vijay, sarath kumar
vijay, sarath kumar pt web
கோலிவுட் செய்திகள்

ஆரம்பித்து வைத்த சரத்குமார்.. முடித்து வைத்த விஜய்...! சூப்பர் ஸ்டார் யார்?

Angeshwar G

நடிகர் விஜய் நடித்து வெளியான வாரிசு திரைப்படத்தில் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் பேசுகையில், “சூர்ய வம்சம் திரைப்படத்தின் 175 ஆவது நாள் விழாவில் கலைஞரும் இருந்தார். அப்போது பேசிய நான் வருங்கால சூப்பர் ஸ்டார் விஜய் என சொன்னேன். அப்போது கலைஞர் என்னிடம், 'என்ன சரத் மிகப்பெரிய வெற்றி விழாவில் விஜய்யை பார்த்து சூப்பர் ஸ்டார் என்கிறாய்' என கேட்டார். உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து கூறியதாக அப்போது நான் சொன்னேன். அது தற்போது உண்மையானதில் நான் பெருமைப்படுகிறேன்” என கூறியிருந்தார்.

vijay leo speech

அன்றிலிருந்து விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற விவாதம் இன்னும் தீவிரமடைந்தது. ரஜினி ஜெயிலருக்கு முன்பு நடித்திருந்த அண்ணாத்தே திரைப்படம் பெருமளவில் சோபிக்காததும் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படங்களுக்கு எகிறிய எதிர்பார்ப்பும் இதற்கு காரணமாக அமைந்தன.

அண்மையில் நடந்த ஜெயிலர் திரைப்படத்தின் இசைவெளியீட்டு நிகழ்வில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், காக்கா கழுகு கதை கூறியது விவாதத்தை இன்னும் சூடாக்கியது. இணையத்தில் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் மாறி மாறி வார்த்தைப் போரில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் வெற்றிவிழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. அப்போது பேசிய நடிகர் விஜய், “ஒரு காட்டுக்கு இரண்டு பேர் வேட்டைக்கு சென்றனர். அந்த காட்டில் யானை, மயில் இந்த காக்கா, கழுகு...” என்று தொடங்கினார். காக்கா, கழுகு என்று அவர் கூறியவுடன் அரங்கமே சத்தத்தால் அதிர ஆரம்பித்தது. பின்னர் தொடர்ந்த விஜய், “காடு என்றால் இதெல்லாம் இருக்க வேண்டும் என்பதால் கூறினேன். காட்டுக்கு சென்ற இரண்டு வேட்டைக்காரர்களில் வில்-அம்பு ஒருவர் எடுத்து சென்றார், ஒருவர் ஈட்டி எடுத்து சென்றார். வில்-அம்பு எடுத்துச்சென்றவர் முயலை வேட்டையாடி எடுத்து சென்றார். ஈட்டி எடுத்து சென்றவர் யானையை வேட்டையாட நினைத்து எதுவும் இல்லாமல் வீட்டுக்கு சென்றார். இதில் யார் வெற்றிபெற்றவர்?

vijay leo speech

யானையை வேட்டையாட நினைத்தவர்தான் வெற்றியாளர். உங்கள் இலக்கை பெரிதாக வைத்து அதையை நோக்கி நாம் செல்ல வேண்டும்.. பாரதியார் சொல்வது போல் பெரிதும் பெரிது கேள்.. பெரிதாக கனவு காணுங்கள். Small aim is crime என கலாம் கூறியுள்ளார். எனவே பெரிதாக கனவு காணுங்கள்” என குட்டிக்கதை கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு குட்டிப் பையன் ஆசையா அவங்க அப்பா சட்டைய எடுத்து போட்டுக்குவான். அப்பாவோட வாட்ச் எடுத்து கட்டிக்குவான். அப்பாவோட நாற்காலியில் ஏறி உட்கார்ந்துக்குவான். அந்த ஷர்ட் அவனுக்கு செட்டே ஆகாது. தொள தொளனு இருக்கும். வாட்ச் கையிலயே இருக்காது. அந்த சேர்ல உட்காரலாமா வேணாமா? தகுதி இருக்கா, இல்லையா? அதெல்லாம் அவனுக்கு தெரியாது. அப்பா சட்டை. அப்பா மாறி ஆகணும்னு கனவு. அதில் என்ன தவறு? அதனால, பெருசா கனவு காணலாம். ஒருத்தரும் ஒன்னும் பண்ண முடியாது! ” என்று நடிகர் விஜய் பேசினார்.

இந்த அன்புக்கு நான் திருப்பி என்ன செய்யப் போறேன் - விஜய்

தொடர்ந்து சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசிய அவர், “புரட்சித் தலைவர்-னா அது ஒருத்தர்தான். நடிகர் திலகம்-னா அது ஒருத்தர்தான். புரட்சிக் கலைஞர்-னா அது ஒருத்தர்தான். உலக நாயகன்-னா அது ஒருத்தர்தான், சூப்பர் ஸ்டார்-னா அது ஒருத்தர்தான், தளபதி-னா...” என்று கூறிவிட்டு, சின்ன இடைவெளிவிட்டு, “மக்களாகிய நீங்கள்தான் மன்னர். நான் உங்களுக்கு உதவியாக இருக்கும் தளபதி. என் மேல நீங்க வச்சிருக்க இந்த அன்புக்கு நான் திருப்பி என்ன செய்யப்போறேன்? என் உடம்பு தோல் உங்க காலுக்கு செருப்பா தச்சுபோட்டாலும் போதாது. சாகும் வரை உங்களுக்கு உண்மையா இருப்பேன்” என கூறினார்.

இப்படியாக அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது குறித்தான கேள்விக்கு ரஜினி மற்றும் விஜய்யை ஒப்பிட்டு பேசியவர்களுக்கு விஜய்யின் கருத்தே பதிலாக அமைந்துள்ளது.!