Chhaava, Tourist Family, Saiyaara, Mahavatar Narasimha 10 Indian films that collected well in BO
கோலிவுட் செய்திகள்

50 லட்சம் பட்ஜெட், 94 கோடி வசூல்.. வசூல் சாதனை செய்த 11 இந்திய படங்கள்! | Chhaava | Saiyaara | 2025

2025ல் எதிர்பார்த்த படங்கள் வெற்றி அடையவில்லை. ஆனாலும் இந்திய அளவில் சில பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் எதிர்பாராத சின்ன பட்ஜெட் படங்களும் மிகப்பெரிய ஹிட்டானது. அவை என்னென்ன படங்கள், அப்படங்களில் ஹிட் அளவு என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Johnson

2025 ஆம் ஆண்டு அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் உலக நிகழ்வுகள் மூலம் இந்தியாவையும் உலகத்தையும் பாதித்த முக்கிய தருணங்களை பதிவு செய்த ஒரு முக்கியமான ஆண்டாக அமைந்தது. இந்த இணைப்பில் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாக பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டு இந்திய சினிமாவுக்கு எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் கலந்த ஒரு வருடமாக அமைந்தது. பெரிய நட்சத்திரங்கள், பிரம்மாண்ட பட்ஜெட், பரபரப்பான விளம்பரங்கள் இருந்தும் பல படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அதே நேரத்தில், குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட சில படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தின. இந்த ஆண்டின் வெற்றி–தோல்வி படங்களின் உண்மை நிலையை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Chhaava 

Chhaava

இந்தாண்டு இந்திய அளவில் மிகப்பெரிய ஹிட் என்றால் அது பாலிவுட்டில் விக்கி கௌஷல் நடிப்பில் உருவான `சாவா' தான். சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜி பற்றிய கதை என உருவான இப்படம், அப்படி இப்படி ஹிட் இல்லை. மொத்த திரையுலகத்தையும் அலறவிட்ட ஹிட். படத்தின் க்ளைமாக்சில் கண்கலங்கி அழுத பார்வையாளர்கள் ஒரு சம்பவம் என்றால், படத்தில் ஒரு கோட்டையின் கீழ் புதையல்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என சொன்னதை கேட்டு கடப்பாரை கம்பியோடு மக்கள் கூடியது வேற லெவல் சரித்திரம். அப்படியான வரவேற்பால் தான் 120 கோடியில் உருவான படம் இந்திய அளவில் 700 கோடியும், உலக அளவில் 800 கோடியும் வசூல் செய்தது.

Kantara: Chapter 1

Kantara: Chapter 1

2022ல் வெளியாகி காந்தாரா வரவேற்பை பெற்றதால், இந்த Kantara: A Legend Chapter-1 மீது பெரிய எதிர்பார்ப்பு உருவானது. கதையாக படம் சிலருக்கு திருப்தி அளிக்கவில்லை என்றாலும், ஒரு விஷுவல் அனுபவமாக அற்புதமான படமாக அமைந்தது. 130 கோடி வரை செலவானாலும் இந்திய அளவில் மட்டும் 620 கோடியும், உலக அளவில் 850 கோடியும் வசூல் செய்தது படம்.

Saiyaara

Saiyaara

துவண்டு கிடந்த பாலிவுட்டுக்கு `சாவா' புது ரத்தம் பாய்ச்ச, தென்றலாய் வருடியது Saiyaara. மியூசிகல் லவ் ஸ்டோரிக்கு பெயர் பெற்ற மோஹித் சூரி, `Aashiqui 2'வுக்கு பிறகு `Half Girlfriend' சுமார் வெற்றி என்றாலும், பத்து வருடங்களுக்கும் மேலாக பெரிய ஹிட் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார். அவருக்கு மட்டுமில்லாமல், மொத்த ஹிந்தி சினிமாவுக்கும் ஹிட்டாக வந்து அமைந்தது `Saiyaara'. இசைக்கலைஞன் - கவிதை எழுதும் பெண் இருவருக்கும் இடையே காதல் என அசத்தலான ஆல்பத்துடன் வந்து அனைவரையும் கட்டிப்போட்டது படம். 50 கோடியில் உருவான படம், இந்திய அளவில் கிட்டத்தட்ட 350 கோடி வசூலித்தது. உலக அளவில் 580 கோடி வசூல்.

Mahavatar Narsimha

Mahavatar Narsimha

அனிமேஷன் படம் என்றாலே பொம்மை படம் தானே ஏறி இருந்த இந்திய மார்க்கெட்டில் எகிறி அடித்தது `Mahavatar Narsimha' என்ற இந்தி அனிமேஷன் படம். பக்த பிரகலாதன் கதையில் வராக மற்றும் நரசிம்ம அவதாரமாக வரும் விஷ்ணுவின் கதையை பாடல், ஆக்ஷன் என கலந்து கொடுத்திருந்தார் இயக்குநர் அஷ்வின்குமார். படத்திற்கு பின்னணி இசை நம்ம ஊர் சாம் சி எஸ். 40 கோடியில் உருவான இப்படத்தின் இந்திய வசூல் மட்டும் 300 கோடி. உலகளவில் 330 கோடி வசூலித்துள்ளது.

