Ajithkukmar Mankatha
கோலிவுட் செய்திகள்

’மங்காத்தா ரீ-ரிலீஸ் கொண்டாட்டம் வருத்தம் அளிக்கிறது’ - அஜித் பெயரில் சுற்றும் போலி அறிக்கை!

நடிகர் அஜித்குமார் மங்காத்தா ரீ-ரிலீஸ் கொண்டாட்டங்கள் வருத்தம் அளிக்கிறது எனவும், இனி தன் படங்களை ரீ ரிலீஸ் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டதாக ஒரு அறிக்கை கடந்த சில தினங்களாக சுற்றி வருகிறது.

Johnson

அஜித்குமார் நடித்து 15 வருடங்களுக்கு முன் வெளியான 'மங்காத்தா' படம் மறுவெளியீடு செய்யப்பட்டு, ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது. இதனால் அஜித் வருத்தம் தெரிவித்ததாக ஒரு அறிக்கை பரப்பப்பட்டது. ஆனால், இது அஜித் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை, எனவே இதன் உண்மைத்தன்மை பற்றி சந்தேகம் உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவர் தற்போது தீவிரமாக கார் ரேஸில் பங்கேற்றுவருகிறார். இவர் நடித்து 15 வருடங்களுக்கு முன் வெளியான `மங்காத்தா' படம் கடந்த வாரம் மறுவெளியீடு செய்யப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் நடிகர் அஜித்குமார் மங்காத்தா ரீ-ரிலீஸ் கொண்டாட்டங்கள் வருத்தம் அளிக்கிறது எனவும், இனி தன் படங்களை ரீ ரிலீஸ் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டதாக ஒரு அறிக்கை கடந்த சில தினங்களாக சுற்றி வருகிறது.

அந்த அறிக்கையில் "வணக்கம், சமீபத்தில், எனது மங்காத்தா திரைப்படத்தின் மறு வெளியீடு, கவலையடையச் செய்யும் சில சம்பவங்களை என் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது. திரையரங்குகளுக்குள் ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து, திரையிடலின் போது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பது போன்ற பல காட்சிகளையும் பார்த்தேன். ரசிகர்களின் அன்புக்கும் உற்சாகத்துக்கும் நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருந்தாலும், இதுபோன்ற செயல்கள் பொதுமக்களின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தி மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றன. இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

Ajithkumar

மேலும் இந்த மறு வெளியீடு அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளதாகவும், அது பல குறைந்த பட்ஜெட் மற்றும் புதிய படங்களின் திரையரங்க ஓட்டத்தை மோசமாகப் பாதித்தது எனவும் எனக்குத் தெரிய வந்தது. இது அவர்களின் வருவாயையும் கணிசமாகப் பாதித்துள்ளது, இது திரையரங்குகளை தங்கள் வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் சக தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு அநீதியானது என்று நான் நம்புகிறேன். இந்தக் கவலைகளைக் கருத்தில் கொண்டு, தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை இனிமேல் எனது பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மறு வெளியீடுகள் தவிர்க்க முடியாதவை என்றால், புதிய அல்லது சிறிய பட்ஜெட் படங்கள் எதுவும் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொண்டு, குறைந்தபட்ச எண்ணிக்கையிலான காட்சிகள் மற்றும் திரைகளுக்கு மட்டுமே அவற்றை மட்டுப்படுத்த வேண்டும் என்று நான் கடுமையாக பரிந்துரைக்கிறேன்.

Mankatha

சினிமா என்பது ஒரு கூட்டு அமைப்பு. பார்வையாளர்கள், தயாரிப்பாளர்கள், திரையிடுபவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரஸ்பர மரியாதை அதன் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியம். அனைவருக்கும் எனது உண்மையான வேண்டுகோள் என்னவென்றால், சினிமாவை பொறுப்புடன் கொண்டாடுங்கள், பொது இடங்களை மதிக்கவும், புதிய படங்களுக்கு ஆதரவளிக்கவும், சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள்" என குறிப்பிடப்பட்டிருந்தது. இது அதிகாரப்பூர்வமாக அஜித் தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை என்றாலும், பலராலும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வந்தது. இதன் உண்மைத்தன்மை பற்றி அறிய அஜித்குமாரின் தரப்பில் விசாரித்த போது இது முற்றிலும் போலியானது எனவும். இது போன்ற புரளிகளை நம்பவும், பரப்பவும் வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.