விமல், நட்டி நடிப்பில் கெந்திரன் இயக்கியுள்ள படம் `வடம்'. இப்படம் மார்ச் 6ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மறைந்த காமெடி நடிகர் ரோபோ சங்கர் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் விமல்.
இதில் பேசிய போது, "ரோபோ சங்கர் இறப்புக்குச் செல்ல முடியவில்லை. ஏனென்றால், அன்று குற்றாலத்தில் ’வடம்’ படப்பிடிப்பில் இருந்தேன். அந்தக் காட்சி பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. எனக்கு முதல் நாள் இரவுதான் தகவல் வந்தது. அங்கிருந்து எப்படியும் கிளம்ப விடமாட்டார்கள் எனத் தெரியும், ஒருவேளை, கிளம்ப அனுமதித்தால் நல்லதுதானே என நான் இயக்குநர், தயாரிப்பாளரிடம் மெதுவாகச் சென்று, ’இப்போது விட்டால், காலையில் சென்று பார்த்துவிட்டு, நாளை மதியத்துக்குள் வருகிறேன்’ எனச் சொன்னேன்.
ஆனால் அங்கு துணை நடிகர்கள், நிறைய காளை மாடுகள் என கிட்டத்தட்ட 13 லட்ச ரூபாய் செலவு செய்து ஏற்பாடுகள் செய்திருந்தனர். அன்று காட்சி எடுக்கவில்லை என்றால் பெரிய நஷ்டம் ஆகும். எனவே, ’போக வேண்டாம்’ எனக் கேட்டுக் கொண்டார்கள். எனவே என் மனைவி மட்டும் ஆறுதல் சொல்லப் போனார்.
ஆனால் மறுநாள் மாலை ரோபோ சங்கருக்கு பெரிய பேனர் வைத்து, யூனிட்டில் இருந்த அனைவரையும் அழைத்து, மௌன அஞ்சலி செலுத்தி, அந்த கிராம மக்களுக்கு 500 புடவையை கொடுத்தார், 2000 மரக்கன்றுகளை அந்த கிராமத்துக்கு தந்து ஒரே வாரத்தில் அத்தனையையும் நடவைத்தார். ரோபோ சங்கரின் ஆன்மா சாந்தியடைய அவரது ஒரு முயற்சி இது. என்னால் அவரின் மரணத்துக்குப் போக முடியவில்லை என்ற பாரம் இந்தச் செயலால் கொஞ்சம் குறைந்தது" என்றார் விமல்.