பிரகாஷ் ராஜ் ஓ காதல் கண்மணி
கோலிவுட் செய்திகள்

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்: ‘ஓ காதல் கண்மணி’ கணபதி Uncle-ஆக கவனம் ஈர்த்த பிரகாஷ் ராஜ்!

இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ் ஏற்று நடித்திருந்த ‘கணபதி அங்கிள்’ கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.

சுரேஷ் கண்ணன்

பிரகாஷ்ராஜின் குணச்சித்திர நடிப்பைப் பற்றி அதிகமாக விளக்க வேண்டியதில்லை. எந்தவொரு பாத்திரமாக இருந்தாலும் அதில் கூடு பாய்ந்து விடும் வல்லமை கொண்டவர். அதிலும் மணிரத்னம் போன்ற சிறந்த இயக்குநர்களுடன் இணையும் போது பிரகாஷ்ராஜின் நடிப்பு கூடுதல் பிரகாசத்தை அடையும். 

(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

பிரகாஷ் ராஜ்

அப்படியொரு காரெக்டர் ‘கணபதி அங்கிள்’. ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படத்தில் அல்சைமர் சவாலை எதிர்கொள்ளும் தன் மனைவியிடம் பிரியம் சிறிதும் குறையாத கணவனின் பாத்திரத்தில் இயல்பான நடிப்பைத் தந்திருப்பார். அதே சமயத்தில் நீங்கள் எதிர்கொண்டிருக்கும் எந்தவொரு ‘சிடுமூஞ்சி ஹவுஸ் ஓனரையும்’ நினைவுப்படுத்துவார். அதிகம் அலட்டிக் கொள்ளாமல் சின்னச் சின்ன உடல் அசைவுகளிலேயே உணர்வுகளைக் கடத்தி விடுவார். Effortless acting என்பதற்கான உதாரணம்.

ஆதர்ச தாம்பத்தியத்தின் முன்னுதாரணம்

ஓ காதல் கண்மணி’ திரைப்படத்தை ‘மௌன ராகத்தின்’ மாடர்ன் வெர்ஷன் எனலாம். மௌனராகத்தில் வலுக்கட்டாயமாக இணையும் ஒரு தம்பதியினர், தங்களுக்குள் இருக்கிற அன்பை ஓரிடத்தில் கண்டு கொள்வார்கள். ‘ஓ காதல் கண்மணியில்’ பிரிவு நிச்சயம் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு  ‘ரிலேஷன்ஷிப்பில்’ நுழையும் ஒரு இளம்தலைமுறை ஜோடி, தங்களுக்குள் ஒளிந்திருக்கிற அன்பை இறுதியில் கண்டுகொள்கிறது. 

ஓ காதல் கண்மணி

மூத்த தலைமுறையினரின் ஆதர்சமான தாம்பத்தியத்தைப் பார்த்து இளம் தலைமுறை தூண்டுதல் அடையும் விதத்தில், ‘அலைபாயுதே’ திரைப்படத்தின் சாயலையும்  ‘ஓ காதல் கண்மணி’ கொண்டிருக்கிறது. இளம் வயதின் உற்சாகம் காரணமாக காதலில் விழுந்து அவசர திருமணம் செய்யும் கார்த்திக்கும் சக்தியும் சில நாட்களிலேயே ஒப்பனைகள் கலைந்து அதே அவசரத்தில் விவாகரத்திற்கு விண்ணப்பிக்க நினைக்கும் போது, விபத்து ஏற்படுத்திய மனைவியை அவளது கணவன் எப்படியெல்லாம் அரவணைத்து பாதுகாக்கிறான் என்பதைப் பார்க்கும் கார்த்திக் மனம் மாறுகிறான். 

ஓ காதல் கண்மணி’ திரைப்படத்திலும் இதுவேதான் நிகழ்கிறது. திருமண நிச்சயதார்த்தம் போல பிரிவை நிச்சயித்துக் கொண்டு ‘லிவ் இன்’ உறவிற்குள் நுழையும் ஓர் இளம் ஜோடி, ஹவுஸ் ஓனர் தம்பதியினரின் மகத்தான தாம்பத்திய உறவை முன்னுதாரணமாகக் கொண்டு தங்களிடமுள்ள அன்பை இனம் காண்கிறார்கள். 

