அஜித்குமார் நடிப்பில் வெளிவந்து ஹிட்டடித்த படம் `குட் பேட் அக்லி'. ஏப்ரல் மாதம் திரையரங்கில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம், கடந்த மே மாதம் திரையரங்க வெளியீட்டுக்குப் பிறகான டிஜிட்டல் ரிலீஸ் ஆக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படத்தில் த்ரிஷா, அர்ஜூன் தாஸ் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இப்படத்தின் முக்கியமான காட்சிகளில் வின்டேஜ் பாடல்கள் இடம்பிடித்திருந்தன. வித்யாசாகர் இசையில் `எதிரும் புதிரும்' படத்தின் `தொட்டு தொட்டு பேசும் சுல்தானா', இளையராஜா இசையில் `சகலகலா வல்லவன்' படத்தின் `இளமை இதோ இதோ', `நாட்டுப்புற பாட்டு' படத்தின் ஒத்த ரூபாய் தாரேன்', `விக்ரம்' படத்தின் `என் ஜோடி மஞ்ச குருவி' ஆகிய பாடல்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தன் அனுமதி இல்லாமல் தன்னுடைய பாடல்கள் `குட் பேட் அக்லி' படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள் என இளையராஜாவின் தரப்பு வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இளையராஜாவின் பாடல்களை படத்தில் இருந்து நீக்க உத்தரவிட்டது. அதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 17-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலிருந்து `குட் பேட் அக்லி' திரைப்படம் நீக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் நெட்பிளிக்ஸ் தளத்திற்கு வந்திருக்கிறது அஜித்தின் `குட் பேட் அக்லி'.
அர்ஜூன் தாஸ் கதாபாத்திர அறிமுக காட்சியில் முன்பு `ஒத்த ரூபா தாரேன்' பாடல் இடம்பெற்றிருந்தது. தற்போது அதற்கு பதிலாக படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் அமைத்திருந்த பின்னணி இசையையே பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அஜித்தின் சண்டைக் காட்சியில் இடம்பெற்றிருந்த `இளமை இதோ இதோ' பாடலுக்கு பதிலாக இப்படத்திற்காக டார்க்கீ பாடியிருந்த `புலி புலி' பாடலையே வைத்திருக்கிறார்கள்.
அதே போல `என் ஜோடி மஞ்ச குருவி' பாடலும் படத்தில் இருந்து நீக்கப்பட்டு ஜி வி பிரகாஷின் பின்னணி இசையால் மாற்றப்பட்டுள்ளது.
எனவே படத்தில் எந்த காட்சியும் நீக்காமல், இளையராஜா பாடல்களை மட்டும் முழுமையாக நீக்கி சில மாற்றங்களை மேற்கொண்டு இப்போது மீண்டும் மக்கள் பார்வைக்கு படத்தைக் கொண்டு வந்திருக்கிறது நெட்பிளிக்ஸ்.