நடிகர் அபிநய், தனுஷ் அறிமுகப்படமான 'துள்ளுவதோ இளமை' மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து `ஜங்க்ஷன்', `சக்ஸஸ்', `தாஸ்', `பாலைவன சோலை', `ஆறுமுகம்', `ஆரோகணம்', `வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' எனப் பல தமிழ் படங்களில் நடித்தவர், சில வருடங்களாக கல்லீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு (நவம்பர் 10) உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு பற்றி, அவருடன் விளம்பரத்தில் நடித்த நடிகை விஜயலக்ஷ்மி பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.
அப்பதிவில் "சென்னை 28க்குப் பிறகு, நான் WorldSpace Sattelite Radioவுக்காக ஒரு தேசிய விளம்பரத்தில் நடித்தேன். அப்போது அது ஒரு பெரிய விஷயம். அபிநய் உடன் நான் அதில் நடித்தேன். விளம்பர உலகின் நம்பர் 1 முகமாக இருந்தார் அவர். அந்த விளம்பரம் புதுமணத் தமிழ் தம்பதிகளைப் பற்றியது. அந்தப் பெண் திருமணத்திற்குப் பிறகு வடக்கு நோக்கிச் செல்கிறாள், ஒரு புதிய மொழிக்கு நடுவே தொலைந்து போகிறாள், வீட்டை இழந்து, கணவனிடமிருந்து விலகி இருக்கிறாள். ஒர் இரவு, வானொலியில் பழைய நினைவுகளை தூண்டும் ஒரு தமிழ் பாடல் ஒலிக்க, அவள் உடைந்து போகிறாள். அந்த நேரத்தில், அவர்கள் இணைகிறார்கள். அது ஒரு ஆத்மார்த்தமான விளம்பரம்.
நாங்கள் டெல்லியில் நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம், ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்டில் தங்கினோம். ஒவ்வொரு மாலையும், வட இந்திய குழுவினர் எங்களை இறக்கிவிட்டுச் செல்வார்கள். இப்போது உள்ள விஜியாக நான் அன்று இல்லை. அந்நியர்களுக்கு பயப்படும் ஒரு கூச்ச சுபாவமுள்ள பெண்ணாக இருந்தேன், உலகில் என் இடத்தை இன்னும் கண்டுபிடிக்க முயன்று கொண்டிருந்தேன். அதனால், எனக்குத் தெரியாத ஒரு ஆணுடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் என்னை தங்க வைத்தபோது, அது ஒரு கலாச்சார அதிர்ச்சியாக இருந்தது.
நான் ஏற்கனவே ஃபெரோஸை காதலித்துக் கொண்டிருந்தேன், நான் தனியாக ஒரு ஆணுடன் தங்கியிருக்கிறேன் என்று அவரிடம் சொல்லக்கூட பயந்தேன். அதனால் நான் அப்படிச் செய்யவில்லை. அதன் மன அழுத்தத்தைக் கையாள்வது மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால் அபிநய்... ஒரு ஜென்டில்மேன். நன்னடத்தை உள்ளவர், கனிவானர், நம்பமுடியாத தொழில்முறை கலைஞர். அவர் திரையில் தோன்றுவது பற்றி குறிப்பாக சொல்ல தேவையில்லை. அவர் ஒவ்வொரு பிரேமையும் எளிதாகக் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார். ஒவ்வொரு இரவும் படப்பிடிப்பு முடிந்த பிறகு, அவர் அறையில் உட்கார்ந்து தனியாக குடிப்பார். எப்போதாவது என் அறைக்கு வெளியே எட்டிப்பார்த்து, அவர் இன்னும் அங்கே இருக்கிறாரா என்று பார்ப்பேன். அவர் எப்போதும் அங்கேயே இருந்தார், ஒரு பாட்டிலை முடித்துவிட்டு, சிந்தனையில் மூழ்கிவிடுவார். இவ்வளவு இளம் வயதில் ஒருவர் குடிப்பதைப் பார்ப்பது வருத்தமாக இருந்தது.
கடைசி இரவு, நான் என் கதவை மீண்டும் திறந்து நோட்டமிட்டேன். இந்த முறை அவர் என்னைக் கவனித்து அழைத்தார். நான் அவருக்கு முன்னால் அமர்ந்தேன். அவர் எனக்கு ஒரு பானம் கொடுத்தார். அப்போது எனக்கு குடி பழக்கமில்லை, அதனால் நான் வேண்டாம் என்றேன். மேஜையில் ஒரு திறந்த ஃபேன்டா பாட்டில் இருந்தது. அவர் அதை எனக்குக் கொடுத்தார். என்னுள் இருந்த எச்சரிக்கை உணர்வுள்ள பெண், "வேண்டாம். உள்ளே என்ன கலந்து இருக்கிறது என்று உனக்கு ஒருபோதும் தெரியாது" என்று கிசுகிசுத்தாள். அதனால் மீண்டும், நான் மறுத்துவிட்டேன். ஆனால் ஒரு கேள்வி எனக்குள் எரிந்து கொண்டிருந்தது, அதை நான் கேட்க கூடாது என உறுதியாக இருந்தேன். ஆனாலும், அது சிரமமின்றி வெளிவந்தது. "நீ ஏன் இவ்வளவு குடிக்கிறாய்? நீ இளமையாக இருக்கிறாய், வெற்றிகரமானவன், நன்றாக இருக்கிறாய்... ஏன் இந்தப் பழக்கம்?"
அப்போதுதான் அவர் மனம் திறந்து பேசினார். தனது வாழ்க்கை, பொறுப்புகள், தாயார், மற்றும் குடும்ப சுமையை தாங்குவது பற்றிப் பேசினார். அழுத்தம், வலி, தனிமை பற்றிப் பேசினார். நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, கேட்டுக்கொண்டே இருந்தேன். இரண்டு மணி நேரம். கிட்டத்தட்ட அவர் மனதில் இருப்பதை எல்லாம் கொட்டி தீர்த்து சோர்வடைந்து அமைதியாகும் வரை கேட்டேன். மறுநாள் விமான நிலையத்தில், விடைபெறும் நேரம் வந்தது. அவர் என்னைப் பார்த்து, "இதற்கு முன்பு யாரும் என் வலியை இப்படிக் கேட்டதில்லை. நன்றி, விஜி. கடவுள் உன்னைப் போன்ற பெண்களைப் படைத்தது எனக்குத் தெரியாது. உனக்கு இரட்டைச் சகோதரி (twin sister) இருந்தால் எனக்குத் தெரியப்படுத்து" என்று கூறினார். நான் வெடித்துச் சிரித்துக்கொண்டே அவரை அணைத்தேன். அதுதான் நான் அவரை கடைசியாகப் பார்த்தது.
இன்று அவர் இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டபோது... நான் அழுதேன், ஆனால் அது சோகமான கண்ணீர் அல்ல. மாறாக நான் அவருக்காக மகிழ்ச்சியடைந்தேன். அவரது போராட்டம் முடிந்துவிட்டது, இறுதியாக அவர் அமைதியைக் கண்டார் என்பதில் மகிழ்ச்சி. நான் RIP என்று சொல்லவில்லை, "பெரிய விருந்து, நண்பா" என்று சொன்னேன். ஏனென்றால் இந்த முறை, எனக்குத் தெரியும்... அவர் வலியை அடக்குவதற்காக குடிக்கவில்லை. அவர் சுதந்திரத்திற்காக சியர்ஸ் சொல்வார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.