Ajithkumar Manu Anand
கோலிவுட் செய்திகள்

”4 ஆண்டுகள் தொடந்து ஐந்து லட்சம் அனுப்பிய அஜித் சார்!” - மனு ஆனந்த் | Ajith

அஜித் சார் ஒரு ஸ்டார்போல ஒருநாளும் பழகியதில்லை. அவருக்கு தினமும் என்ன விஷயங்கள் செய்ய வேண்டும் எனச் சொல்வதுதான் என் வேலை. என்ன காட்சி, எங்கு எடுக்கிறோம் போன்றவற்றைச் சொல்வேன்.

Johnson

ஆர்யா, கௌதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியார் நடிப்பில் ‘மிஸ்டர் X’ இயக்கியுள்ளார் மனு ஆனந்த். ஏப்ரல் 17 இப்படம் வெளியாகவுள்ள நிலையில் பல பேட்டிகளை அளித்து வருகிறார் மனு. கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவரிடம் ’என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துடன் பணியாற்றிய அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், "அஜித் சார் ஒரு ஸ்டார்போல ஒருநாளும் பழகியதில்லை. அவருக்கு தினமும் என்ன விஷயங்கள் செய்ய வேண்டும் எனச் சொல்வதுதான் என் வேலை. என்ன காட்சி, எங்கு எடுக்கிறோம் போன்றவற்றைச் சொல்வேன். ஒருநாள் காரில் சென்றுகொண்டிருந்தேன். திடீரென ஒரு கால் வந்தது. எடுத்துப் பார்த்தால் நான் `அஜித் பேசுறேன்' என்றார். என்னால் அவர்தான் பேசுகிறார் என்றே நம்ப முடியவில்லை. அதுதான் கடைசி முறை. அவரை ஒரு நடிகர் எனப் பார்த்து ஆச்சர்யப்பட்டது. அதற்குப் பிறகு எல்லா நாளும் மிக சகஜமாக பழகினார்.

Ajith

என் அப்பாவும், தம்பியும் இறந்துவிட்டார்கள் என்பதால் அவர்கள் பெயரில் ஓர் அமைப்பு வைத்து சில உதவிகள் செய்து வந்தோம். ஒருநாள் அஜித் சார் என்னை கேரவனுக்கு வரச் சொன்னார். எப்போதும்போல அடுத்து என்ன காட்சி என்பதைக் கேட்க அழைக்கிறார் எனச் சென்றேன். என்னை அமரவைத்துவிட்டு, செக்புக் எடுத்து 5 லட்ச ரூபாய்க்கு செக் எழுதிக் கொடுத்தார். `உன்னுடைய வாழ்க்கையில் சில விஷயங்கள் நடந்திருக்கிறது என எனக்குத் தெரியும். நீ ஏதோ ஒரு நல்ல காரியம் செய்வது தெரியும். அதனால இத வெச்சுக்கோ' என்றார். என்னை அவருக்கு மிஞ்சிப் போனால் ஒரு மாதம்தான் பரிட்சயம். ஆனால், நான் எவ்வளவு மறுத்தும் அந்தப் பணத்தை எனக்கு அளித்தார். நான் கௌதம் மேனன் சாரிடம் இதுபற்றி கூறியபோது, `இது உனக்கும் அவருக்குமான விஷயம். உன்னுடைய விருப்பம்தான்' என்றார். அதன் பிறகுதான் நான் அந்தப் பணத்தை வாங்கினேன்.

அந்தப் படம் முடிந்த பின்னரும் தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு 5 லட்சம் பணம் அனுப்பினார். நானாகச் சென்று ’என்னால் இனிமேல் இந்த அமைப்பை தொடர முடியாது, நீங்கள் பணம் அனுப்ப வேண்டாம்’ என சொல்லும்வரை அவர் அனுப்பினார். இதேபோல் நடிகனாகும் ஆசையில் இருந்த ஒரு இளைஞனுக்கு கையில் ஒரு பிரச்னை இருந்தது.

Ajithkumar

அவனை அழைத்துச் சென்று அவருடைய மருத்துவரிடம் அழைத்துச் செல்ல சொல்லி என்னிடம் கூறினார். சிகிச்சைக்குத் தேவையான பணத்தையும் அவரே முழுவதுமாகக் கொடுத்தார். இப்படி பல உதவிகளைச் செய்பவர் அவர்" என்றார் மனு ஆனந்த்.