சினிமா

"இந்தி சினிமாவில் பாலின ரீதியாக ஊதிய ஏற்றத்தாழ்வு!" - டாப்ஸி ஆதங்கம்

நிவேதா ஜெகராஜா

இந்தி திரைப்படத் துறையில் நிலவும் பாலின ரீதியிலான ஊதிய ஏற்றத்தாழ்வு குறித்து அதிருப்தி தெரிவித்திருக்கிறார் முன்னணி நடிகர் டாப்ஸி.

நடிகர் டாப்ஸி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஹசீன் தில்ருபா'. நெட்ஃபிளிக்ஸில் வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. இந்தப் படம் தொடர்பாக 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்'ஸுக்கு அளித்த பேட்டியில், இந்தி திரைப்படத் துறையில் நிலவும் பாலின ரீதியாக ஊதிய ஏற்றத்தாழ்வு குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் டாப்ஸி.

அதில், "ஒரு பெண் நடிகர் அதிகமாக சம்பளம் கேட்டால் அவரை இந்தி திரையுலகம் 'சர்ச்சைக்குரியவர்', 'சிக்கலானவர்' என்று முத்திரை குத்துகிறது. அதுவே ஓர் ஆண் நடிகர் சம்பளம் அதிகமாகக் கேட்டால், அதை அவரின் 'வெற்றிக்கு கிடைத்த அங்கீகாரம்' என்கிறார்கள். என்னுடன் திரைப் பயணத்தை ஆரம்பித்த சக ஆண் நடிகர்கள் இப்போது என்னை விட மூன்று முதல் ஐந்து மடங்கு வரை அதிகம் சம்பாதிக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.

பெண்களை மையமாக கொண்ட திரைப்படங்கள் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்படுவது குறித்தும், அதற்கு ரசிகர்கள் எந்தளவுக்கு காரணமாகிறார்கள் என்பது குறித்தும் பேசியிருக்கும் அவர், "ரசிகர்கள் ஆண் நடிகர்களைப் போல பெண் நடிகர்களை கொண்டாடுவதில்லை. இதன் விளைவாக பெண்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களுக்கு பாக்ஸ் ஆபிஸில் குறைந்த வசூலே கிடைக்கிறது" என்று அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, டாப்ஸி 'சபாஷ் மிது' பயோபிக் திரைப்படம் உட்பட பாலிவுட்டில் சில திரைப்படங்களில் நடித்து வரும் வேளையில், தெலுங்கு மொழியில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் போட்டுள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கிற்காக இன்று ஹைதராபாத் வந்திருக்கிறார் டாப்ஸி.

'மிஷன் இம்பாசிபிள்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படம் தொடர்பாக பேசியிருக்கும் அவர், "கடந்த ஏழு ஆண்டுகளில் ஒரு ரசிகராக என்னைப் பார்க்க விரும்பும் கதைகளின் ஒரு பகுதியாக இருக்க, சிறந்த கதைகளை தேடிக்கொண்டிருக்கிறேன். அதற்காக எனது நேரத்தையும் பணத்தையும் செலவிட தயாராக இருக்கிறேன்.

'மிஷன் இம்பாசிபிள்' அப்படிப்பட்ட சிறந்த கதையம்சம் கொண்ட படம். 'மிஷன் இம்பாசிபிள்' ஒரு சுவாரஸ்யமான கதைக்களத்தை கொண்டுள்ளது. தரமான திரைப்படங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ரசிகர்கள் என்னிடம் வைத்திருக்கும் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகிறேன். இதுபோன்ற ஒரு திரைப்படத்தின் ஒரு பகுதியாக மாறுவதன் மூலம் ரசிகர்களின் நம்பிக்கைக்கு மீண்டும் ஒரு முறை உண்மையாக இருந்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.