Ajith Fan
கோலிவுட் செய்திகள்

"ப்ளேடை வைத்து என் கையை கிழித்து..." - அஜித் பகிர்ந்த திகில் சம்பவம் | Ajith

அவர் என் ரசிகராக இருக்கலாம், ஆனால் சில நேரம் அவர் உங்களை காயப்படுத்த கூட செய்யலாம். அப்படி எனக்கு சில முறை நடந்திருக்கிறது.

Johnson

அஜித்குமார் தற்போது தனது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். இது சம்பந்தமாக சமீபத்தில் அளித்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் ரசிகர்களின் அதீத அன்பு தனக்கு எப்படி எல்லாம் சிக்கலாக அமைந்தது என்பது பற்றி விரிவாக பேசி இருக்கிறார்.

இது பற்றி அஜித் கூறுகையில் "சில நேரங்களில் இவை அனைத்தையும் நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் என்றெல்லாம் கூட கூறுவார்கள். ஆனால் அது உண்மையல்ல. யாரும் அப்படி ஏற்பாடு செய்வதில்லை. என்னை நேரில் பார்க்கையில் புகைப்படம் எடுக்க விரும்புவார்கள், தொட்டுப்பார்க்க விரும்புவார்கள். இது பிரபலமாக இருப்பதன் இன்னொரு பக்கம். என்னால் இந்தியாவுக்குள் வாகனம் ஓட்ட முடியாது. ஒவ்வொரு முறை என் குடும்பத்தோடு வெளியே செல்ல நினைக்கும் போதும், 50, 60 வாகனங்கள் பின் தொடர்கின்றன.

ஒரு வண்டியில் நான்கு நபர்கள் அமர்ந்து வந்து, படம் எடுக்கிறார்கள். அவர்கள் உயிரை மட்டுமல்லாது மற்றவர்கள் உயிரையும் ஆபத்தில் நிறுத்துகிறார்கள். சில நேரம் என் வாகனத்திற்கு முன் அவர்கள் வண்டியை நிறுத்திவிட்டு நான் கண்ணாடியை இறக்குவதற்காக காத்திருக்கிறார்கள். ஆனால் அந்த ரோட்டில் ஆம்புலன்ஸ், ஸ்கூல் வேன் வரும் என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

Ajith

அவர் என் ரசிகராக இருக்கலாம், ஆனால் சில நேரம் அவர் உங்களை காயப்படுத்த கூட செய்யலாம். அப்படி எனக்கு சில முறை நடந்திருக்கிறது. ப்ளேடு ஒன்றால் என் கை கிழிக்கப்பட்டிருக்கிறது. இது 2005ல் நடந்தது. நிறைய கைகள் என்னை நோக்கி வந்தது, அவர்களுடன் கை குலுக்கி காருக்கு வந்து பார்க்கையில் என் கையில் இரத்தம் வந்து கொண்டிருந்தது.

ஒருமுறை வெளிப்புற படப்பிடிப்புக்காக ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தேன். தினமும் கூட்டம் குவிந்தது. அந்த ஹோட்டலின் உரிமையாளர் என்னிடம் வந்து, நீங்கள் ஷூட் செல்லும்போதும், வரும் போதும் அவர்களுக்காக நேரம் ஒதுக்க முடியுமா? எங்களால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றார். அவர்களை நோக்கி கையசையுங்கள், சிலருடனாவது புகைப்படம் எடுங்கள். அப்போது தான் சமாளிக்க முடியும் என சொன்னார், நானும் செய்தேன். அதற்கான ஏற்பாடுகளை என் உதவியாளர்கள், ஹோட்டலை சேர்ந்தவர்கள் செய்தார்கள். என்னை நோக்கி பலரும் கை நீட்டினார்கள். அதில் ஒரு 18, 19 வயதே ஆனா பையனை, காவலாளி ஒருவர் பிடித்தார். அந்த பையன் ப்ளேட்டை இரண்டாக உடைத்து விரலிடுக்கில் வைத்திருந்தார். இதை எல்லாம் நம்மால் கவனிக்கவே முடியாது. இதனாலேயே எளிதில் அணுக முடியாத நபராக என்னை மாற்றிக் கொண்டேன்.

Ajith

இன்னொரு சம்பவமும் இருக்கிறது, ஒரு தேர்தலின் போது எனது வாக்கை செலுத்த சென்றேன். அப்போது கூட்டம் கூடியது, புகைப்படங்கள் எடுத்தனர். அப்போது ஒரு பையனின் மொபைலை நான் பிடுங்கினேன். அந்த வீடியோ மிக வைரலானது. நான் மிக திமிராக நடந்து கொண்டதாக கூட கூறினார்கள். ஆனால் என்னை நோக்கி இருந்த கேமிராக்களை அப்படியே பின்னால் இருக்கும் சுவர் நோக்கி திருப்பி இருந்தால் அதில் தெளிவாக இருக்கும், இங்கு புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என. ஆனால் அதை யாரும் பார்க்க மாட்டார்கள். ஆரம்பத்தில் நான் தன்மையாக இவற்றை எடுத்துக் கூறினேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை, எனவே இது நடந்தது. இப்போது நான் கெட்டவனாகவும், விதியை மீறிய அந்த பையன் பாதிக்கப்பட்டவர் போலவும் மாறிவிட்டார். விதிமுறை என்பது அனைவருக்குமானது.

தியேட்டர்களில் முதல்நாள் முதல்காட்சியில் நெறிமுறை எதுவும் இல்லை. சீட்டை உடைத்து, ஸ்க்ரீனை கிழித்து, தியேட்டர் ஓனர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறார்கள். இது எல்லாம் முடிவு வேண்டும். சில ஊடகங்கள் இதனை ஹைலைட்டாக போடுகிறார்கள். இந்த நடிகரை விட இந்த நடிகருக்கு இவ்வளவு ஓப்பனிங் என்று வருகிறது. எனவே அந்த நடிகரின் ரசிகர்கள் போட்டி போடுகிறார்கள்.

இதில் நான் யாரையும் குறையாக கூறவில்லை. கூட்டநெரிசல் ஏற்படும் நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நிறைய நடக்கிறது. அதற்கு தனிநபர் ஒருவர் மட்டுமே பொறுப்பாக முடியாது. நாம் அனைவருமே அதற்கு பொறுப்பு. ஊடகத்திற்கு இதில் பெரும் பங்கு இருக்கிறது. கூட்டத்தை கூட்டுவதில் தான் பெருமை இருக்கிறது என்று நினைக்கிறார்கள். இது அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும், இப்படியான சம்பவங்கள் சினிமாக்காரர்களால் தான் நடப்பது போல சித்தரிப்பது, முழு திரைப்படத் துறையையும் மோசமானது என வெளிச்சம் போட்டு காட்டுவதுபோல் உள்ளது. இது ஒரு கூட்டு தோல்வி. இதிலிருந்து நாம் மாற உங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் நெறிப்படுத்துங்கள். உங்களை சுற்றியுள்ளவர்கள் வாழ்க்கை மேம்பட உதவுங்கள். அது ஒரு ரிப்பில் எஃபக்ட் போல சில தலைமுறைகளுக்கு பிறகாவது மாற்றத்தை ஏற்படுத்தியத்தும். இந்த அடிப்படைக்கு நாம் திரும்ப வேண்டும்" என்றார்.