நடிகர் அபிநய், தனுஷ் அறிமுகப்படமான 'துள்ளுவதோ இளமை' மூலம் சினிமாவில் அறிமுகமானார். பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த அவர், சினிமா வாய்ப்புகள் குறைந்தபோது துபாயில் வேலை பார்த்தார். பின்னர் மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய அவர், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார்.
தனுஷ் அறிமுகப்படமான `துள்ளுவதோ இளமை' படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அபிநய். அதன் பிறகு `ஜங்க்ஷன்', `சக்ஸஸ்', `தாஸ்', `பாலைவன சோலை', `ஆறுமுகம்', `ஆரோகணம்', `வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' எனப் பல தமிழ் படங்களில் நடித்தார். மலையாளத்தில் ஃபஹத் பாசில் ஹீரோவாக அறிமுகமான `கையெத்தும் தூரத்து' உட்பட சில படங்களில் நடித்தார்.
பழம்பெரும் நடிகை டி ஆர் ராதாமணி. மலையாளத்தில் பல படங்களில் நடித்தவர், தமிழில் `வன்மம்', `மன்னர் வகையறா' போன்ற சில படங்களில் நடித்துள்ளார். இவரது மகன் தான் அபிநய். துவக்கத்தில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் ஒருகட்டத்தில் சினிமா வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. அதன் பிறகு சில வருடங்கள் துபாய் சென்று வேலை பார்த்தவர், மீண்டும் சினிமாவுக்கு வந்து `சிங்கார சென்னை' என்ற படத்தில் நடித்தார். ஆனாலும் அது பெரிய அளவில் கை கொடுக்காததால் விளம்பரப் படங்களில் நடிக்க துவங்கினார் அபிநய். மேலும் விஜய் நடித்த `துப்பாக்கி' மற்றும் சூர்யா நடித்த `அஞ்சான்' போன்ற படங்களில் வித்யுத் ஜம்வால், `பையா' படத்தில் மிலிந் சோமன் போன்றோருக்கு தமிழில் டப்பிங் பேசியது அபிநய் தான்.
2019ல் தனது தாயார் டி ஆர் ராதாமணியின் மறைவுக்குப் பிறகு பொருளாதார ரீதியாக நெருக்கடிக்கு ஆளானார் அபிநய். ஆதரவுக்கு என யாரும் இல்லாமல் தனியாகவே வசித்து வந்தார். மேலும் உடல்ரீதியாகவும் கல்லீரல் பாதிப்புக்கு ஆளாகி அதற்கான சிகிச்சையை பெற்று வந்தார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்தார் அபிநய். கடந்த சில வருடங்களாக அபிநய் மெலிந்த தோற்றத்தில் இருக்கும் படங்களும், வீடியோக்களும் பரவிய போது தான், இவரது நிலை பலருக்கும் தெரிந்தது. திரைத்துறையில் தனுஷ் உட்பட பலரும் பண உதவி செய்து வந்தனர்.
தொடர்ந்து நடிகர் பாலா இவரை நேரில் சந்தித்து பண உதவி செய்தார், அவர் நடித்த `காந்தி கண்ணாடி' பட விழாவுக்கும் அழைத்து சிறப்பித்தார். மேலும் அபிநய் நடித்த `கேம் ஆஃப் லோன்ஸ் என்ற படம் கடந்த மாதம் வெளியானது. ஒரு பக்கம் உதவிகள் வந்தாலும், சிகிச்சைக்கான செலவுகளுக்கே அது சரியாக இருந்தது எனவும், உடலில் ஊசி படாத இடமே இல்லை எனவும் வேதனையுடன் சில பேட்டிகளில் தெரிவித்தார் அபிநய். இந்த சூழலில் இன்று அதிகாலை 4 மணிக்கு அவரது வீட்டில் காலமானார். உறவினர் என யாரும் இல்லாத அபிநயின் உடலை சினிமா சங்கங்கள் இணைந்து எடுத்து இறுதி சடங்கு செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.