’குயின்’ பட ரீமேக்கில் தமிழில் காஜல் அகர்வாலும் தெலுங்கில் தமன்னாவும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.
கங்கனா ரனவத் நடித்து இந்தியில் ஹிட்டான படம், ‘குயின்’. இதில் நடித்ததற்காக கங்கனாவுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்ய இருப்பதாக நடிகர் தியாகராஜன் கூறியிருந்தார். தமிழ், தெலுங்கில் தமன்னா நடிப்பதாகவும் மலையாளம், கன்னடத்தில் அமலா பால் நடிப்பதாகவும் கூறப்பட்டது. நடிகை சுகாசினி வசனம் எழுதுவதாகவும் நடிகை ரேவதி இயக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இந்தப் படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். தமிழில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார். ‘மீடியன்ட்’ மனு குமாரன் மற்றும் “லைகர்’ மனோஜ் கேசவன் இணைந்து தயாரிக்கின்றனர். தமிழில் இந்தப் படத்துக்கு ’பாரிஸ் பாரிஸ்’ என்று டைட்டில் வைத்துள்ளனர். இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பில் தமன்னா நடிக்கிறார்.
இதுபற்றி தமன்னா கூறும்போது, ‘இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஆவலாக எதிர்பார்த்திருக்கிறேன். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட இந்தக் கதையில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். தெலுங்கில் இதை நீலகண்ட ரெட்டி இயக்குகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது’ என்று கூறியுள்ளார்.