நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சிறுவயதில் நடந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். போட்டோ ஷூட் என அழைத்து, உள்ளாடைகள் அணிய சொல்லி, உடலை பார்க்க முயன்ற சம்பவம் அவரை அதிர்ச்சியடைய வைத்தது. அண்ணனின் அனுமதி கேட்க வேண்டும் என அறையிலிருந்து வெளியேறிய அவர், இதை மறக்க முடியாத அனுபவமாக நினைவில் வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைளுள் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல மொழிகளிலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் தெலுங்கில் நடித்த `சங்க்ராந்திக்கி வொஸ்துன்னாம்' படம் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது. இந்த நிலையில் நேற்று ஒரு யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதில் வாழ்க்கையில் நடந்த மிக மோசமான அனுபவங்கள் எதுவும் நினைவு இருக்கிறதா எனக் கேட்கபட்டது.
அதற்கு பதில் சொன்ன ஐஸ்வர்யா ராஜேஷ் "நான் சினிமாவுக்கெல்லாம் வரும் முன், மிக சின்ன வயதில் நடந்த சம்பவம் இது. நான் எப்போதும் இதனை மறக்கவே மாட்டேன். போட்டோ ஷூட் என அழைத்தான். நான் என் அண்ணனுடன் சென்றேன். என் அண்ணனை வெளியவே அமர சொல்லிவிட்டு என்னை உள்ளே அழைத்து சென்றான். lingerie (உள்ளாடைகளை) மட்டும் கொடுத்து, இதனை அணிந்து கொள், உன் உடலை நான் பார்க்க வேண்டும் என சொன்னான். எனக்கு எது என்னெவென்றே புரியவில்லை. நான் மிகவும் சின்ன பிள்ளை அப்போது.
இங்கு எல்லாம் இப்படித்தான் நடக்குமோ என நான்கூட யோசிக்க ஆரம்பித்தேன். அங்கிருந்தவர்களும் இதை அணிந்ததும் எப்படி போட்டோ எடுக்கலாம் என பேச ஆரம்பித்தார்கள். இன்னும் 5 நிமிடங்கள் அவர்கள் என்னிடம் பேசி இருந்தால், ஒருவேளை நான் அதை அணிந்து கொண்டிருப்பேன். ஆனால் ஏதோ தப்பாக நடக்கிறது என நான் உணர்ந்ததும், என் அண்ணனிடம் அனுமதி கேட்க வேண்டும் என சொல்லி, அந்த அறையிலிருந்து வெளியே வந்துவிட்டேன். இதை போல அவர்கள் இன்னும் எத்தனை பெண்களுக்கு செய்திருப்பார்கள் என நினைத்தேன். என்னால் அந்த காட்சிகளை இன்னும் மறக்க முடியவில்லை. இதை இப்போதுதான் நான் பொது வெளியில் சொல்கிறேன்" என்றார்.