அஜித்குமார் தற்போது தனது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். இது சம்பந்தமாக சமீபத்தில் அளித்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் ரேஸ் குறித்தும் சினிமாவை அவர் அணுகும் விதம் குறித்தும் பேசி இருக்கிறார்.
நீங்கள் இப்போது நான்கு மணிநேரத்திற்கு குறைவாக தூங்குகிறீர்கள் என கேள்விப்பட்டோமே?
"அதற்கும் குறைவாகத்தான் உறங்குகிறேன். நேற்று 2 மணிநேரம் மட்டுமே உறங்கினேன். எப்படி என்னால் இந்த சூழலிலும் இயங்க முடிகிறது என என்னை நானே கேட்கிறேன். நிறைய விஷயங்களை பற்றி யோசிக்க வேண்டி இருக்கிறது. அதற்கு இந்த நேரம் தேவை."
அக்டோபர் - மார்ச் வரை ரேஸ் தான், அதுவரை படப்பிடிப்பு இல்லை என சொன்னீர்கள். ஆனால் இடையில் அடுத்த படத்திற்கான ஏற்பாடுகளை செய்வீர்களா?
"அது நடக்கிறது. இன்னும் சில மாதங்களில் அடுத்த படத்தின் (AK64) படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. அதன் அறிவிப்பு ஜனவரி மாதம் வரக்கூடும். சினிமா - ரேஸ் என இரண்டு பணிகளும் நடக்கிறது."
ஒருவேளை F1 படத்தை இந்தியாவில் ரீமேக் செய்தால், பிராட்பிட் பாத்திரத்தில் நீங்களும், அந்த இளம் ரேசர் பாத்திரத்தில் நஸ்லென் அல்லது பிரதீப்பை நடிக்க வைக்கலாமா?
"இவை இயல்பாக நடந்தால் எனக்கு சம்மதமே. இந்த விளையாட்டுக்கும் இன்னும் வெளிச்சம் கிடைக்கும்."
இப்போதும் படப்பிடிப்புக்கு செல்லும் போது எக்ஸைட்மென்ட் வருகிறதா?
"கண்டிப்பாக. நான் நடிகனானது ஒரு விபத்து. மோட்டார் சைக்கிள், கார்மெண்ட்ஸ் இவற்றில் பணியாற்றிய பின்பு சினிமாவுக்கு வந்தேன். நான் எப்படி நடிகன் ஆனேன் என்று என்னை நானே கேட்பதுண்டு. இதெல்லாம் நான் யோசிக்கவே இல்லை. ஆனால் சினிமாவாக இருந்தாலும் சரி எதை செய்தாலும் என்னுடைய 100 சதவீதத்தை கொடுப்பேன். ஆரம்பத்தில் எனக்கு தமிழ் உச்சரிப்பு சரியாக இருக்காது. ஆனால் அதை சரி செய்ய உழைத்தேன். என்னடைய பெயரை மாற்ற சொல்லி கூறினார்கள். ஆனால் நான் வேறு பெயர் வேண்டாம் என மறுத்தேன். நிறைய சவால்கள் தாண்டியே வந்தேன். ரேஸில் கூட 19 வயது நபர் என்ன உழைப்பை போடுவாரா அதையே கொடுக்கிறேன்.
என்னுடைய அடுத்த படத்தை என் முதல் படம் போலவே அணுகுகிறேன். ஒரு தயாரிப்பாளரே, இயக்குநரோ என்னிடம் 100 நாட்கள் வேண்டும் எனக் கேட்கும்போது, நான் ஒரு விஷயத்தை மிக தெளிவாக கூறுவேன். ஒரு படம் எடுக்க 100 - 120 நாட்கள் ஆகும். ஆனால் நான் தருவது வெறும் 100 நாட்கள் இல்லை, என்னுடைய 33 வருட வாழ்க்கையை உங்கள் கைகளில் தருகிறேன். இதை நீங்கள் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் கீழே கொண்டு போய் விடாதீர்கள். நாம் சேர்ந்து வளருவோம் என்று தான் என் ஒவ்வொரு தயாரிப்பாளர், இயக்குநரிடம் கூறுவேன். இப்படித்தான் சினிமாவையும், ரேஸையும் அணுகுகிறேன்" என்றார்.