NBK Akhanda 2
கோலிவுட் செய்திகள்

`அகண்டா 2' சனாதன தர்மம் பற்றி பேசும் - நந்தமுரி பாலகிருஷ்ணா | NBK | Akhanda 2 | Boyapati Sreenu

சனாதன தர்மம் என்றால் என்ன என முந்தைய தலைமுறைக்கு தெரியும், ஆனால் அடுத்த தலைமுறைக்கும் அது தெரிய வேண்டும். அதை சொல்ல சினிமா ஒரு நல்ல தளம்.

Johnson

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் போயபட்டி ஸ்ரீனு இயக்கியுள்ள `அகண்டா 2 தாண்டவம்' படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய பாலகிருஷ்ணா "இங்கு வந்தது என்னுடைய சொந்த வீட்டுக்கு வந்ததை போல் இருக்கிறது. நான் சென்னையில் பிறந்தவன். சென்னை என் சொந்தபூமி, தெலங்கானா என் கர்மபூமி, ஆந்திரா என் ஆத்மபூமி.

`அகண்டா' படம் கோவிட் சமயத்தில் வெளியானது. படம் பார்க்க ஆட்கள் வருவார்களா என பயந்து வெளியிடலாமா வேண்டாமா என யோசித்தோம். ஆனாலும் சரி வெளியிடலாம் என முடிவு செய்தோம். கோவிட் காலத்தில் வெளியான பெரிய படம் இது தான். படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டானது. ரசிகர்களுக்கு அப்படியான படம் தேவையாக இருந்தது. மேலும் சினிமாக்காரர்களுக்கும் நம்பிக்கை வந்து அவர்களது படங்களை வெளியிட்டனர்.

Akhanda 2

இப்போது போயபட்டி ஸ்ரீனுவுடனான காம்பினேஷன் பற்றி கூற வேண்டும். `சிம்ஹா', `லெஜெண்ட்', `அகண்டா' படங்கள் செய்தோம். எல்லாமே சூப்பர்ஹிட். இப்போது நான்காவது முறையாக `அகண்டா 2'. எப்போதும் அவருடைய கதையில் நான் தலையிடமாட்டேன். ஏனென்றால் எங்களது அலைவரிசை ஒத்துப்போகும். ஒரே நாளில் எல்லாம் ஓகேயாகும், அடுத்து லுக் டெஸ்ட், பின்பு ஷூட்டிங். இந்தப் படத்தை ஜார்ஜியா, மத்திய பிரதேஷ், ஆந்திர காடுகள் என பல இடங்களில் எடுத்தாலும், 130 நாட்களில் எடுத்து முடித்தோம். தெய்வ சக்தி இல்லாமல் இதெல்லாம் நடக்காது.

சனாதன தர்மம் என்றால் என்ன என முந்தைய தலைமுறைக்கு தெரியும், ஆனால் அடுத்த தலைமுறைக்கும் அது தெரிய வேண்டும். அதை சொல்ல சினிமா ஒரு நல்ல தளம். வழக்கமான அவர்கள் வாழ்க்கையில் இப்படியான ஒரு படம் பார்க்கும் போது, நிம்மதி கிடைக்கும் கூடவே சனாதன தர்மத்தை பற்றயும் அவர்கள் அறிந்து கொள்வார்கள். சத்தியத்திற்காக போராட வேண்டும், நல்வழியில் நடக்க வேண்டும், அநியாயத்தை எதிர்க்க வேண்டும் இவை எல்லாம் தான் சனாதன தர்மம். இதை எல்லாம் தான் இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறோம். இந்தப் படம் ஒரு என்சைக்ளோபீடியா.

என் அப்பா நிறைய விதமான படங்கள் செய்திருக்கிறார். நானும் நிறைய படம் செய்திருக்கிறேன். கடந்த 50 ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வரும் ஒரே நடிகர் நான் தான். இதை பெருமைக்காக சொல்லவில்லை, அப்பா, அம்மா ஆசிர்வாதம் எனக்கு இருக்கிறது என்பதற்காக சொல்கிறேன். இனியும் பல படங்கள் நடிப்பேன். ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒன்று சொல்ல வேண்டும். `அகண்டா', வீர சிம்ஹா ரெட்டி' `பகவத் கேசரி', `டாக்கு மகாராஜ்' என வரிசையாக எனக்கு நான்கு ஹிட் படங்கள் அமைந்தன. இனி வர இருக்கும் அகண்டா 2வும் ஹிட் ஆகும். ஏனென்றால் வழக்கமான படம் தாண்டி இப்படியான படங்களை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்" என்றார்.