நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி உள்ள `ஆர்யன்' படம் அக்டோபர் 31ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் விஷ்ணு விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், செல்வராகவன், மானசா ஆகியோருடன் படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய விஷ்ணு விஷால் "இது ராட்சசன் கிடையாது. வேறு வழியில்லை, கண்டிப்பாக ராட்சசனுடன் ஒப்பிடுவார்கள். அது எங்களுக்கு தெரியும். ராட்சசன் பார்வையாளர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுத்தது. பல மொழிகளில் வந்த த்ரில்லர் படங்களுக்கு ரெபரன்ஸ் ஆக ராட்சசன் தான் இருந்தது. ஆனால் அதைத் தாண்டி ஒரு த்ரில்லரை யாரும் கொடுக்கவில்லை. கண்டிப்பாக அது எங்களாலும் முடியாது. ஆனால் வேறு ஒரு அனுபவத்தை கொடுக்க விரும்பினோம். இனி த்ரில்லர் பண்ண முடியாதா என்ற கேள்வி எனக்குள் இருந்தது. ஆனால் இந்தக் கதை கேட்கும் போது ராட்சசன் அல்லாத ஒரு புது அனுபவத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கை வந்தது.
FIR படத்தில் பிரவீன் என்னுடன் நடித்தார். அப்போது மூன்று கதை கூறினார், அதில் ஒன்று தான் இது. ஒரு வித்தியாசமான படமாக கொடுக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ செய்திருக்கிறோம். இது மிக நீண்ட பயணம். கோவிட் சமயத்தில் இந்தக் கதையை கேட்டேன். அங்கிருந்து எடுத்துக் கொண்டால் ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. இவ்வளவு காலம் பொறுமையாக ஒரு இயக்குநர் இருந்து நான் பார்த்ததில்லை. நடுவில் வேறு இரண்டு படங்களுக்காக ஆறு மாதம் இடைவேளை எடுப்பதாக சொன்னேன். ஆனால் அது இரண்டு வருடமாக மாறியது. அதனால் தான் இந்தப் படம் இவ்வளவு தாமதமாகிவிட்டது. ஆனால் அந்த காலத்தில் இந்த கதையை அமீர்கான் சாரிடம் சொல்லும் வாய்ப்பும் அமைந்தது. நான்கு முறை இக்கதையை அவர் கேட்டிருக்கிறார். இந்தப் படத்தின் இந்தி வெர்ஷனில் வில்லனாக நடிக்க கூட அமீர்கான் ஆர்வமாக இருந்தார். ஆனால் அது சில காரணங்களால் நடக்கவில்லை.
தெலுங்கில் இப்படத்தை ரவி தேஜா வைத்து பைலிங்க்குவலாக எடுக்க முயற்சித்தோம். அதுவும் நடக்கவில்லை. சரி இதை தமிழில் எடுப்போம், பேன் இந்தியா என்ற வார்த்தை இப்போதெல்லாம் மிஸ்யூஸ் செய்யப்படுவதாக தோன்றியது. எனக்கும் ஆரம்பத்தில் இப்படத்தை பிற மொழி நடிகர்களை சேர்த்து பேன் இந்தியா படமாக எடுக்கலாம் எனத் தோன்றியது. ஆனால் அது வேண்டாம் தமிழில் மட்டுமே எடுக்கலாம் என முடிவு செய்தேன். சென்ற நவம்பரில் படப்பிடிப்பு துவங்கி ஒரு வருடத்திற்குள் படத்தை வெளியிடுகிறோம். ஆர்யன் என் மகனின் பெயர். ஐந்து வருடம் முன்பு அவரிடம் ஆர்யன் என்ற பெயரில் படம் எடுக்கப் போகிறேன் என சொன்னேன். ஒருவழியாக அவர் பெயரில் இருக்கும் படம் வெளியாகப் போகிறது. அவர் பெயரில் ஒரு நல்ல படம் கொடுத்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. இந்தப் படம் பற்றி அவருக்கு இப்போது புரியாது. சில வருடங்கள் கழித்து பார்க்கையில் அவருக்கு புரியும்." என்றார்.