செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்
நடிகர் கஞ்சா கருப்பு, மதுரவாயில் ஸ்ரீ கிருஷ்ணா நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார். சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட கஞ்சா கருப்பு, சென்னையில் படப்பிடிப்பு இருக்கும்போது கிருஷ்ணா நகரில் உள்ள வீட்டில் தங்குவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.
ரூ.20 ஆயிரம் வாடகையில் கஞ்சா கருப்பு வீடு எடுத்துள்ள சூழலில், அவர் ஊரில் இல்லாத சமயத்தில் வீட்டின் பூட்டை உடைத்து வேறு ஒருவருக்கு வாடகை விட வீட்டு உரிமையாளர் முயற்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, வீட்டில் தனது உடைமைகள் இருக்கும்போது தனக்கு தெரியாமல் அத்துமீறி வீட்டின் பூட்டை உரிமையாளர் உடைத்ததாக மதுரவாயல் காவல் நிலையத்தில் உரிமையாளர் மீது கஞ்சா கருப்பு புகார் அளித்துள்ளார்.
வீடு பூட்டியிருந்த நிலையில், வீட்டு வாசலில் கஞ்சா கருப்பு அமர்ந்திருந்த காட்சிகள் வெளியாகி உள்ளன. கஞ்சா கருப்பு அளித்த புகாரின் பேரில், மதுரவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இரு தரப்பு விசாரணைக்குப் பின்பே முழு விவரம் தெரிய வரும் என தெரிவித்தனர்.