Rio Raj River Route Studios
கோலிவுட் செய்திகள்

தயாரிப்பாளரான ரியோ ராஜ்.. துவங்கிய இரு படங்கள்! | Rio Raj

இது என் நீண்டநாள் கனவு. பார்வையாளர்களுடன் ஆழமாக இணையும் கதைகளைச் சொல்ல நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Johnson

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் ரியோ ராஜ். இப்போது தயாரிப்பாளராக களமிறங்கவுள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளராக தன் பயணத்தை துவங்கியவர், `சவாரி' , `சத்ரியன்' போன்ற படங்களில் சின்னச்சின்ன பாத்திரத்தில் நடித்து பின்னர் `நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவர் சமீபத்தில் நடித்த `ஆண்பாவம் பொல்லாதது' படம் மிகப்பெரிய ஹிட்டானது.

ஹீரோவாக வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் ரியோ, இப்போது தயாரிப்பாளராக களம் இறங்குகிறார். River Route Studios என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கி, இரண்டு படங்களையும் துவங்கியுள்ளார். இதில் முதல் படத்தை கதிரவன் இயக்க, ராம் நிஷாந்த் ஹீரோவாக நடிக்கிறார். இரண்டாவது படத்தை கே.சிவமுனீஸ்வரன் இயக்க, ‘ஜோ’ மற்றும் ‘ஆண் பாவம் பொல்லாதது’ திரைப்படங்களின் படத்தொகுப்பாளராக பணியாற்றிய  K.G.வருண் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

தனது தயாரிப்பு நிறுவனம் பற்றி கூறிய ரியோ ராஜ், “இது என் நீண்டநாள் கனவு. என்னை நம்பி என் பயணத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும், என் குடும்பத்தினர், என் பெற்றோர், திரைப்படத் துறையில் உள்ள என் நண்பர்கள், மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Rio Raj

இவர்களின் இடையறாத ஊக்கமும் நம்பிக்கையும்தான் இன்று என்னை ஒரு நடிகனாக உருவாக்கியது. அந்த நம்பிக்கையே இப்போது இந்தப் புதிய முயற்சியை தொடங்கும் தன்னம்பிக்கையை அளித்துள்ளது. River Route Studios என்பது என் ஆர்வத்தின் வெளிப்பாடு. பார்வையாளர்களுடன் ஆழமாக இணையும் கதைகளைச் சொல்ல நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.