Dragon

Dragon

இந்த ஆண்டு பேக் டு பேக் 100 கோடி அடித்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன். அதில் டிராகனின் ஹிட் வெறித்தனம். அஷ்வத் - பிரதீப் கூட்டணி, புரோமோவில் இருந்தே எதிர்பார்ப்பு, பாடல்கள் பெரிய ஹிட் என படத்திற்கு எல்லாமும் பாசிட்டிவாக அமைந்தது. கல்வியின் முக்கியத்தையும், நேர்மையாக வாழ வேண்டியதின் அவசியத்தையும் ஜென் ஸி கூட்டத்துக்கு புரியும் மொழியில் சொன்னது பிடித்துப் போக, 40 கோடியில் உருவான படத்திற்கு இந்திய அளவில் 105 கோடி வசூலை பெற்றுத்தந்தது. உலகளவில் 155 கோடி வசூல்.

Alappuzha Gymkhana

Alappuzha Gymkhana

`Anuraga Karikkin Vellam', `Unda', `Love', `Thallumaala' என விதவிதமான படங்களை கொடுத்து ஈர்த்த ஹாலித் ரஹ்மான் இயக்கத்தில் உருவான படம் `Alappuzha Gymkhana'. வெட்டியாக சுற்றும் இளைஞர்களின் வாழ்க்கையில்  பாக்சிங் கற்றுக்கொள்ளும் ஒரு பகுதியை ஜாலியான படமாக தந்திருந்தார். 12 கோடியில் தயாரா இப்படம் இந்திய அளவில் 50 கோடியும், உலக அளவில் 70.5 கோடியும் வசூலித்தது.

Tourist Family

Tourist Family

கடந்த ஆண்டுக்கு `லப்பர் பந்து' போல இந்த ஆண்டுக்கு `டூரிஸ்ட் ஃபேமிலி'. சசிக்குமார் - சிம்ரன் என புது கூட்டணி, அழகான பாடல்கள், சீரியஸான கதையை காமெடி கலந்து சொன்ன விதம் என படத்தில் பல ஹைலைட்ஸ். 7 கோடியில் எடுக்கப்பட்ட படம் இந்திய அளவில் வசூலித்தது 73 கோடி. உலகளவில் 90 கோடி வரை வசூலித்தாக சொல்லப்படுகிறது.

Su From So

Su From So

கன்னடத்தில் ஹை பட்ஜெட் படமாக வந்து காந்தாரா அசத்த, மினி பட்ஜெட்டில் வந்தது `Su From So'. பேய் பயத்தில் ஊரே அலர, உண்மையில் நாம் எதிர்கொள்ள வேண்டிய பேய், பாலியல் சீண்டல் செய்யும் மிருகங்களை தான் என காமெடியும் கலந்து கூறியது படம். 5.5 கோடியில் தயாரான படம் இந்திய அளவில் 92 கோடி வசூலித்தது. உலக அளவில் 100 கோடி வசூல்.

Little Hearts

Little Hearts

சாய் மார்த்தாண்ட் இயக்கத்தில் உருவான படம் `Little Hearts'. யூட்யூப் பிரபலம் மௌலி ஹீரோவாக நடிக்க, படம் முழுக்க ஜாலியான விஷயங்களை வைத்து அசர வைத்தார்கள். இந்த படத்தின் பட்ஜெட் மொத்தமே 2 கோடிதான். படத்தின் வசூல் இந்திய அளவில் 30 கோடி. உலக அளவில் 40 கோடி.

Laalo Krishna Sada Sahaayate

Laalo Krishna Sada Sahaayate

இந்த ஆண்டு ஓட்டோ மொத்த இந்தியாவிலேயே மிக அதிக லாபம் சம்பாதித்தது ஒரு குஜராத்தி படம் என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை. அங்கித் சகியா இயக்கத்தில் வெளியான படம் `Laalo: Krishna Sada Sahaayate'. ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் பண்ணை வீட்டில் மாட்டிக் கொள்கிறார். அங்கு அவருக்கு ஏற்படும் சம்பவங்களை தெய்வீகம் கலந்து கூறியிருக்கிறார்கள். விஷயம் என்ன என்றால் வெறும் 50 லட்சத்தில் எடுக்கப்பட்ட இப்படம் இந்தியாவில் 94 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. உலகளவில் 118 கோடி.

Lokah

Lokah

டோம்னிக் அருண் இயக்கத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்து வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான படம் `லோகா'. மலையாள சினிமா என்றாலே சின்ன கல்லு பெத்த லாபம் என கணக்குப்போடும் இடம். அங்கு 30 கோடி ஆனாலும் பரவாயில்லை என நம்பி செலவு செய்தார் தயாரிப்பாளர் துல்கர். அந்த ரிஸ்க் கை கொடுக்க அடித்தது ஜாக்பாட். இந்திய அளவில் படத்தின் கலெக்ஷன் 189 கோடி. உலக அளவில் 300 கோடி வசூல் செய்துள்ளது. இது மலையாள சினிமாவிலேயே ஒரு மைல் கல் வசூல்.

இதில் சொல்லப்பட்டதெல்லாம் தியேட்டரில் இருந்து வந்த வசூல் மட்டுமே. இவை தாண்டி மற்ற வழிகளில் இப்படம் சம்பாதித்தது இன்னும் பல கோடிகளை தொடும். இந்திய அளவில் வசூல் சாதனைகளை செய்திருக்கிறது இப்படங்கள். அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை இன்னும் கூடுமா எனப் பார்க்கலாம்.