பிரகாஷ் ராஜ்

கறாரும் கனிவும் இணைந்த கலவை - கணபதி அங்கிள்

கறாரான ஹவுஸ் ஓனர், அற்புதமான காதல் கணவன் என்று இரு பரிமாணங்களிலும் அற்புதமான நடிப்பைத் தந்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

ஆதித்யா வரதராஜன். சுருக்கமாக ஆதி. நவீன இளம்தலைமுறையின் கச்சிதமான பிரதிநிதி. வீடியோ கேம் டெவலப்பர். தன் கனவைத் தேடி மும்பைக்கு வருகிறான். அங்கிருந்து அமொிக்கா செல்வது நோக்கம். உறவுகளினால் ஏற்படும் சிறைக்கம்பிகளுக்குள் வாழ விரும்பாத சுதந்திரவாசி. இதே போன்றதொரு எண்ணமுடைய பெண்ணைச் சந்திக்கிறான். அவர்களுக்குள் என்னவெல்லாம் நிகழ்கிறது என்பதுதான் இந்தத் திரைப்படம். 

மும்பைக்கு வரும் ஆதி, கணபதி ஐயர் என்பவரின் வீட்டில் பேயிங் கெஸ்ட்டாக தங்குகிறான். ஆதியின் அண்ணன், கணபதியிடம் ஜூனியராக பணிபுரிந்தவர். அந்த அறிமுகம் காரணமாக ஆதிக்கு தங்க இடம் கிடைக்கிறது. லேட் நைட் பார்ட்டி, சிகரெட் போன்றவையெல்லாம் கணபதிக்கு ஆகாது. இப்படியொரு உத்தரவாதங்களுடன்தான் சம்மதிக்கிறார்.

பிரகாஷ் ராஜ்

சிடுமூஞ்சி ஹவுஸ்ஓனராக பிரகாஷ்ராஜ்

கணபதி அங்கிளின் அறிமுகம். பம்பாய், மும்பையாக மாறுவதற்கு முன்பே செட்டில் ஆகி விட்ட தமிழ் பிராமணக் குடும்பத்தின் பிரதிநிதியை கச்சிதமாக பிரதிபலிக்கும்படியான தோற்றம். மெலிதான மீசை, தடித்த பிரேம் கண்ணாடி, ஆங்கில நாளிதழின் கிராஸ்வேர்ட் பகுதியை சிரமப்பட்டு நிரப்பிக் கொண்டிருக்கும் கணபதியின் பின்னால் இருந்து குரல் கேட்கிறது.

“நான் ஆதி. வாசுவோட தம்பி”. முறைப்பான குரலில் கணபதி கேட்கிறார்.

“டிரையின் லேட்டா?”

“இல்ல. நண்பன் லேட் பண்ணிட்டான்”. 

அந்த நவீன இளைஞனை முதல் பார்வையிலேயே கணபதிக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. நிச்சயம் பார்ட்டி, டிரிங்க்ஸ் என்று ஊர் சுற்றுகிற இளைஞன். எனவே “சில கண்டிஷன்ஸ் இருக்கு” என்று அவர் ஆரம்பிப்பதற்கு முன்பே “வாசு சொன்னாரு..” என்று ஆதி சொல்ல, வாசு பணியில் தன்னுடைய ஜூனியர் என்பதால் “என்ன சொன்னான்?” என்று தெனாவெட்டாக கேட்கிறார் கணபதி.

“நீங்க ரொம்ப ஸ்ட்டிரிக்ட். வாடகை கரெக்ட் டைமிற்கு கொடுத்துடணும். ரூமை க்ளீனா வெச்சுக்கணும்” என்றெல்லாம் ஆதி வரிசையாக சொல்ல “ம்.. வேறென்ன சொன்னான்?” என்கிறார் கணபதி.

பிரகாஷ் ராஜ்

“மிச்சத்தை அனன்யா சொன்னா. ஆன்ட்டி கர்நாட்டிக் சிங்கர். அவங்க ரொம்ப ஸ்வீட். நீங்கதான் கொஞ்சம் முசுடுன்னு” என்று ஆதி துடுக்காக சொல்லி விட அவனை முறைக்கிறார் கணபதி. “இதுக்கு சிரிக்கறதா.. வெளிய போ-ன்னு துரத்தறதா..” என்று கணபதி சிடுமூஞ்சி ஹவுஸ்ஓனராக மாற கூடவிருக்கும் நண்பர்கள் சமாதானப்படுத்துகிறார்கள். “வாசுக்காகத்தான் வீட்டை விடறேன். ஒரு மாசம் டைம்” என்று தற்காலிக அனுமதியை வழங்குகிறார் கணபதி. 

கணபதி அங்கிளின் இன்னொரு பரிமாணம்

மெல்ல மெல்ல அந்த வீட்டின் ஒரு உறுப்பினராக மாறுகிறான் ஆதி. “நான் முனிசிபல் ஆபிஸ் போக வேண்டியிருக்கு. லஞ்சம் தர மாட்டேன். நேராதான் போய் கேட்கணும். அதனால பவானியை நீதான் சாயந்திரம் கச்சோிக்கு கூட்டிட்டு போகணும்” என்று தவிர்க்க முடியாத கட்டளையாக ஆதிக்கு வழங்குகிறார் கணபதி. 

