தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (89) வயது மூப்பு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து அஜித்குமார் குடும்பத்தினார் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். அதில் "எங்கள் அன்புத் தாயார் மோகினி மணி அவர்கள், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை தனது உறக்கத்திலேயே இயற்கை எய்தினார். அவருக்கு வயது 89. கடந்த சில ஆண்டுகளாக அவருக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் அர்ப்பணிப்புடன் மருத்துவ சேவையையும் ஆதரவையும் வழங்கிய அனைத்து மருத்துவ நிபுணர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த துயரமான தருணத்திலும், அவர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்ததையும், அன்பும் அக்கறையும் நிறைந்த உறவுகளால் சூழப்பட்டிருந்ததையும், அவரை அறிந்த அனைவரின் உண்மையான மரியாதையையும் பெற்றிருந்ததையும் நினைத்து ஆறுதல் அடைகிறோம். அவரது கனிவான இயல்பு, தன்னலமற்ற மனப்பான்மை மற்றும் அமைதியான கண்ணியம் அனைவரின் மனதிலும் அழியாத இடம்பிடித்துள்ளது.
இந்தியப் பிரிவினைக் காலத்தில், சிறுவயதிலேயே அனைத்தையும் பின்னால் விட்டுவிட்டு புதிதாக சுதந்திரம் பெற்ற இந்தியாவிற்கு குடிபெயர்ந்த சிந்தி சமூகத்தின் ஒரு அங்கமாக இருந்த அவர், வாழ்க்கையை மீண்டும் புதிதாகத் தொடங்கினார். பின்னர் தனது பிள்ளைகளும் குடும்பத்தினரும் வாழ்க்கையில் முன்னேறி சாதித்ததை கண்டு பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தார். உண்மையில், எங்களில் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் அடைந்துள்ள வெற்றிகளுக்கும் சாதனைகளுக்கும் முக்கிய காரணமாக அவரது அன்பான அரவணைப்பு, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் அறிவார்ந்த வழிகாட்டுதலே அமைந்துள்ளது. அவையே எங்கள் இல்லத்தின் இதயமும் ஆன்மாவுமாக விளங்கின. எங்கள் மறைந்த தந்தையாருடன் கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்கள் நீண்ட இனிய தம்பதிய வாழ்க்கையை அவர் அனுபவித்தார். அவர்கள் இணைந்து பகிர்ந்துகொண்ட அன்பான நினைவுகள் எங்களுக்கு என்றும் ஆறுதலையும் வலிமையையும் அளித்துக் கொண்டே இருக்கும். எங்களுக்கு அனுப்பப்பட்டு வரும் அன்பான இரங்கல் செய்திகள், ஆறுதல் வார்த்தைகள் மற்றும் நினைவஞ்சலிகளால் நாங்கள் மிகவும் நெகிழ்ந்து போயுள்ளோம். இந்த நேரத்தில் தொலைபேசி அழைப்புகளை ஏற்கவோ அல்லது செய்திகளுக்கு உடனடியாக பதிலளிக்கவோ இயலாமல் இருக்கலாம் என்பதை புரிந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
அவரது இறுதிச்சடங்குகள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் தனிப்பட்ட நிகழ்வாக நடைபெறும். பெற்றோர் அல்லது அன்பிற்குரிய மூத்தவரை இழந்த வலியை உணர்ந்த அனைவரும், எங்கள் அமைதியான துக்கத்தை மதித்து, அவர் வாழ்நாள் முழுவதும் எங்களுக்குக் கற்றுத்தந்த சமநிலை, கண்ணியம் மற்றும் மென்மையான மனவலிமையுடன் அவரது நினைவைப் போற்றுவார்கள் என்று நம்புகிறோம்." எனக் குறிப்பிட்டுள்ளனர். அஜித்தின் தாயாரது மறைவுக்கு முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.