இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு வாய்ப்புகள் குறைந்ததற்கு மதரீதியான பாகுபாடு காரணமாக இருக்கலாம் எனவும், `சாவா' படம் பிரிவினைவாதம் பேசும் படம் எனவும் சமீபத்திய கூறி இருந்தார். இதற்கு எதிராக பலரும் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், எழுத்தாளர் ஷோபா டீ உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார் ஏ ஆர் ரஹ்மான் "கலாச்சாரத்தை இணைக்க, கொண்டாட மற்றும் மரியாதை செய்ய என் ஒரே வழியாக இசை தான் இருந்திருக்கிறது. இந்தியா தான் என் உந்துசக்தி, ஆசிரியர் மற்றும் என் வீடு. சில நேரங்களில் நம்முடைய நோக்கம் தவறாக புரிந்து கொள்ளப்படும். ஆனால் என்னுடைய நோக்கமெல்லாம் மரியாதையை உயர்த்த இசை மூலம் சேவை செய்வதே.
நான் யாருக்கும் வலியை ஏற்படுத்த விரும்பியதில்லை, என் நேர்மை உணரப்படும் என்று நம்புகிறேன். நான் இந்தியனாக இருப்பதில் பாக்கியம் பெற்றவனாக உணர்கிறேன், இந்நாடு எப்போதும் கருத்து சுதந்திரத்தை அனுமதிக்கும் மற்றும் பன்முக கலாச்சார குரல்களைக் கொண்டாடும் ஒரு இடத்தை உருவாக்க எனக்கு உதவுகிறது. நான் இந்த நாட்டிற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கடந்த காலத்தை கௌரவிக்கும், நிகழ்காலத்தை கொண்டாடும் மற்றும் எதிர்காலத்தை ஊக்குவிக்கும் இசைக்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறேன். ஜெய்ஹிந்த் & ஜெய்ஹோ!" எனத் தெரிவித்துள்ளார்.