தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் கலைஞரும் நகைச்சுவை நடிகருமான முத்துக்காளையின் மனைவி மாலதி, மூளையில் ரத்தக்கசிவு காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 17 நாட்களாக நினைவின்றி, மூச்சுத் திணறலுடன் கடுமையான நிலையில் உள்ளார். மேல் சிகிச்சைக்கான பெரும் செலவால் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய முத்துக்காளை, தனது மனைவியின் உயிரைக் காப்பாற்ற தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயிடம் வீடியோ மூலம் உதவி கோரியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றியவர் மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்தவர் முத்துக்காளை. `மின்சார கண்ணா', `தவசி', `தமிழன்', `யூத்', `திருடா திருடி', `வின்னர்', `கிரீடம்' உட்பட பல படங்களில் நடித்த இவர் தற்போது முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
முத்துக்காளையின் மனைவி மாலதிக்கு (வயது 47), அவருக்கு திடீரென மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னரும் உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 17 நாட்களாக நோய் கிருமி தொற்றால் கடந்த மூச்சு விட சிரமப்பட்டு கொண்டு, நினைவின்றி இருக்கிறார். மேல் சிகிச்சைக்காக அதிக செலவுகள் தேவைப்படுவதால், தற்போது குடும்பம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இவருக்கு உதவி கோரி வீடியோ வெளியிட முத்துக்காளை "கீழ்பாக்கம் KMCயில் எனது மனைவி மாலதி, தலையில் ஏற்பட்ட ரத்தக்கசிவுக்காக அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்து 17 நாட்கள் ஆகிவிட்டது. அறுவை சிகிச்சை முடிந்தாலும் அதனால் ஏற்பட்ட நுரையீரல் உட்பட சின்ன சின்ன தொற்றுகளால் என் மனைவி மூச்சுவிட முடியாமல் சிரமத்தில் இருக்கிறார். இந்த நேரத்தில் தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் சார் என்னுடைய மனைவியின் மேல் சிகிச்சைக்கு உதவி செய்து எனது மனைவியின் உயிரை காப்பாற்ற வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்." எனப் பேசியுள்ளார்.