லீலா சாம்சன் - துல்கர் சல்மான்

ஆனால் அந்தப் பயணம் ஆதிக்கு அத்தனை இனிமையானதாக இல்லை. “யாரு நீ. ஏன் பின்னாடியே வரே?” என்று ஆதியை துரத்த முயல்கிறார் பவானி. மூத்த கர்நாடக இசைப் பாடகர் என்பதால் பலரும் பவானியை மரியாதையுடன் வணங்குகிறார்கள். ஆனால் ஆதியோ கச்சோியை ரசிக்காமல் தூங்க ஆரம்பிக்க அவனை இன்னமும் பவானிக்குப் பிடிக்காமல் போய் விடுகிறது.

இருவரும் பரஸ்பர எரிச்சலுடன் வீடு திரும்புகிறார்கள். கதவைத் திறக்கும் கணபதியை கட்டியணைத்துக் கொள்ளும் ஆதி “நீங்க ரொம்ப கிரேட் அங்கிள். தெய்வம் மாதிரி” என்று சொல்லி விலகுகிறான். 

தன் மனைவி பவானியை மிக பரிவாகவும் பிரியமாகவும் மரியாதையாகவும் கணபதி நடத்தும் பல காட்சிகளை காண முடிகிறது. அந்த வீட்டின் சமையல் கணபதிதான் என்பதும் பல காட்சிகளின் வழியாக அறிய முடிகிறது. 

பிரகாஷ் ராஜ்

ஏற்கெனவே சமைத்து சாப்பிட்ட நினைவே இல்லாமல் “டைம் ஆச்சு” என்று உணவு சமைக்க ஆரம்பிக்கும் பவானியிடம் சாப்பிட்டதை மிருதுவாக நினைவுப்படுத்துகிறார் கணபதி. வியப்பாக பார்க்கும் ஆதியிடம் “அல்சைமர் ஆரம்ப ஸ்டேஜ். அவளுக்கே இது தெரியுது. அதனாலதான் அப்பப்ப கொஞ்சம் ஹிஸ்டீரிக்கலா நடந்துப்பா” என்று கணபதி சொல்ல

“எப்படி சமாளிக்கறீங்க, என்னாலலாம் நிச்சயம் முடியாது” என்று புன்னகைக்கிறான் ஆதி. “காலைல.. கணபதி..ன்னு கூப்பிடுவா.. பாரு.. அதுவே பேரானந்தம்" என்பது போல் கணபதி சொல்லும் காட்சியில் பிரகாஷ்ராஜின் நடிப்பு அருமையாக இருக்கிறது. 

‘என்னது லிவ் இன் ரிலேஷனா?’ - அதிர்ச்சியடையும் கணபதி

கணபதிக்கும் பவானிக்கும் எப்படி திருமணம் நடந்தது? இசையுலகில் பிரபலமான பாடகியாக இருந்த பவானி மீது பல இளைஞர்கள் மையல் கொண்டிருந்தனர். அதில் கணபதியின் நண்பனும் ஒருவன். காதல் கடிதத்தை நேரில் தர துணிச்சல் இல்லாமல் கணபதியின் மூலமாக தந்தனுப்ப, அது கணபதி எழுதிய கடிதம் என்று பவானியின் குடும்பத்தார் நினைத்துக் கொள்ள, தங்களின் திருமணம் கலாட்டாவாக நடந்ததை கணபதியும் பவானியும் விவரிக்கும் காட்சி சுவாரசியமானது. 

பிரகாஷ் ராஜ் - நித்யா மேனன் - லீலா சாம்சன் - துல்கர் சல்மான்

தாரா என்கிற பெண்ணை தன்னுடைய அறையில் தங்க வைக்கலாமா என்று அழைத்து வருகிறான் ஆதி. ‘ஒரே ரூம்லயா?’ என்று அதிர்ச்சியடையும் கணபதி, “நீங்க என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா.. உங்க அண்ணன் வாசுவிற்குத் தெரியுமா?” என்றெல்லாம் மிடில் கிளாஸ் மனோபாவத்துடன் பதட்டப்படுகிறார். “இந்த லிவ் இன் ரிலேஷன்ஷிப்ன்றாங்களே. அதுவா.. நோ சான்ஸ்.” எனகிறார்.  “பவானியைப் பார்த்துக்க ரெண்டு போ் இருப்பாங்க” என்று கன்வின்ஸ் செய்ய முயல்கிறான் ஆதி. “இல்ல.. பவானி இதுக்கெல்லாம் சம்மதிக்க மாட்டா” என்று கணபதி கறாராக சொல்ல, தாரா தனது பாட்டுப்பாடும் திறமையின் மூலம் அதற்குள் பவானியின் அபிமானத்தைப் பெற்று விடுகிறாள். எனவே கணபதிக்கு வேறுவழியில்லை. 

