பொதுக்குழுவை கூட்டாமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாகவும், சங்கத்தின் நிரந்தர வைப்புநிதியை காலி செய்துவிட்டதாகவும் விஷால் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ஏ.எல்.அழகப்பன், சிவா, ஜே.கே.ரித்தீஷ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு பூட்டுப் போட்டனர். இதனையடுத்து அங்கு சென்ற விஷால் பூட்டை உடைக்க முயன்றதால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும், விஷால் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சாவியை பெற்று வந்து பூட்டைத் திறக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்திய நிலையில், பூட்டை உடைத்து உள்ளே செல்வதில் விஷால் உறுதியாத இருந்ததாக தெரிகிறது. இதனால் அவரை கைது செய்த காவல்துறையினர், தி.நகரில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தின் ஒரு பிரிவினர் தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டுப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், விஷாலின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து விஷால் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அதனைத்தொடர்ந்து நடிகர் விஷால் மாலை விடுவிக்கப்பட்டார்.
பின்னர் பேசிய விஷால், “நான் நீதிமன்றத்தை நாடுவேன். இதுவரை எனக்கு நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பே கிடைத்துள்ளது.
நலித்த தயாரிப்பாளர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கி வருகிறோம். 20 மாதங்களாக 20 லட்ச ரூபாய் என மொத்தம் ரூ.4 கோடி வழங்கியுள்ளோம். கல்வி, மருத்துவம், காப்பீடு உதவி, தீபாவளி, பொங்கல் போனஸ் வழங்கியுள்ளோம். நல்லது செய்வதற்கு பெயர் முறைகேடு என்றால், அந்த முறைகேட்டைத் தொடர்ந்து செய்வேன். வரும் பிப்ரவரி மாதம் இளையராஜாவை கவுரவிக்கும் நிகழ்ச்சியை நடத்தியே தீருவோம். நிகழ்ச்சியில் இருந்து கிடைக்கும் நிதியில் சிறு தயாரிப்பாளர்களுக்கு நிலம் வழங்க திட்டம் வைத்துள்ளோம். தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பணிகள் தொடரும்” என்று தெரிவித்தார்.
விஷாலின் கைது குறித்தும் தயாரிப்பாளர்கள் சங்க சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசன், “இளையராஜாவுக்கு பாராட்டு என்பது எல்லோர் மனதிலும் உள்ளது. எதிர்தரப்பு கூறும் குற்றச்சாட்டை ஆராய இடம் கொடுக்கும் மனப்பாங்கு விஷாலுக்கு இருக்கும் என்று தான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்
தயாரிப்பாளர் சங்க மோதல் குறித்து நடிகர் சங்கத் தலைவர் நாசர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ் திரையுலகின் தாய் சங்கமான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் சமீபத்தில் நடந்து கொண்டிருக்கும் எதிர்பாராத சம்பவங்களை பார்த்து வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் சங்கத்திற்கு மிகப்பெரிய பொறுப்புகளும், கடமைகளும் இருப்பதால் இது போன்ற நிகழ்வுகள் எதிர்கால திரையுலகை பாதிக்கும் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்க பிரச்னையில் எந்தப் பக்கம் நியாயம் இருக்கிறது என்று பார்த்து தமிழக அரசு நடுநிலையாக செயல்பட வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தவறு செய்து விட்டார், அதனால் பயப்படுகிறார் என்று நடிகர் ஜே.கே.ரித்தீஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தயாரிப்பாளர் சங்க ஆவணங்களை சார் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும். அனைத்தும் சங்க விதிகளின்படி நடைபெறுகிறதா என்பதை சார்பதிவாளர் கூறட்டும் என்று தெரிவித்துள்ளார்.