது. கிளம்பிச் செல்லும் முதலாளி மீண்டும் திரும்பி வந்து “நீங்களும் உங்க தங்கச்சியும் அடுத்த வாரம் விருந்திற்கு வர்றீங்க” என்று உத்தரவு போல சொல்லி விட்டுச் செல்ல, மீனாக்ஷி துரைசாமி கம் மிஸஸ்.அறிவுடைநம்பி கலியபெருமாள் மயங்கி விழுகிறாள். 

‘தில்லுமுல்லு’ திரைப்படத்தில் ஹீரோவான ரஜினிகாந்த்தைத் தாண்டி, இன்னொரு பாத்திரம் ‘டூயல் ரோல்’ செய்கிறது என்றால் அது ‘சௌகார்’ ஜானகி பாத்திரம்தான். ஹீரோயினாகவும் குணச்சித்திர நடிகையாகவும் பெயர் பெற்ற சௌகார், நகைச்சுவை பாத்திரத்தில் மின்னிய படங்களின் உச்சம் என்று ‘தில்லுமுல்லு’வைச் சொல்லலாம்.