ஆதியின் அண்ணனும் அண்ணியும் ஒரு நாள் சர்ப்ரைஸ் விசிட்டாக மும்பைக்கு வந்து விட ‘தாரா, கணபதி அங்கிளின் தங்கை பெண்’ என்று பொய் சொல்லி சமாளிக்கிறான் ஆதி. கணபதியிடம் அதை வழிமொழியச் சொல்லி திருட்டுக் கெஞ்சு கெஞ்சுகிறான். ‘லஞ்சம் தர மாட்டேன்’ என்கிற கொள்கைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் கணபதி, இந்த திடீர் பொய்யை ஒரு மாதிரியாக சமாளிக்கிறார். அதற்கு காரணம் ஆதி மற்றும் தாராவின் மீது அவருக்கு ஏற்பட்டு விட்ட தன்னிச்சையான பிரியம்.

இளம் தலைமுறைக்கு வழிகாட்டும் மூத்த தலைமுறை

பிரகாஷ் ராஜ் - லீலா சாம்சன்

பிரிவை இலக்காகக் கொண்டு துவங்கினாலும் ஆதிக்கும் தாராவிற்குமான உறவு ஆழமாக பயணிக்கிறது. ஓரிரவில் தூங்காமல் விழித்திருக்கும் தாராவிடம் உரையாடலை ஆரம்பிக்கிறார் கணபதி. படிப்பிற்காக பாரிஸ் செல்லவிருக்கும் தாரா, ஆதியின் பிரிவை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறாள். “ஆறு மாசம் முன்னாடி கேட்டா என்னோட கரியர்தான் முக்கியம்ன்னு சொல்லியிருப்பேன். இப்ப கொஞ்சம் பேராசைக்காரியா ஆயிட்டேன். ரெண்டுமே வேணும்னு தோணுது” என்று கசப்பான புன்னகையுடன் தாரா சொல்ல அந்த உணர்வை கணபதியால் புரிந்து கொள்ள முடிகிறது. 

பவானி ஒரு நாள் காணாமல் போகிறார். துடித்துப் போகும் கணபதி எங்கேங்கோ தேடுகிறார். ஆதியும் தாராவும் கொட்டும் மழையில் எங்கெங்கோ தேடுகிறார்கள். அந்தப் பயணத்தில்தான் அவர்கள் ஒருவரையொருவர் ஆழமாக இனம் கண்டுகொள்கிறார்கள்.

“கணபதி அங்கிள் மாதிரி பார்த்துக்குவேன்” என்று ஆதி சொல்வதைக் கேட்டு தாரா நெகிழ்கிறாள். வீட்டிற்கு வழி தெரியாமல் சாலையின் நடுவில் நின்று கொண்டிருக்கும் பவானியை இருவரும் பத்திரமாக அழைத்து வருகிறார்கள். 

துல்கர் சல்மான் - நித்யா மேனன்

வாசலிலேயே காத்திருக்கும் கணபதி, குடையை உதறி விட்டு பதட்டத்துடன் ஓடிப் போய் பவானியை கட்டியணைக்கும் காட்சி நெகிழ்வை ஏற்படுத்தக்கூடியது. “எங்க போயிட்டிங்க.. காலைல இருந்து தேடறேன். இப்படியா சொல்லாம கொள்ளாம போவாங்க?” என்று பவானி கேட்கிறார். அது இவர் கேட்க வேண்டிய கேள்வி. என்றாலும் மனைவியின் நிலைமையைப் புரிந்து கொண்டு “இனிமே அப்படி போக மாட்டேன்” என்று பரிவுடன் அணைத்துச் செல்கிறார்.

நித்யா மேனன் - லீலா சாம்சன் -

நோய்வாய்ப்பட்டிருக்கும் காதல் மனைவியை பரிவுடன் பார்த்துக் கொள்ளும் இனிமையான கணவனாக இருக்கிறார் கணபதி. லிவ் இன், பிரேக் அப் என்று எளிய சூத்திரங்களின் மூலம் மிகப் பொிய வாழக்கையை அவசரம் அவசரமாக முடிவு செய்யும் இளம் தலைமுறையினரை சரியாக வழிநடத்தும் முன்னுதாரணமாக இருக்கும் ‘கணபதி அங்கிள்’ பாத்திரத்தில் நடித்த பிரகாஷ்ராஜின் நடிப்பு சிறப்பானது.